Twitter Twitter
Lifestyle

Twitter : 'பணம் தரோம். பாஸ் போடுங்கனு சொல்லுவாங்க' - ட்விட்டரில் புலம்பும் ஆசிரியர்கள் !

இன்னொருவர், ''இது காலங்காலமா நடந்து வருகிறது. மாணவர்கள் பணத்தோடு சேர்த்து தொலைபேசி எண்ணும் எழுதிவிடுவார்கள், பாஸானால் இன்னும் நிறைய பணம்! என்ற வாக்குறுதியோடு!'' என்கிறார்.

டைம்பாஸ் அட்மின்

மாணவர்கள் தேர்வை சரியாக எழுதாமல் விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை வைத்து, வினாத்தாள் மதிப்பீடாளர்களுக்கு லஞ்சம் தரும் சம்பவங்களை சினிமாக்களில் தான் பார்த்திருக்கிறோம்.

சமீபத்தில் இந்திய காவல்துறை அதிகாரி, அருண் போத்ரா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் விடைத்தாளில் நூறு, இருநூறு, ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், 'ஒரு ஆசிரியர் எனக்கு அனுப்பிய புகைப்படம் இது. மாணவர்கள் பாஸ்மார்க் போடச் சொல்லி இதை வைத்திருக்கிறார்கள். இந்தச் செயல் நமது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறையின் நிலையைப் பற்றி அப்பட்டமாகக்  கூறுகிறது!' என்று சொல்லியிருக்கிறார். 

இந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில் எக்ஸ் பயனாளர்களிடம் ஒரு விவாதத்தைத் தூண்டியது. பல ஆசிரியர்கள் இதே போன்ற தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், ''எனக்கும் இதுபோன்று மூன்று முறை நடந்தது... இன்னும் வேண்டுமானாலும் தருகிறேன். எப்படியாவது பாஸ் ஆக்கிவிடுங்கள் ஐயா என்று எழுதியிருந்தார்கள்'' என்கிறார்.  அவரது சக நண்பர் சொன்ன நாஸ்டால்ஜியா விஷயம் வித்தியாசமாய் இருந்தது. ''20 ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட நிகழ்வு எனக்கும் நடந்தது. அப்போதெல்லாம் குடும்பத்தின் வறுமை, சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் எழுதும் சிலர் விடைத்தாள்களில் காசையும் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் பெயிலாகி விடுவார்கள்!" என்கிறார்.

இன்னொருவர், ''இது காலங்காலமா நடந்து வருகிறது. மாணவர்கள் பணத்தோடு சேர்த்து தொலைபேசி எண்ணும் எழுதிவிடுவார்கள், பாஸானால் இன்னும் நிறைய பணம்! என்ற வாக்குறுதியோடு!'' என்கிறார்.

மேலும் ஒருவர், ''ஒரு சில விடைத் தாள்களில், சார்/ மேடம் எனக்கு பாஸ் மார்க் போடுங்க, என்றே விடை எழுதத் தொடங்குவார்கள். இது ஆர்வம் இல்லாத மாணவர்களை படிப்பிற்கு தள்ளும் கல்வி முறையை பற்றிக் கூறுகிறது" என்கிறார்.

மற்றும் ஒருவர், "இது கல்வி முறைக்கு அப்பாற்பட்ட விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறது, நம் நாட்டில் பணத்தால் செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இல்லை என்று அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது" என்கிறார்.

எது எப்படியோ, இந்தியா முழுவதும் இருக்கும் தேர்வாளர்கள் தினமும் இது போன்ற வினோதமான விளக்கங்கள், லஞ்சங்கள் மற்றும் வேண்டுகோள்களை எதிர்கொண்டு தான் இருக்கிறார்கள்.

- பா.சையத் சஜானா.