இலங்கை கிரிக்கெட் அணியின் சூப்பர் ரசிகரும், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரால் 'அங்கிள் பெர்சி' என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த பெர்சி அபேசேகர, உடல் நலக்குறைவால் கொழும்புவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 87.
இவரின் இலங்கை அணியுடனான கிரிக்கெட் பயணம் 1979 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடங்கி 44 வருடங்களுக்கு பிறகு தற்போது 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் நிறைவுபெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளரான பெர்சி அபேசேகர, இலங்கை அணி விளையாடும் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கு, உலகம் முழுவதும் பயணம் செய்து இலங்கை அணிக்காக ஆதரவாளித்து வந்தார். ஆனால், இவரின் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது நடைப்பெற்று வரும் உலகக் கோப்பைக்காக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம், அங்கிள் பெர்சியின் மருத்துவச் செலவுக்காக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்எல்சி) ரூ.50 லட்சம் வழங்கியது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அபேசேகரவை கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார். மேலும், இவரின் இரங்கல் செய்தியை கேள்விப்பட்ட பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ராசிகர்கள் உட்பட்ட சமூக ஊடகங்களில் அங்கிள் பெர்சியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
“எங்கள் அன்பான அங்கிள் பெர்சி காலமானதை நான் மிகவும் வருத்தத்துடன் கேள்விப்பட்டேன். நீங்கள் தான் என்னுடைய முதல் சூப்பர் ரசிகன். எங்கள் அனைவருக்கும் நீங்கள் எப்போதும் ஸ்பெஷலாக இருப்பீர்கள்” என்று ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்தார்.
“எனது அறிமுகத்திலிருந்து எனது கடைசி ஆட்டம் வரை பெர்சி அங்கிள் ஒரு நிலையான ரசிகனாக இருந்தார். இலங்கையில் விளையாட்டுக்கு அவரது ஆதரவு அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் சமமாகவே இருக்கும். அவரது ஆற்றல், அவரது ஆர்வம், அறிவு ஆகியவற்றை இழக்கிறோம் " என்று சங்ககார இரங்கல் தெரிவித்தார்.
"RIP பெர்சி அங்கிள் .. இந்த விளையாட்டை சிறப்பாக்குவது ரசிகர்கள் தான் .. நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் உண்மையான ரசிகராக இருந்தீர்கள் .. எங்களுக்கும் மிகவும் அன்பானவர் .. நாங்கள் உங்களை இழந்திருக்கிறோம்" என்று ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்தார்.
"அங்கிள் பெர்சியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இலங்கை கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர் இப்போது இல்லை. இலங்கை தோல்வியடைந்தாலோ அல்லது வென்றாலோ, அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார். இந்திய அணி அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளது." என்று பதான் இரங்கல் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அபேசேகர குறித்து வெளியிட்ட பதிவில், “பெர்சி அபேசேகர தனது தொடர்ச்சியான ஆரவாரத்துடன் மைதானத்தில் ஒவ்வொரு கணத்தையும் ஒளிரச் செய்த ஆற்றல் மிக்க மனிதனாக இருந்தார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது வலுவான தொடர்பை வளர்த்துக் கொண்டார். அவருடைய பிரசன்னம் மிகவும் மிஸ் செய்யப்படும்." என்று பதிவில் தெரிவித்தது.
தற்செயலாக, தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பையில் இலங்கை விளையாடும் நாளில் அபேசேகரவின் மரணம் ஏற்பட்டது. மேலும் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
- மு.குபேரன்.