’ஆயிரம் தலை வாங்கிய அபூர் சிந்தாமணி’ படத்துலேர்ந்து ஆரம்பிச்சதோ என்னவோ…! தமிழ் சினிமாவுல ’வில்லி’களோட தொல்லை தாங்க முடியலை. சில நடிகைகள் கதாநாயகனையே தூக்கிப்போட்டு பந்தாடுற அளவுக்கு ‘கொடூர வில்லி’ யா வந்து மிரட்டணும்’ ங்கிறதை கொள்கையா வெச்சிருப்பாங்க. அந்த அளவுக்கு ’வில்லி’ கேரக்டர் மேல கட்டுங்கடங்காத காதல் இருக்கு. பெண் ரசிகர்கள் பார்த்துட்டு ’அடி கொலைகாரப்பாவி மகளே’…ன்னு திட்டுறது விருதாகவும், ’இவள்லாம் நல்லாவே இருக்கமாட்டா’ன்னு சாபம் விடுறதை பாராட்டாவும் எடுத்துகிட்டு சந்தோஷப்படுற வில்லிங்க இன்னைக்கும் இருக்காங்க. அப்படி சில படங்கள்தான் இதெல்லாம்.
1 . ’படையப்பா’ படத்துல வந்த ’நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணனை யாராலயும் மறக்க முடியாது. கட்டுனா படையப்பா ரஜினியதான் கட்டுவேன் இல்லேன்னா பாடையில போனானும் பரவாயில்லைனு ’படையப்பா’ படத்துத்துல ஹைடெக் விகார வில்லியா வலம் வந்தவங்க ரம்யா கிருஷணன்.
படையப்பா தனக்கு ஹஸ்பெண்டா ஆக்கிக்க முடியலேங்கிற ஆத்திரத்துல 18 வருஷம் ஒரே ரூமுக்குள்ள சூரிய வெளிச்சத்தைக்கூட கண்ணுல பார்க்காம எந்தப் பொண்ணாலயாச்சும் வாழ முடியுமா..? ஒரு சந்தோஷம், ஒரு புது டிரஸ், மேக்கப், கல்யாணம், காதுகுத்துன்னு எந்த பங்ஷன்லயும் கலந்துக்காம இருக்க.. நீலாம்பரியால மட்டும்தான் முடியும்.
படையப்பா ரஜினி, செளந்தர்யா கழுத்துல தாலி கட்டுற வீடியோவை ரீவைண்ட் பண்ணிப்.. பண்ணி 18 வருஷம் பார்த்ததுல அது நார் நாரா கிழிஞ்சு தொங்கினாலும் விடாம பார்த்தவங்க.
18 வருஷத்துக்கு அப்புறமா அண்ணன் நாசர் தன் மகனும், அந்த ரஜினி பொண்ணும் ஒரே காலேஜ்ல படிக்கிறாங்கங்கிற தகவலை சொல்ல… அந்த தகவல்... அல்வா.. இல்ல.. அல்வா கிண்டுற வாணலியவே விழுங்கின மாதிரி சந்தோஷத்துல புல்லரிச்சி, ஃபுல் மேக்கப்போட ஏதோ ஃபிலிம்முக்கு போவாங்கன்னு பார்த்தா.. படையப்பா ஃபேமலிய பலி வாங்கப்போறாங்க. 18 வருஷம் ஹவுஸ் அரெஸ்ட்டுல இருந்தும் திருந்தாத வில்லி ரம்யா கிருஷ்ணன். ’படையப்பா’வுல அவங்கதான் பேசப்பட்டாங்கன்னா பார்த்துக்கங்க.
2 .தெலுங்கானா ஸ்டேட்டுலேர்ந்து இறக்குமதியான நடிகைதான் சகுந்தலா. ’சொர்ணாக்கா’ கேரக்டர்ல மிரட்டுன வில்லி. ’சியான்’ விக்ரம் – ஜோதிகா நடிச்ச ’தூள்’ படம் பார்த்த எல்லாருக்குமே பயத்தை ஏற்படுத்துன கேரக்டர். தன்னோட முதல் கொலையவே ஓடுற ரெயில்ல ஒருத்தனை குத்தி தண்டவாளத்துல தூக்கி வீசுறதுதான். இந்த சொர்ணக்காவோட குவாலிபிகேஷன்னு பார்த்தா அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, சொத்தை அபகரிக்கிறதுன்னு எல்லாமே வில்லங்கமான வேலைதான்.
என்ன பண்ணாலும் ஏன்னு கேட்காத அரசியல் ஆட்களை மடிச்சி பர்ஸ்ல வெச்சிக்கிட்டு அலையுற ஆளூ. அதுலயும் இவரோட தம்பியா வர்ற வில்லன் பசுபதிய டம்மியாக்கிட்டு முன்னால நின்ன வில்லி இவங்கதான். செக்குல ஆட்டி எண்ணை எடுக்கிற மாதிரி மந்திரி கண்ணுலயே விரலை விட்டு… ஆட்டுற கோலாகல வில்லி. அந்தப் படத்துக்கு அப்புறம் அடாவடி பொண்ணுங்களுக்கு ’தூள்’ சொர்ணாக்கான்னு பெயர் வைக்கிற அளவுக்கு மக்கள் மனசுல பதிஞ்ச கேரக்டர்னா அது அந்த வில்லிதான்.
3 . அக்கா கணவன் மேல அன்பு வைக்கலாம், பாசம் வைக்கலாம் காதலையும், காமத்தையும் கலந்து வைக்கலாமா..? அப்டி வெச்சதால கண்டமான ஒரு விவகாரமான வில்லிதான் ’கலாபக் காதலன்’ படத்துல ஆர்யாகிட்ட அடாவடி பண்ற, கண்மணிங்கிற பெயர்ல கொழுந்தியாவா நடிச்ச அக்ஷயா. கண்ணுல காதல் காந்தத்தை கட்டிக்கிட்டு சதா அக்கா ஹஸ்பெண்டையே சுத்தி..சுத்தி வந்து மேப் போட்டு ’ரூட்’ விடுவாங்க. அக்காவுக்கு துரோகம் பண்றமேன்னு கொஞ்சமும் வருத்தப்படாத வாலிபி.
முறை மாப்பிள்ளை ஒருத்தன் முறையா வந்து பொண்ணு கேட்டும் அவனை விரட்டி. அடிச்சிடுவாங்க. ஆர்யா, கொழுந்தியாவோட மைண்ட்டைப் புரிஞ்சுகிட்டு விலகிப் போனாலும், விடாம விரட்டிக்கிட்டு வர்றாங்க. அப்பாவியான அக்ஷயவோட அக்கா ரேணுகா மேனன் சிஸ்டரை கண்டிச்சும் கேட்காம ’அடைந்தால் ஆர்யா.. இல்லன்னா மர்கயா’ ங்கிற மாதிரி தன்னோட அடங்காத காதலை ஆர்யாகிட்ட சொல்லிட்டு, கிடைக்கமாட்டார்னு தெரிஞ்சு கிளைமாக்ஸ்ல சூசைட் பண்ணி செத்துருவாங்க வித்தியாசமான, வில்லங்கமான ’வில்லி’ அக்ஷயா.
4 . சில ஆண்டுகளுக்கு முன்னாடி சிவகார்த்திகேயன் நாயகனாவும், சமந்தா நாயகியாவும் நடிச்ச படம் ’சீமராஜா’. அந்தப் படத்துல ஹீரோயிணியா வந்து வாலிப பையன்கள் முதல் வயசான தாத்தா வரைக்கும் ஹாட்டான பர்பாமென்ஸ்ல ஹீட்டை கிளம்பின சிம்ரன், கொஞ்ச கால இடைவெளிக்குப் பின்னால மிடில் ஏஜ்ல வந்து மிரட்டலான வில்லியா நடிச்சிருப்பாங்க. இளம் நாயகியாவே பார்த்து குளிர்ந்துபோன கண்களுக்கு, அதிக டெசிபல்ல சத்தம்போட்டு, ஹீரோவுக்கு டஃப் கொடுக்கிற கேரக்டர்ல பார்க்க என்னவோ மாதிரிதான் இருந்துச்சி.
அதுவும் மார்கெட்ல நடக்கிற ஒரு சீன்ல புடவைய மடிச்சுக் கட்டிக்கிட்டு சவால் விடும்போது ’இது நம்ம சிம்ரனா இல்லை வேற யாராச்சுமா..?’ன்னு கண்ணை தேய்ச்சுத் தேய்ச்சு பார்க்க வெச்சிருப்பாங்க. தன் கணவர் மகளான சமந்தாவை கண்ணாலயே மிரட்டி, அடக்கி வைக்கிறதெல்லாம் இதுவரைக்கும் சிம்ரன்கிட்ட பார்க்காத ஒரு ஜானர். தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட ஹீரோயிணி கிடைச்சிட்டாங்கன்னு சந்தோஷப்பட்ட நம்மளை, சூப்பரான வில்லியும் கிடைச்சிருக்காங்கன்னு வியக்க வைச்சவர்தான் நம்ம அழகான சிம்ரன்.
5 . இந்த வில்லிய காட்டும்போதெல்லாம் கைல ’தம்’மு இருக்கும் இல்லன்னா கத்தி இருக்கும். படம் முழுக்க யாரையாச்சும் கொலை பண்ணிக்கிட்டே இருக்கிறதுதான். இந்த வில்லியோட ஹைலைட். ராகவா லாரன்ஸ் நடிச்ச படமான ’ராஜாதி ராஜா படத்துல முரட்டு மும்தாஜுக்குத்தான் இந்த மிரட்டலான கேரக்டர். அப்பா சாகும்போது அவர்ட்ட சத்தியம பண்ணிக்கொடுத்த மாதிரி, மூணு அண்ணன்களையும் டாக்டர், போலீஸ், வக்கீலுக்குப் படிக்க வெச்சா, அவங்க மூணு பேரும் சின்ன வயசுல சைதை சைலாஜாவா கஞ்சா வித்த மும்தாஜ் பண்ற தப்புக்கெல்லாம் முட்டுக்கொடுக்க, சவுக்குக் குச்சியோட அலையிறாங்க.
திடீர்னு மும்தாஜ் மினிஸ்டர் ஆக, குடிசைய கொளுத்துறது, எதிரிய எரிக்கிறது, கண்ணுக்கு எட்டுற வரைக்கும் எதிரியே இருக்கக்கூடாதுன்னு அடியாட்களை வெச்சிகிட்டு அட்ராசிட்டி பண்றாங்க. அப்றம், கோடீஸ்வரன் பொண்ண ஏழை ஹீரோ காதலிக்கிறதும், வில்லன் மகள் நல்லவனை காதலிக்கிறதும் சினிமாவுல காலங்காலமா நடந்துட்டு வர்றதால, இந்தப் படத்துலயும் ’வில்லி’ மும்தாஜ் சிஸ்டரை லாரன்ஸ் லவ் பண்ணறார். அப்றம் கிளைமாக்ஸ் வரை விரலை நீட்டி, சத்தம் போட்டு, சவால் விடுறதுன்னு ஹீரோ ஜெயிக்கிற படம்தான் ’ராஜாதி ராஜா’.
- எம்.ஜி.கன்னியப்பன்.