Trichy  Trichy
Lifestyle

Trichy : தங்கத்தினால் நெய்த 7 லுங்கிகள் - 'அயன்' சூர்யாவை மிஞ்சிய கடத்தல் கில்லாடி !

லுங்கிகளின் வண்ணம் வித்தியாசமாய் இருப்பதால் சந்தேகம் வந்தது. மெட்டல் டிடெக்டரை வைத்து பரிசோதனை செய்தபோது மாட்டிக்கொண்டார்கள். சாமர்த்தியமாக நூல் மாதிரி தங்கத்தை மாற்றி கைலியாக நெய்திருக்கிறார்.

டைம்பாஸ் அட்மின்

அண்மையில் துபாயில் இருந்து வந்த பயணியை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது ரூபாய் 16.64 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தினால் நெய்த 7 லுங்கிகளை பறிமுதல் செய்தனர்.

24 மணி நேரம் ஒரு பெரிய டீம் போட்டு பிரித்தெடுக்கும் பணிக்குப் பிறகு அந்த லுங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்தனர்.

தங்கக் கடத்தல் பற்றி உளவுத்துறைக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் தங்கம் எங்கு பதுக்கப்பட்டிருக்கிறது எனக் கண்டுபிடிக்கத் திணறியதாம் சுங்கத்துறை. மிகத் தீவிரமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

"ஆரம்பத்துல எங்களுக்கு எந்த தடயமும் கிடைக்கலை. லுங்கிகளின் வண்ணம் வித்தியாசமாய் இருப்பதைப் பார்த்து சந்தேகம் வந்தது. மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளை வைத்து பரிசோதனை செய்தபோது மாட்டிக்கொண்டார்கள். மிகவும் சாமர்த்தியமாக நூல் மாதிரி தங்கத்தை மாற்றி கைலியா நெய்து கொண்டு வந்திருந்தார்." என்று சொல்கிறார் மூத்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுங்கச் சட்டப் பிரிவு 110ன் கீழ் மீட்கப்பட்டது என்றும், சுங்கச் சட்டத்தின் 104 பிரிவின்படி பயணி கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரப்பூர்வமாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

அயன் சூர்யாவையே மிஞ்சிய ஆசாமியை நினைத்து இன்னும் எப்படியெல்லாம் கடத்தல் செய்வானுகளோ என வியர்த்துக் கிடக்கிறது சுங்கத்துறை!

- அ. சரண்.