Korea timepass
Lifestyle

South Korea: சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? - கொரியா நடத்தும் சும்மா இருக்கும் போட்டி!

டைம்பாஸ் அட்மின்

இன்றைய நவீன காலகட்டத்தில் ‘சும்மா தான் இருக்கேன்’ என்று சொன்னால் கூட கையில் ஃபோன் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம், யூடியூப், என்று எதையாவது பார்த்துக் கொண்டோ அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள். ஆனால், வடிவேலு சொன்ன மாதிரி யாருமே நிஜமாகவே ‘சும்மா’ இருப்பதை ஏதோ தரக் குறைவாக நினைக்கிறார்கள்.

உலகில் என்னென்னவோ போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தென்கொரியா வித்தியாசமாக “ஸ்பேஸ்- அவுட்” என்ற போட்டியை நடத்தியது. அதாவது 90 நிமிடங்கள், எந்த வேலையும் செய்யாமல், தூங்காமல், ஃபோன் பார்க்காமல், அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு தானே என்று ஈசியாக எண்ணிவிட முடியாது. போட்டியாளர்களின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது.

மேலும் பார்வையாளர்களால் வாக்களிக்கப்பட்ட முதல் 10 போட்டியாளர்களில் யாருக்கு நிலையான இதய துடிப்பு இருந்ததோ அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். மேலும் இப்போட்டி வீக் - எண்ட் நாட்களில் நடத்தாமல், வாரத்தின் பிஸி நாட்களில் தான் நடைபெறும். 

2014ஆம் ஆண்டு இந்த போட்டி வூப்சாங் என்ற ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்டால் தொடங்கப்பட்டது. “நான் ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும், எப்பொழுதும் என்னைவிட அதிகமாக வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வேன். வேலை செய்யாமல் இருந்தால் அது மிகவும் தவறு என்று நினைத்து என்னை நானே வருத்திக் கொள்வேன். ஆனால் என்னை நானே அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது தான் மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தேன். நமக்கென்று சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்,” என்று வூப்சாங் கூறியிருந்தார்.

அதிக நேரம் வேலை பார்த்துக்கொண்டே இருப்பதால் பலரும் ஸ்ட்ரெஸ், டென்ஷன் என பல மனநல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு இடைவேளை தேவைப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்போட்டியை துவக்கியுள்ளார். “பணமோ, டெக்னாலஜியோ இல்லாமல், ‘சும்மா’ இருப்பதையே ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் கூறினார். 

இந்த ஆண்டு மே 15ஆம் தேதி தென்கொரியாவில் தலைநகரான சியோலில் நடைபெற்ற போட்டிக்கு கிட்டதட்ட 4,000 போட்டியாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 117 போட்டியாளர்கள் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை பங்கேற்றுள்ளனர். 5 முறை ஒலிம்பிக்கிற்கு முயற்சி செய்து இரண்டு முறை வெள்ளி பதக்கம் வென்ற க்வாக் யூன் ஜீ- யும் இம்முறை போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை வென்றுள்ளார்.

“நான் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதற்கு ஐந்து முறை முயற்சி செய்துள்ளேன். எனக்கு சரியான தூக்கமும் ஓய்வும் இருந்ததில்லை. இந்த இடத்தில் என்னுடைய உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கிடைக்கும் என்பதால் நான் இப்போட்டியில் கலந்துக் கொண்டேன்” என்றார். 

நம்ம ஊருலையும் இப்படி ஒரு போட்டி நடத்தினா நல்லாதான் இருக்கும்!

- ர. பவித்ரா.