Ger home Mongolia Timepass
Lifestyle

Mongolian Gers: உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகும் நாடோடி வீடுகள்!

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நடுவில் அமைந்திருக்கும் நாடு மங்கோலியா. உலகில் கீரின்லாந்திற்கு அடுத்தப்படியாக, பெரிய நிலப்பரப்பையும் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடு. அதாவது இந்நாட்டில் சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பேர்கள் மட்டுமே வசிக்கின்றார்கள். இந்நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அதன் தலைநகரான உளன் பாதாரில் வசிக்கிறார்கள். 30 சதவீத மக்கள் நாடோடி வாழ்வை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மங்கோலியாவின் பாரம்பரிய வீடுகளான கெர்(GER) என்ற வாழ்விடத்தில் வசிக்கிறார்கள். இந்த வீடுகளை அரை மணி நேரத்திற்குள் கழற்றி தங்கள் ஒட்டகங்களின் மீது ஏற்றி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். பின் அங்கு பழையபடி வீட்டை அமைத்துக் கொள்கிறார்கள். கூடாரம் போன்ற வடிவில் உள்ள இந்த வீடுகள் மரங்களாலும் செம்மறி ஆட்டின் கம்பளிகளாலும் கட்டப்படுகிறது. இவை எளிதில் பிரித்துக் கட்டக் கூடியதாக இருக்கிறது. இந்த வீட்டினை ஓரிடத்தில் கட்டமைக்க 2 முதல் 3 மணி நேரங்கள்தான் ஆகின்றது. வீட்டுக்குள் உலகத் தொடர்புச் சாதனங்களை வைத்திருக்கிறார்கள். அதை 'இன்ஸ்டால்' பண்ணத்தான் ஒரு மணிநேரம் ஆகிறது என செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்போது சோலார் பேனல்களையும் சுமந்து சென்று இன்ஸ்டால் செய்வதால் மின்சாரப் பிரச்னையையும் அந்த வெப்பம் தாங்கிய கோபி பாலைவனத்தைச் சமாளிக்கிறார்கள்.

inside ger

நாடோடிச் சமூகத்தினரான மங்கோலியர்கள் தங்களுக்கென தனியாக சொந்த நிலம் வைத்துக் கொள்வதில்லை. கெர் வீடுகளே இவர்களுக்கு சொந்த வீடுகள். இன்று இவர்கள் கெர் அமைக்கும் இடமே இவர்கள் நிலம்.  'இன்று இருக்கும் இடம் நிரந்தரமில்லை. நாளை இருக்கப்போகும் இடமும் நிரந்தரமில்லை!' என்று தத்துவ முத்துக்களை உதிர்க்கிறார்கள் மங்கோலியர்கள். 

இந்த மினிமலிஸ்டிக் லைஃப் ஸ்டைல் உலகம் முழுவதும் பாப்புலராகி வருவதால் நிறையபேர் மங்கோலியர்களின் 'கெர் ஸ்டைல்' வீடுகளை தங்கள் நாடுகளில் அறிமுகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஐரோப்பாவில் இருக்கும் பல நட்சத்திர ஓட்டல்கள் தங்கள் பேக்கேஜில் ' நாடோடி வாழ்க்கை வேணுமா...மங்கோலியன் கெர் ஸ்டைல் வீடு வேணுமா?' என கூவிக்கூவி கல்லா கட்டுகின்றன. அந்த அளவுக்கு கிராக்கி ஆகிவிட்டது இந்த கெர் வீடுகளுக்கு!

 நமக்கும் இப்படி ஒரு வீடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?

- தி.பெருஞ்சித்திரன்