தமிழ் சினிமாவுல இப்போல்லாம் நாலு படத்துல காமெடியனா நடிச்சிட்டா போதும் உடனே கட்டவுட்டுக்கு பால் ஊத்தி பஞ்சாமிர்தம் தடவுறதுக்கு சொந்த செலவுல ஆள் செட் பண்ணிடறாங்க. காமெடியனா நடிச்சமா, பொழப்பு நல்லா போயிட்டு இருக்குன்னு இல்லாம ராத்திரி காமெடியனா பாத்துட்டு, காலைல கண்ண தேச்சிகிட்டு முழிச்சுப் பாக்குறப்போ, நைட் பாத்த அதே காமெடியன் ஹீரோவா அவதாரம் எடுத்து நிப்பார். ’இது என்னாடி கூத்து..?’ ங்க்கிற மாதிரி காமெடியன்கள் திடுதிப்புன்னு ஹீரோவான மேட்டர்தான் இது.
1 . பழைய சந்திரபாபு காமெடியனா சக்கைபோடு போட்டவரு. படத்துல முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கிறதோட, ஆடுறது பாடுறதுன்னு அதகளம் பண்ணிட்டு இருந்தாரு. அவரோட சோக, ஜாலியான பாடல்கள் இன்னைக்கு கேட்டாலும் செமையா இருக்கும். வாழ்க்கைத் தத்துவத்தை பிழியப்.. பிழிய கொடுத்திருப்பாரு.
’ரத்தக் கண்ணீர்' படத்துல நடிப்பு வேற லெவல்ல இருக்கும். அப்போதான் ஹீரோ ஆகலாம்னு அவர் மண்டையில எந்த சைடுலேர்ந்து உதிச்சதோ தெரியல திடீர்னு ஹீரோவா நடிக்க ஆசை வந்துடுச்சி. ’கவலை இல்லாத மனிதன்’. ’குமார ராஜா’ ன்னு ரெண்டு படங்கள்ல ஹீரோவானாரு. அதுக்கு அப்புறம் ஹீரோவா யாரும் சான்ஸ் கொடுக்காததால மறுபடியும் காமெடியனாகிட்டாரு.
2 . வீ.கே. ராமசாமின்னு ஒரு பழம்பெரும் காமெடி நடிகர் இருந்தாரு. ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சி மக்கள் மனசுல பதிஞ்சவர் செவண்டி கிட்ஸ் எல்லாருக்கும் இவரை நல்லாத் தெரியும். இவரும் ’ருத்ரதாண்டவம்’ ஒரு படம். இப்போ வந்த ’ருத்ரதாண்டவம்’ மாதிரி பத்தோட பதினொன்னு அத்தோட இது ஒண்ணுன்னு இல்லாம.
உண்மையாவே கடவுள் பத்தின பக்தி அறியாமையையும், மூட நம்பிக்கையையும் ஒழிக்கிறதுக்காக புரட்சி செஞ்ச படம். சவுக்கடி வசனங்களால அந்த காலகட்டங்கள்ல பல சர்ச்சைகள கிளப்பின படம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கொண்டாடின படமாவும் இருந்துச்சி. அவர் ஹீரோ ஆனதுக்குப் பின்னாலும் நிறைய காமெடி கதாபாத்திரங்கள்ல நடிச்சாரு.
3 . யாராலும் மறக்க முடியாத மற்றுமொரு காமெடி நடிகர் நாகேஷ். பல்வேறு படங்களில் நகைச்சுவை காட்சிகள் மட்டுமின்றி குணசித்திரம், வில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கியவர். நிற்க நேரமில்லாமல் காமெடி கேரக்டர்களில் நடிச்சிட்டு இருந்த நாகேஷை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் இயக்குனர் கே.பாலசந்தர்.
தான் இயக்கிய முதல் படமான ’நீர்குமிழி’ படத்தின் நாயகன் நாகேஷ். தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்த நாகேஷ். திரும்பவும் காமெடி கேரக்டர்களில் பிஸியாகி தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவா நடித்தாலும் அவருக்கு இறுதி காலம் கை வரை கொடுத்து காப்பாத்தினது காமெடி வேஷங்கள்தான்.
4 . தற்போது ஹீரோ நமைச்சலில் இருப்பவர் நடிகர் சூரி. சிரம்மப்பட்டு பிடிச்ச காமெடி நடிகன்கிற இடத்தை தக்கவெச்சிக்கத் தெரியாம அவசரப்பட்டு ஹீரோவாகிட்டார். அதற்காக உடம்பை ’ஸ்லிம்’ மாக்கி நின்னாலும் காமெடியன்கிற தோற்றம் இன்னும் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருக்கு. இப்போ நிறைய காமெடி நடிகர்கள் புதுசு…புதுசா வந்துட்டு இருக்கிறதால.. சினிமாவுல தன்னை தக்கவெச்சிக்கணும்னு ஹீரோ ஆனதாவும் பேசிக்கிறாங்க.
நம்ம தமிழ் ரசிகருங்கள பத்தி தெரியாம இந்த முடிவுக்கு வந்துட்டாரோ என்னவோ. ஹீரோவுல கொஞ்சம் பிசிறு அடிச்சாலும் மொத்தமா காலி பண்ணிருவாங்க. நம்ம வடிவேலு ஹீரோவாகி வீட்டுல உட்காந்த கதை மாதிரி சூரிக்கும் ஆகிடக்கூடாது.
5 . சூரியாச்சும் லேட்டா ஹீரோவானார். ஆனா, சகலத்தையும் கரைச்சிக் குடிச்ச மாதிரி ’பில்டப் பில்கேட்ஸ்’ மாதிரி பீத்திக்கிற நடிகர் சந்தானம். காமெடில ஓரளவுக்கு நல்லா போயிட்டிருந்தப்போ திடீர்னு ஹீரோவாகிட்டார். ஹீரோவானாதான் அடிபொடிகள்கிட்ட அமவுண்டு கொடுத்து கட்டவுட்டுக்கு மாலை போட்டு மரியாதை பண்ண வெச்சிடலாம்னு நெனைச்சித்தான் நாயகனா தொபுக்குடீர்னு குதிச்சாரு.
ஹிட்டாகிட்டோம்னா நாப்பது, அம்பது கோடில சம்பளம் கேக்கலாம்னு ஆசைப்பட்டிருப்பாரு. ஆனா, அந்த ஆசை நிராசையாவே போயிடுச்சி. காமெடிக்கும் யாரும் கூப்பிடாம, ஹீரோவுக்கும் எந்த புரொடியூசரும் ஏமாறாம என்னடா இந்த சந்தானத்துக்கு வந்த சோதனைனு தினம் புலம்பிட்டு இருக்காரு. திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமாங்கிற யோசனை ஒரு பக்கம் ஓடிட்டும் இருக்குது.
6 . இப்போ ’பிரெஸ்ஸா’ களம் இறங்கி இருப்பவர் யோகிபாபு. காமெடியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மனுஷன் செம ‘பிஸி’. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாம போராடி இந்த இடத்துக்கு வந்திருக்கார் யோகி. அவரும் சில படங்கள்ல குறிப்பாக ’மண்டேலா’, ’ பொம்மைநாயகி’ மாதிரியான படங்கள சொல்லலாம்.
கதையிலும், கதாபாத்திரம் பத்தின புரிதலும் இருக்கிறதால ரொம்ப கவனமா கதை கேட்டு செலக்ட் பண்ணியே நடிக்க ஒப்புக்கிறார். ஒவ்வொரு படங்களும் ஜெயிக்கிறதோட, மக்களோட கவனமும் ஈர்ப்பதாவும் இருக்கு. அவ்வப்போது ஹீரோ சான்ஸ் வந்தாலும் ’நான் எப்போதும் காமெடியன்தான்’ ங்கிரதுல ரொம்பத் தெளிவா இருக்கார். மற்ற நடிகர்கள் மாதிரி கதாநாயகன்னு காலரைத் தூக்கிவிட்டுகிட்டு ஃபிலிம் காட்டுறதில்லை.
7 . காமெடி நடிகர் ’மிர்ச்சி’ சிவாவும் தன் பங்குக்கு அவ்வப்போது சில படங்கள்ல ஹீரோவாக நடிச்சிட்டு இருக்கார். ஆரம்ப கால படங்கள்ல நான்கு நண்பர்கள்ல ஒருத்தர், ஹீரோவோட பிரெண்டு, காதலுக்கு தூது போறதுன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருந்தவர்தான். ’தமிழ் படம்’ ஒரு மூலமா ஹீரோவா அறிமுகமானார்.
தமிழ் சினிமாவுல இருந்துகிட்டு, அதையே கலாய்த்துத் தள்ளிய படம்ங்கிறதால நல்லாருக்கு, நல்லா இல்லன்னு ரெண்டு விதமான விமர்சனங்களும் வந்துச்சி. அதுக்கப்புறம் தொடர்ந்து சில படங்கள்ல நடிச்சவர் அப்றம் காணாமலே போயிட்டார். நீண்ட் இடைவெளிக்குப் பின்னாடி இப்பதான் ஒரு சில படங்கள்ல நாயகனா நடிச்சிட்டு வர்றார். ’மிர்ச்சி’ சிவா.
- எம்.ஜி.கன்னியப்பன்.