Chicken Park
Chicken Park டைம்பாஸ்
Lifestyle

Chicken Park : 'Winner winner chicken dinner' - கோழி இறைச்சியை சமைக்க ஒரு குட்டி பூங்கா !

டைம்பாஸ் அட்மின்

“கோழிக்கறி சட்டியில வெந்து பாத்துருப்ப, அண்டால வெந்து பாத்துருப்ப, ராட்டினத்துல வெந்து பாத்துருக்கியா? அதுவும் சுத்தி சுத்தி வந்து வேகுறத பாத்துருக்கியா?” என நம்மை பஞ்ச் டயலாக் பேச வைத்துவிட்டது ராட்டினத்தில் சுற்றி சுற்றி வந்து வேகும் கோழிக் கறி வைரல் வீடியோ.

viajecomemprego என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 1ஆம் தேதி வெளியான இந்த வீடியோதான் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இதில், சிறுவர்கள் விளையாடும் சிறு ராட்டினம் போன்ற சக்கரத்தில் முழுவதும் தோலுரிக்கப்பட்ட கோழி இறைச்சிகள் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த ராட்டின சக்கரமானது, திறந்த வெளியில் அடியில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மீது சீராக படும் வகையில், மெதுவாக சுற்றி சுற்றி வருகிறது.

இதேபோல பக்கத்தில் உள்ள ஊஞ்சலிலும் கோழி இறைச்சித் துண்டுகள், ஊஞ்சலாடியபடியே வெந்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு அமைப்புகளில் கோழி இறைச்சியை வேக வைப்பதற்காகவே ஒரு குட்டி amusement park போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இதற்கு “சிக்கன் ஃபேர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற வடிவமைப்பில் சிக்கன் தயாராவதைப் பார்த்ததுண்டா என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த வீடியோ, சமூக வலைதளப் பக்கத்தில் ஏராளமான வித்தியாசமான கமெண்ட்களை அள்ளியுள்ளது.

இதனை சிலர் ஆச்சரியமாக பார்த்துள்ளனர். சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இவ்வாறு இந்த வைரல் வீடியோவானது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தையே உண்டு பண்ணி விட்டது என்றே கூறலாம்.  

இன்ஸ்டாகிராமில் ஒரு பயனாளர், "இவ்வாறு சமைக்க உங்களுக்கு எவ்வாறு இவ்வளவு தைரியம் வந்தது. ஆனாலும், இது எனது இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் என்னால் அங்கு போய் சாப்பிட முடியாது” என தனது ஆச்சரியத்தையும், இயலாமையையும் ஒரு சேர தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனாளரோ, “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்”என உற்சாகத்தில் கூச்சலிட்டுள்ளார். “இது ஒரு சமையல் போட்டி அல்லது திருவிழா” எனத் தெரிவித்துள்ளார் மற்றொருவர். ஒரு குறும்புக்கார பயனாளியோ, “இந்த முறையில் ஒரு பக்க கோழி இறைச்சியை சமைக்கவே 3 நாளாகுமே” என கிண்டலடித்துள்ளார்.

நீங்கள் கோழி இறைச்சியை விரும்புபவரா? அப்படியெனில், நீங்கள் இந்த “சிக்கன் ஃபேர்"-க்கு வர முடியவில்லை என்றாலும் கவலை வேண்டாம். வீட்டிலேயே நான் கூறும், எங்களின் சுலவையான உலர் சிக்கன் ரெசிபி வகைகளை செய்து பாருங்கள் என தந்தூரி சிக்கன், டிரம்ஸ் ஆப் ஹெவன், வறுத்த கோழி, சிக்கன் 65, கேஎப்சி ஸ்டைலில் சிக்கன் விங்ஸ் என சில சிக்கன் ரெசிபிக்கள் செய்வதற்கு டிப்ஸும் அந்நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மு. ராஜதிவ்யா.