Ellyse Perry
Ellyse Perry timepass
Lifestyle

WPL 2024: கிரிக்கெட், ஃபுட்பால் என கலக்கும் ஆல் ரவுண்டர் - யார் இந்த RCB இன் Ellyse Perry? | IPL2024

டைம்பாஸ் அட்மின்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆடவர் அணியால் 17 வருடங்களாக செய்ய முடியாத சாதனையை, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி செய்து காட்டி இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி முக்கிய போட்டிகளில் தடுமாறும் சமயங்களில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு உதவியவர் எல்லிஸ் பெர்ரி.

ஒரு வீரராக கிரிக்கெட், கால்பந்து என இரண்டிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான யார் இந்த எல்லிஸ் பெர்ரி.

எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வஹ்ரூங்காவில் மார்க் மற்றும் கேத்தி தம்பதிக்கு மகளாக நவம்பர் 3, 1990 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் விளையாட்டு சார்ந்த குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராகவே வளர்ந்தார். எனவே இவர் டென்னிஸ், தடகளம், டச் கால்பந்து மற்றும் கோல்ஃப் போன்ற பல விளையாட்டுகளையும் விளையாடினார். குறிப்பாக கிரிக்கெட் மற்றும் கால்பந்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வளர்ந்தார்.

எல்லிஸ் பெர்ரி தனது 16 வயதில் 2007 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகும் மிகவும் இளைய கிரிக்கெட் வீரராக ஆனார். பேட்டிங், வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் குறிப்பிடத்தக்க திறமை மிக்க ஆல்ரவுண்டராக அணியில் நிர்வாகத்தால் ஈர்க்கப்பட்டு அணியின் முக்கிய வீரராக மாறினார்.

இவர் 2011 இல் FIFA மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகக் கோப்பைகள் இரண்டிலும் விளையாடிய ஒரே வீராங்கனை என்ற சரித்திரம் படைத்தார் எல்லிஸ் பெர்ரி. இவர் களத்திற்கு வெளியே தனது பணிவு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றிற்காக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இதனால் விளையாட்டை தாண்டி இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

இவரின் பல சாதனைகளை இதுவரையும் பல வீராங்கனைகள் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் இருக்கின்றன. ஒரு சிறந்த  ஆல்-ரவுண்டருக்கான முன்னுதாரணம் எல்லிஸ் பெர்ரி ஆவர். இவர் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சின் மூலம் பல தனிப்பட்ட முறையிலும், அணிக்காகவும் செய்த சாதனைகள் பல உள்ளன. இவர் டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை குவித்த முதல் வீராங்கனை. மகளிர் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை ஆவர்.

இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள்:-       

2013 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2022 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிக்கு எல்லிஸ் பெர்ரி முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராக பெர்ரி சிறந்து விளங்கினார். அந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 114 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.  பெர்ரியின் ஆல்ரவுண்ட் ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. 

ஆறு டி20 உலகக் கோப்பைகள்:-     

2010 வெஸ்ட் இண்டீஸ்ல் நடைபெற்ற டி20 உலக கோப்பை, 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை, 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற டி20 உலக கோப்பை, மீண்டும் 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்ல் நடைபெற்ற டி20 உலக கோப்பை, 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை, இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை என மொத்தம் 6 டி20 உலகக் கோப்பை வென்ற ஒரே ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர் என்ற பெருமையின் சொந்தக்காரர் எல்லிஸ் பெர்ரி ஆவர்.

- மு.குபேரன்.