தரவுகளைப் பொய்யாக்கி தரணிய ஆள்றது ஒருவகையான கெத்துனா, இவன் இனி எந்திரிக்கவே மாட்டான்னு நம்மள புதைக்க முயலுறவங்க முன்னாடி எழுந்து, விஸ்வரூபம் காட்டி, தன்னோட சாம்ராஜ்யத்த அவங்க சமாதிமேலயே கட்டமைக்குறதுதான் உண்மையான தக்லைஃப் தருணம். அத 2016 டி20 உலகக்கோப்பைல டேரன் சமி செஞ்சு காட்டுனாரு.
பொதுவாகவே ஒரு உலகக்கோப்பைய வென்று தர்ற கேப்டனுக்கு அவர் சார்ந்த நாட்டுலயும் கிரிக்கெட் போர்டுலயும் ராஜ மரியாதை இருக்கும், அவங்களோட கருத்துக்களுக்கு தன்னையறியாம சில காதுகள் திறக்கும். அதற்கடுத்த ஐசிசி தொடர்ல அவங்க ஆடப்போறப்போ வாரியத்துட்ட அவங்க கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும்.
இதுதான் உலக வழக்கம். ஆனா 2012-ல மேற்கிந்தியத்தீவுகள் அணிய உலகக்கோப்பைய வெல்ல வச்ச சமிக்கு இது எல்லாமே தலைகீழா 2016 உலகக்கோப்பைல நடந்துச்சு. ஆல்ரவுண்டரான சமியோட பேட்டிங் பௌலிங் அந்த சமயத்துல சற்றே தேய்பிறை கண்டிருந்தாலும் கேப்டனா அவர் அவங்களுக்கு ஒளியேற்றிய முழுமதிதான். ஆனா எல்லா வகையிலயும் அவரு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார்.
கேளுங்கள் தரப்படும்ன்ற பாலிஸில நம்பிக்கை இல்லாத போர்டோட ஏற்பட்ட உரசல்கள் உக்கிரமா இருந்த சமயம். அதனாலயே சுனில் நரைன், பொல்லார்ட், பிராவோ மாதிரியான மேட்ச் வின்னர்ஸ் இல்லாம ஒரு முழுமையடையாத தனது அணியோடதான் கோதால குதிக்க சமி ஆயத்தமானாரு.
அந்தக் கேப்ல வாரியத்தோட வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பிரச்சனையும் உச்சத்த எட்டுச்சு. அதுக்காகவும் ஒருபக்கம் சமி போராடிட்டு இருந்தாரு. தன்னுடைய வீரர்களுக்கான சரியான சம்பளத்த வாங்கித் தர யூனியன் லீடர் மாதிரி உண்ணாவிரதப் போராட்டம்தான் நடத்தலயே ஒழிய மத்தபடி ஒரு Silent War-ஐயே நடத்திட்டாரு.
இது எல்லாமே தடைக் கல்லாக அவங்கள முடக்கிப்போட நினைக்க இன்னொரு நெகட்டிவ் ஃபீட்பேக்தான் சமியை ரொம்பவே உலுக்கிவிட்டுச்சு. "Short of Brain" - மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மார்க் நிக்கோலஸ் கொடுத்த மார்க்கும் ரீமார்க்கும் இதுதான். ஜெயிச்சுடுவேன்னு சொல்றதவிட ஜெயிச்சவன் சொல்றத நம்பற உலகத்துக்கு, தான் யாருனு சமி காட்டிய தொடரிது.
Bits and Piecesஆக இருந்த அணிய ஒருங்கிணைச்சு, வடிவம் கொடுத்து அதை சரியான திசையிலும் செலுத்தி கோப்பையையும் வாங்க வச்சாரு. விமர்சனத்தோட வாயை அ(உ)டைக்கற உளி வெற்றிதானே? அததான் அன்னைக்கு சமி செஞ்சாரு. அந்தக் கோப்பையோட நாலு ஃபோட்டோவுக்கு கேமராவ 360° சுத்தவிட்டு நாலு போஸ் மட்டும் கொடுத்திருந்தா அவரு பத்தோடு பதினொன்னா போயிருப்பாரு. ஆனா அதுக்கப்புறம் அவரு செஞ்சதுதான் மகா சாகசம்.
வெற்றியடைஞ்ச கேப்டனோட உதடுகள் உதிர்க்குற ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காத்திருந்த மைக்குகளுக்கு முன்னாடி மார்க் நிக்கோலஸோட அவமதிக்கும் வார்த்தைகள் தங்களுக்கு எப்படி உரமாச்சுன்னு சொல்லி, தங்கள் மீதான தன்னம்பிக்கைய எப்படி தாங்கள் தவிடுபொடியாக்கியிருக்கோம்னு சொன்னாரு. அதோட சம்பள விஷயத்துல வஞ்சகம் பண்ணி தங்கள ஏமாத்த நினைச்ச மேற்கிந்தியத்தீவுகள் வாரியத்தோட உண்மையான நிறத்த தோளுரிச்சுக் காட்டுனார். மொத்த உலகத்தையும் அவரோட அந்த ஸ்பீச் உலுக்கி வீரர்களுக்கான ஆதரவோட வீச்ச அதிகரிச்சது.
இருமுறை கோப்பை வென்று தந்தது, அதுலயும் தோற்குற குதிரை, ஓடாத வண்டி, தேறாத கேஸ்னு கை கழுவப்பட்ட ஒரு குதிரைய பந்தயக்குதிரையாக்கி அது மேலயே சவாரியும் பண்ணி, கோப்பையை ஜெயிக்க வச்சதே பெருசுன்னா, என்ன பின்விளைவு வரும்ன்றதப் பத்தியோ தன்னோட எதிர்காலத்தையே குலைக்கும்ன்றதப் பத்தியோ கவலைப்படாம கலங்காம எடுத்துச் சொன்ன அந்தப் பேராண்மையும் சேர்ந்துதான் சமிய இன்னைக்கு வரை அவர ஒரு தக்லைஃப் ஹீரோவாகவே நினைவுல வச்சுருக்கு.