தென்காசி நகரில் வெல்கம் காலனியில் உள்ள சாலையில் செல்பவர்கள், ஒரு வீட்டின் முன்பாக ஓரிரு நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டே கடந்து செல்கிறார்கள். அந்த வீட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அந்த வீடே குறுக்கு மறுக்காகக் கட்டப்பட்டிருப்பது தான் விசேஷம்.
சட்டெனப் பார்த்த மாத்திரத்தில், அடுக்கி வைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள் சறுக்கி விழுவது போல இருக்கின்றன. அந்த வீட்டைப் பார்ந்து வியந்து போகும் பார்வையாளர்கள், ”மேலே இருக்கும் ரூமுக்கு எப்படிப் போவாங்க..?” என்று வியந்து பார்க்கிறார்கள். அதோடு, அங்கு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதால் அந்த இடமே செல்ஃபி பாயிண்ட் போல மாறி வருகிறது.
அந்த வீட்டின் உரிமையாளர் ஷேக் சாகுல்ஹமீது வளைகுடா நாட்டில் வசிக்கிறார். பொறியாளர் ஜமால் முகமது அப்துல்லா என்பவர் கட்டியுள்ளார். வீட்டை டிசைன் செய்த ஜூபேர் நைனார் பேசுகையில், ”2000 சதுர அடியில் மூன்று படுக்கையறை கொண்டதாக உள்ள இந்த வீட்டின் சுவர்கள் ’ரேட் டிரேப் பாண்ட்’ முறையில் கட்டப்பட்டிருக்கு. ‘ஃபிட்டர் ஸ்லாப் சீலிங்’ போட்டிருக்கிறோம். அதனால் வழக்கமான வீடு கட்டுவதை விடவும் செலவு குறைவாக இருக்கும்." என்று கூறினார்.
மேலும், "அறைகளை சாய்வாக அமைத்திருப்பதால் ஒரு சதவிகித நிலம் கூட வீணாகாமல் கட்ட முடிகிறது. அதோடு சுவர்களுக்கு வழக்கமான வீடு கட்ட 100 செங்கல் தேவையான இடத்தில் இந்த முறையில் கட்டுவதற்கு 75 செங்கல் போதுமானது. அது போல சிமெண்ட், கம்பி உள்ளிட்டவையும் குறைவாகச் செலவிட்டால் போதுமானது. மேலும் நான்கு வீடுகளுக்கு டிசைன் செய்து கொடுக்குமாறு ஆர்டர் வந்திருக்கிறது” என்று சொல்லும் ஜூபேர் நைனார், "வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்” என்று நம்முடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்