Japan
Japan timepass
Lifestyle

Japan : பன்னிரண்டு பேரால் ஏவப்பட்ட ராக்கெட் - புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய சோகம்!

டைம்பாஸ் அட்மின்

ஜப்பானைச் சேர்ந்த ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் நிறுவனம், மார்ச் 13 ஆம் தேதி ஏவிய ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறியுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்பேஸ் ஒன். இது 18 மீட்டர் உயரம் கொண்ட சிறிய ரக ராக்கெட்டான கைரோஸை தயாரித்து வந்தது. ஜப்பான் அரசின் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை, அதன் மூலமாகக் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். பிற துறைகளில் ஜப்பான் அசுர வளர்ச்சியைக் காட்டினாலும், விண்வெளித் துறையில் இப்போது தான் கால்பதிக்கத் தொடங்கியுள்ளது.

அதன் பொருட்டே இந்த விண்கலம் குறைந்த செலவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகப் பிற விண்கலங்களுக்குப் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் அல்லாமல் திட எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த கைரோஸ் விண்கலம் காலை சரியாக 11.1 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. விண்ணில் பாய்ந்த சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இதன் ஏவலானது முழுவதும் தானியங்கிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Japan

அதாவது வெறும் பன்னிரண்டு தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெடித்துச் சிதறியதற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த ஸ்பேஸ் ஒன் நிறுவனம் விண்வெளியிலிருந்து பூமிக்கு கொரியர் சர்விஸ் போல ராக்கெட்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றும் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

- மு. இசக்கிமுத்து.