Rinku Singh
Rinku Singh timepass
Lifestyle

Rinku Singh : பேட்டா பீரங்கியா? - அதிரடி நாயகன் ரிங்கு சிங்கின் கதை!

டைம்பாஸ் அட்மின்

ஐபிஎல் முதல் சர்வதேச டி20-கள் வரை பெரிய அணிகள் முதல் சிறிய அணிகள் வரை தன் பேட்டிங்கின் மூலம் பதறவிடும் உத்தரபிரதேச இளைஞர் ரிங்கு சிங்.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏழ்மை குடும்பத்தில் கான்சந்திரா சிங் மற்றும் வினா தேவி தம்பதிக்கு மகனாக அக்டோபர் 12, 1997 ஆம் ஆண்டு பிறந்தார். குடும்பத்தின் மூன்றாவதாக பிறந்த ரிங்கு சிங் அவரது குழந்தை பருவத்தை எல்பிஜி விநியோக நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் கழித்தார்.

இவரின் குடும்பம் பெரியது என்பதால் அவரின் தந்தை செய்யும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் வேலையை வைத்து அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அவரின் சகோதரர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனராக தந்தைக்கு பக்கபலமாக இருந்தார்.

இவர் நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வந்தார். அப்போது முதல் முறையாக பள்ளியில் நடந்த  கிரிக்கெட் போட்டியில் லெதர் பந்தில் விளையாடினார். அந்த போட்டியில் 32 பந்துகளுக்கு 52 ரன்கள் குவித்த ரிங்கு சிங், பெரிய கிரிக்கெட் வீரராக சாதிக்க வேண்டும்  என்று தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். ஆனால் கிரிக்கெட் விளையாட பணம் இல்லாததால் பலமுறை பெரிய போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளார்.

மேலும் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல், தந்தையின் பேச்சை கேட்காமல் கிரிக்கெட்டிற்காக பலமுறை தந்தையிடம் அடிவாங்கினார். அப்போது வேலை கிடைக்காமல் இருந்த ரிங்குவிற்கு தூய்மைப்பணியாளராக சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிரிக்கெட் மேலிருந்த ஆர்வத்தால் அந்த வேலையை தவிர்த்து கிரிக்கெட்டை தொடர்ந்தார்.

அந்நேரம் அலிகார் மாவட்டத்தில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடர் நாயகனுக்கான விருதில் ஒரு பைக் வென்றார். அதன் மூலம் கிரிக்கெட்டின் மேல் இருந்த ரிங்குவின் ஆர்வத்தை உணர்ந்த தந்தை ரிங்குவை முழு நேரம் கிரிக்கெட் விளையாட அனுமதித்தார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இரண்டாம் சுற்றுக்குகூட முன்னேறாமல் வெளியேறினார். அதன் பின் ரிங்கு சிங்கின் நெருங்கிய நண்பர் ரிங்கு சிங் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்தார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு தனது 16 வயதில் உத்தர பிரதேசத்திற்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அறிமுகமானார். அந்த போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் என்பது ரிங்கு சிங் எடுத்த 83 ரன்கள் தான். அதே ஆண்டில் ரஞ்சி டிராபி மூலம் உத்தரபிரதேச அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் கால்தடம் பதித்தார். அதன் மூலம் ரிங்குவிற்கு சுரேஷ் ரெய்னாவிடம் அறிமுகம் கிடைத்தது. ரிங்குவின்  ஆட்டத்தை பார்த்து வியந்த சுரேஷ் ரெய்னா ரிங்குவிற்கு கிரிக்கெட் விளைடயாடுவதருக்கு உதவியதுடன், ரிங்குவின் குடும்பத்தின் பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்தார்.

மேலும் சுரேஷ் ரெய்னாவின் அறிவுரைகளை பின்பற்றிய ரிங்கு, நான் சுரேஷ் ரெய்னாவை எனது அண்ணாவாக தான் பார்க்கிறேன் என்றார். ஐபிஎல்லில் இவரை 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி 10 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால் அந்த வருடம் ரிங்குவிற்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு 2018-19  ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் குரூப் ஸ்டேஜ் முடிவில் 9 போட்டிகளில் 803 ரன்களை சேர்த்து, அந்த தொடரில் அந்த அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்தார். அந்த தொடரின் முடிவில் 10 போட்டிகளின் முடிவில் ரிங்கு சிங் 953 ரன்களை குவித்தார். அடுத்து 2019 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 லட்சத்துக்கு ரிங்குவை வாங்கியது. அந்தத் தொடரில் 4 போட்டிகள் விளையாடிய ரீங்கு சிங் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அதே நேரத்தில் ரிங்குவிடம் ஹிட்டாருக்கான திறன் இருப்பதால் மீண்டும் அடுத்த சீசனில் ரீட்டைன் செய்ய முடிவு செய்தார் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர். அதனால் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலேயே விளையாடினார். அந்த சீசனில் பாதி போட்டிகள் மட்டுமே விளையாடிய ரிங்கு சிங் காயம் காரணமாக சீசனை விட்டு வெளியேறினார். இருப்பினும் தனது வீட்டிலேயே வைத்து பயிற்சி அளித்தார் அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர்.

சீசன் முடிந்தும் அடுத்த சீசனுக்கு தொடர்ந்து ரிங்குவை தயார்படுத்தினார் அபிஷேக் நாயர். அதன்பிறகு உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக கொல்கத்தா அணியில் விளையாட ஆர்வமாக இருந்தார். அந்த தொடரில் கொல்கத்தா அணி தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. பிறகு அடித்து ஆடும் ஆல் ரவுண்டர் இருக்க வேண்டும் என்று நினைத்த கொல்கத்தா அணி, குஜராத் அணியினுடனான போட்டியில் ரிங்குவை களம் இறக்கியது. 

அந்தப் போட்டியில் 25 பந்துகளில் 35 ரன்கள் அடித்ததன் மூலம் தனது பேட்டிங்கினால் அணியின் நம்பிக்கை பெற்றார். அடுத்து நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினுடனான போட்டியில் 23 பந்துகளில் 43 ரன்கள் அடித்ததன் மூலம் அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். அடுத்து 2023 ஆம் ஆண்டும் ரிங்குவை ரீட்டைன் செய்தது கொல்கத்தா அணி.

அந்த சீசனில் குஜராத் அணியுடன் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204  ரன்கள் அடித்தது, பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 14 ஓவர்களில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறியது, அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங், நன்றாக சென்று கொண்டிருந்த போட்டியில் 17 வது ஓவரில் ரஷீத் கான் ஹார்டிக் கிரிக்கெட் எடுத்தார்.

அதன்பின் 8 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 19வது ஓவரின் கடைசி இரண்டு பந்தில் ஒரு 6 மற்றும் ஒரு 4 அடித்தார். அதன் மூலம் 6 பந்துகளில் ஓவரில் 29 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற நிலையில், 20வது ஓவரில் முதல் பந்தில் சிங்கிள் வைத்தார் உமேஷ் யாதவ், அதன் பிறகு தொடரந்து  5 சிக்ஸசர்கள் அடித்ததன் மூலம் கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார் ரிங்கு சிங். அந்தப் போட்டிக்கு பிறகு அனைத்து அணியின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தர். மேலும் பல கிரிக்கெட் ஜாம்பவன்களின் பாராட்டை பெற்றார்.

மேலும் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் அடித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன் பின் உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு இடையான டி20 தொடரில் இக்கட்டான சூழ்நிலையில் அணியின் வெற்றிக்கு உதவினார்.

அந்தத் தொடருக்கு பிறகு பேசிய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், ரிங்குவின் ஆட்டம் எனக்கு தோனியை நினைவுபடுத்துகிறது என்றார். மேலும் அண்மையில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு இடையான 2வது டி20 39 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

- மு.குபேரன்.