கேப்டன்கள்னா பொதுவா, பிளேயர்கள பேக் பண்றது, பிளேயர்களுக்கு ஒன்னுனா, முதல் ஆளா சப்போர்ட்டுக்குப் போறது, தனக்குனு ஒரு அணியை கட்டமைச்சு, அதில் மெதுவாக ஓடுற குதிரையை எல்லாம், வேகமாக ஓட வைக்கிறதுன்னு, பல குவாலிட்டிகளைப் பார்த்திருப்போம், தோனி, கோலி, மார்கன்னு பலரோட ரூபத்துல. ஆனால், இத எல்லாம் 90கள்லயே, அசால்டா செஞ்சவர், ரணதுங்கா.
ஜெயசூர்யாவை ஓப்பனரா புரமோட் பண்ணி அடிச்சு ஆடவச்சு எதிரணிய துவம்சம் பண்ணாருனா விக்கெட் கீப்பர் கலுவித்ராணாவ Pinch Hitterஆக மாத்துனாரு. அட்டபட்டுவை பேக் பண்ணி பெரிய பேட்ஸ்மேனா ஷேப் பண்ணாரு. வாஸ், தர்மசேனா, உபுல் சந்தனாவை எல்லாம் பெரிய பௌலர்களா மாத்துனாரு. ஆக இலங்கை ஒட்டுமொத்தமா ஒரு அணியா இணைஞ்சு விளையாடவே இவருதான் காரணம்.
முதல்ல எடுத்ததும் அடிச்சு நொறுக்கிடனும்ன்ற அவரோட பாணியதான் இப்பவும் கிரிக்கெட் உலகம் பவர்பிளே ஓவர்கள்ல ஃபாலோ பண்ணிட்டு இருக்கு. இது எல்லாத்தையும் விட பெரிய தக்லைஃப் மொமெண்ட்கள இலங்கை கிரிக்கெட்டுக்கு காட்டுனதாலதான் அவரு இன்னைக்கும் கொண்டாடப்படறாரு.
96 உலகக்கோப்பைல இலங்கைல இருக்க பிரச்சினைகளால அங்க போய் ஆடமுடியாதுன்னு ஆஸ்திரேலியா மறுத்தப்போ, அதுக்கு ரணதுங்காவோட பதில் என்ன தெரியுமா?! "பரவால்ல, நாங்க அவங்கள ஃபைனல்ல மீட் பண்ணிக்கறோம்னு சொன்னாரு. இதுக்காக பலரும் அவர கிண்டலடிச்சாங்க. ஆனா தன்னோட டீமை கண்ணி வெடியா செட் பண்ணி எந்த எதிரணி வந்து மோதினாலும் பெரும் சேதாரத்த சந்திக்க வச்சு, சொன்ன மாதிரியே ஃபைனல்ல ஆஸ்திரேலியாவ மீட் பண்ணவும் செஞ்சாரு, கோப்பையையும் தூக்குனாரு.
ரணதுங்கா வெர்ஸஸ் வார்னே பனிப்புயல் பலதடவ வீசியிருக்கு. 96 உலகக்கோப்பை ஃபைனல்ல வார்னேவை வச்சு செஞ்சதுல ஆரம்பிச்சு பல சந்தர்ப்பங்கள்ல அந்த எண்கவுண்டர் நடந்துருக்கு. வார்னேவே பலமுறை அவரைப் பிடிக்காதுனு ஓப்பனாவே சொல்லியிருக்காரு. ஏன்னா ஆஸ்திரேலிய மசாலாவான attitude-ன் டேஸ்ட அவங்களுக்கே திரும்பக் காட்டுனவரு ரணதுங்கா.
வார்னே ஒருதடவ ரணதுங்கா ஓவர் வெய்டா இருக்கறத வச்சு அவர மட்டம்தட்டனும்னு, "அவரு முழு ஆட்டை முழுங்கிருப்பார்னு நினைக்கறேன்"னு நக்கலடிக்க பதிலுக்கு ரணதுங்கா, "அட்லீஸ்ட் நான் அவர மாதிரி மாத்திரைகள முழுங்கிட்டு அம்மா மேல பழிய போடலீயே"னு பதிலுக்கு அவர் ஊக்கமருந்து சோதனைல சிக்குனதப் பத்திக் கிண்டலடிச்சாரு.
இதெல்லாம் விட உலக கிரிக்கெட்டுக்கே, மாபெரும் ஆஃப் ஸ்பின்னர் கிடைக்கக் காரணமா இருந்தவரு ரணதுங்கா. ஆஸ்திரேலிய அம்பயர்கள், தொடர்ந்து முரளிதரன் மீது, பந்தை த்ரோ பன்றார்ன்னு குற்றச்சாட்டு வச்சப்ப, அசராமல், "அவன் அப்படித்தான் பௌலிங் போடுவான், இஷ்டம்னா மேட்ச் ஆடுறோம், இல்லையா கிளம்புறோம்"னு சொன்ன அந்தத் தோரணைக்கே, ரணதுங்காவை காலம் ஃபுல்லா கொண்டாடலாம்.
பிசிசிஐ-க்கு சப்போர்ட் பண்ணுதுன்னு ஐசிசிய பல்லில்லாத புலினும் கேலி பண்ணுனாரு. இலங்கைல தோனிக்கு அவங்க நாட்டு வீரர்களுக்கு இருக்குறதவிட அதிகமான ரசிகர்கள் இருக்காங்கன்னும் வெளிப்படையாவே ஸ்டேட்மெண்ட் விட்டாரு. தன்னோட தனித்தன்மைய இழக்காம மனசுல தோன்றத சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பாரு.
90-ஸ் பார்த்த தக்லைஃப் கிரிக்கெட்டர்கள்ல ரணதுங்கா மிகமுக்கியமான மறக்க முடியாத மாஸ் ஹீரோ.