"மெஸ்ஸியின் பெயரைச் சொன்னதும் அவர்கள் என் தோள் மீது கை வைத்து எனது கையில் துப்பாக்கியை கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்" என்று 90 வயதான எஸ்டர் குனியோ கூறிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது தற்போது வரை நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் சாகும் வரை தங்களின் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதன் காரணமாக காசா நகரைச் சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை அந்நகரையே தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினருடன் செல்பி எடுத்துக்கொண்ட 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 90 வயதான எஸ்டர் குனியோவின் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலின் கிபுட்ஸ் நிர் பகுதியில் உள்ள அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரது குடும்பம் எங்கே என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த மூதாட்டி நான் மட்டும்தான் தனியாக இருக்கிறேன் என்று அவரது மொழியில் கூறியுள்ளார். அந்த மூதாட்டிக்கு ஆங்கிலம் தெரியாததால், அவர்கள் அந்த மூதாட்டியிடம், "எந்த மொழியில் பேசுகிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு மூதாட்டி அர்ஜெண்டினாவின் ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு, "அர்ஜெண்டினா என்றால் என்ன?" என்று அவரிடம் கேட்டுள்ளார்.
"நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர்" என மூதாட்டி கூற, அதை கேட்டதும் அவர்களில் ஒருவர் மூதாட்டியின் தோளில் கையை வைத்து, அவர் துப்பாக்கியை மூதாட்டியிடம் கொடுத்துட்டு, செல்பி எடுத்து கொண்டுள்ளார். இந்நிகழ்வு குறித்து கூறியுள்ள மூதாட்டி, "மெஸ்ஸியின் பெயரை கூறியதால் காப்பாற்றப்பட்டேன்” என்று நெகிழ்ச்சியடைகிறார்.
- அ.சரண்.