மாதத்தில் 4-வது சனிக்கிழமை புத்தகப்பை தேவையில்லை, தெலுங்கானா அரசின் புதிய திட்டம்!
தெலுங்கானாவில் மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு முதல், மாதத்தின் 4-வது சனிக்கிழமையன்று புத்தகப் பையை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் "நோ பேக் டே" என்று பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் புத்தகப் பைகளை பெற்றோர்களாலே தூக்க முடியவில்லை. நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் என கிலோ கணக்கில் எடையுள்ள பைகளை பள்ளிக்கு பிள்ளைகளாலும் தூக்கிச் செல்ல முடியாமல், குனிந்தபடி எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்போம்.
அதனால், தெலுங்கானா அரசு இந்தக் கல்வியாண்டிலிருந்து பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு முதல், மாதத்தின் 4-வது சனிக்கிழமை புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.
ஜூன் 12, 2023 முதல், ஏப்ரல் 23, 2024 வரையில் நடைபெற இருக்கும் பள்ளிக் கல்வியாண்டு நாள்காட்டியை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. அதில் வருடத்தில் 10 நாள்கள் வரை `நோ பேக் டே நாள்கள்' குறிக்கப்பட்டு அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. புத்தகம் இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நாள்களில் வாசிப்பு, யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.
இந்த "நோ பேக் டே" குறித்து தெலுங்கானா மாநில கல்விச் செயலாளர் கூறியபோது, ``அனைத்து பள்ளி நாள்களிலும் புத்தகப் பையின் எடையைக் குறைக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சுமையை பூர்த்தி செய்வதற்கான அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதியாக `நோ பேக் டே' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.