Cricket Cricket
Lifestyle

Cricket: Wasim Jaffer - Michael Vaughan - காமெடி இரட்டையர்கள் | Epi 9

டாம் - ஜெர்ரி, செந்தில் - கவுண்டமணினு நிறைய காமெடி இரட்டையர்களைப் பார்த்துருக்கோம். ட்விட்டர்ல காமெடி இரட்டையர்களா தங்களோட ட்வீட் அட்டாக், கவுண்டர் அட்டாக்கால சிரிக்க வச்சுட்ருக்க ஜாஃபர் - வாகன்தான்.

Ayyappan

லாரல் - ஹார்டி, டாம் - ஜெர்ரி, செந்தில் - கவுண்டமணினு நாம ஹாலிவுட், அனிமேஷன், கோலிவுட்னு எல்லா இடத்துலயும் காமெடி இரட்டையர்களப் பார்த்துருக்கோம். டைமிங், உடலசைவுகள்னு தனித்தனியா சிரிக்க வச்சாலும் இரட்டையர்களா அவர்கள் தோன்றக்கூடிய காட்சிகள்ல ரசிகர்கள்கிட்ட சிரிப்பு வெடிச்சத்தம் இன்னமும் சத்தமாவே கிளம்பும்.

அந்தவகையில், ட்விட்டர்ல காமெடி இரட்டையர்களா தங்களோட ட்வீட் அட்டாக், கவுண்டர் அட்டாக்கால நம்மள சிரிக்க வச்சுட்ருக்க வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன்தான் இன்னைக்கு கலாய் கிரிக்கெட்டர்கள் மேடைக்கு வரப்போறாங்க.

பல சந்தர்ப்பங்கள்ல இந்த Banter-ல ஜாஃபர்தான் ஜெயிச்சிருக்காரு. ஜாஃபரோட பிறந்த நாளுக்கு, "என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்"னு வாகன் பதிவேத்த, பதிலுக்கு ஜாஃபர், "எனது நிரந்தர சமூக ஊடக விக்கெட்டிற்கு நன்றி"னு பதிலளிச்சாரு.

ஐபிஎல்ல பஞ்சாப் அணியோட பயிற்சியாளரா ஜாஃபர் நியமிக்கப்பட, பகுதிநேர பௌலரான தன்னோட பால்ல அவுட்டான ஒருத்தர பேட்டிங் பயிற்சியாளரா பார்க்கிறதுலாம் கொடுமையா இருக்குனு வாகன் வம்பிழுக்க, அதுக்கு ஜாஃபர் "பர்னால் உங்களோட வயிற்றெரிச்சல சரி பண்ணும்"னு நக்கலடிச்சாரு.

தனிப்பட்ட முறைல மட்டுமில்லாம இந்தியா - இங்கிலாந்து சம்பந்தப்பட்ட போட்டிகளோட முடிவுகள்லதான் இந்த மோதல் உச்சகட்டமடையும். ஒருமுறை இந்தியா 92 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக, ஒரு அணி 100 ரன்களுக்குள்ள ஆட்டமிழக்கறத நம்பவே முடியலனு வாகன் பதிவிட, பதிலுக்கு ஜாஃபர், அதே ட்வீட்டுக்கான பதிலா, ஆஷஸ்ல இங்கிலாந்து 68-க்கு ஆல்அவுட் ஆனதும் வாகனை டேக் பண்ணி வம்பிழுத்தாரு.

2021 உலகக்கோப்பையில, இந்தியாகிட்ட இங்கிலாந்து பயிற்சி ஆட்டத்துல தோத்துடுச்சு. இதப்பத்தி வாகன் எதுவுமே கருத்து சொல்லல. விடுவாரா ஜாஃபர்? இந்தப் போட்டியில முக்கியமா நடந்ததுனு தலைப்புப் போட்டு, "கேஎல் ராகுல், இஷானோட பேட்டிங், பும்ரா, அஷ்வின், ஷமியோட பௌலிங், வாகன் ஆஃப்லைன்ல இருக்கறது"ன்னு ஆரம்பிக்க, அதுக்கு வாகன், பீச்ல ரம் குடிச்சுட்டு இருந்தேன், அதோட இது பயிற்சி ஆட்டம்தானேனு சமாளிச்சாரு.

இன்னொரு தடவை வாகன், ஜூஸ் குடிச்சுக்கிட்டே, ஜாஃபர் டக்அவுட் ஆன ஸ்கோர்கார்டோட ஃபோட்டோவ காட்டி கேலி செஞ்சு ட்வீட் போட, ஜாஃபர், வாகன் பேட்டிங் பத்தி டிப்ஸ் கொடுக்கற வீடியோவ ஷேர் பண்ணி, "நான் இந்த மாஸ்டர் கிளாஸ் பேட்டிங் டிப்ஸ கேட்டுட்டுப் போயிருக்கக் கூடாது"ன்னு கலாய்ச்சு விட்டுட்டாரு.

கடந்தாண்டு ஜுன்ல நடந்த இந்தியா - இங்கிலாந்து இறுதி டெஸ்ட் போட்டியப் பார்க்க போயிருந்த ஜாஃபர், அந்த ஸ்டேடியம்ல இருந்து ஃபோட்டோ போட, வாகன், நான் உங்களோட விக்கெட்ட முதல்முறையா எடுத்ததோட 20-வது ஆண்டு விழாவக் கொண்டாட வந்தீங்களானு கேட்டாரு. அதுக்கு ஜாஃபர், 2007 டெஸ்ட் தொடர இந்தியா, 1/0ன்னு ஜெயிச்சு டிராபியோட போஸ் கொடுத்த ஃபோட்டோ போட்டு அதக் கொண்டாட வந்தேன்னு கலாய்ச்சாரு.

இவையெல்லாம் வெறும் சாம்பிள்தான். வாகனுக்கு ஜாஃபர், மீம் கிங்கா டெம்ப்ளேட், GIFs, வீடியோஸ்னு பலவகைலயும் பதிலடி கொடுத்துருக்காரு. ட்விட்டர் ரசிகர்களுக்கு தீனிபோடக்கூடிய காமெடி சரவெடிதான் ஒவ்வொன்னும்.

கலாய் கிரிக்கெட்டர் பட்டத்த சோலோவா ஜாஃபர் ஜெயிச்சாலும் அவருக்குக் கண்டென்ட் கொடுக்கறதுக்காகவும், ஸ்போர்டிவ்வா எடுத்துட்டு பதில் சொல்றதுக்காகவும் வாகனையும் சேர்த்தே பாராட்டலாம். டாம் இல்லைனா ஜெர்ரி இல்லையே....????