amitshah timepassonline
அரசியல்

Senthil Balaji : கைதாகும் நேரத்தில் அமித்ஷாவுக்கு நெஞ்சுவலி வந்த கதை தெரியுமா?

முக்கிய குற்றகாளியான அமித்ஷாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும் குஜராத்திற்குள் நுழைய குறிப்பிட்ட காலம் தடை விதிக்கப்பட்டது. இந்த விசாரணையின்போது நெஞ்சுவலி வந்ததாக மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

டைம்பாஸ் அட்மின்

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டபோது தனக்கு நெஞ்சுவலி வந்ததாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். 'இது நாடகம்' என்று பா.ஜ.க.வினரால் கிண்டலடிக்கப்பட்டது. இதற்கு முன்பு அமித்ஷாவும் நெஞ்சுவலி என்று அட்மின் ஆனவர்தான் என்று தி.மு.கவினரால் பதிலடி கொடுக்கப்பட்டது. அமித்ஷாவுக்கு நெஞ்சுவலி வந்த கதை என்ன என்று பார்ப்போமா?

குஜராத்தைச் சேர்ந்த சொராஹ்புதீன் என்ற நபர், அவரது மனைவி கௌசர் பீபி மற்றும் இன்னொருவர் ஹைதராபாத்திலிருந்து மகாராஸ்டிராவின் சிங்கிலி என்ற ஊருக்கு சென்று கொண்டிருக்கும்போது 2005 நவ.23,ம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து சொஹ்ராபுதீன் காலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் செல்ல முயற்சி செய்தார் எனக் கூறி என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்.
அவரது மனைவி கௌசர் பிபி அடுத்த சில நாட்களிலேயே காவல் அதிகாரிகளால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டார்.

அடுத்த வருடமே அவர்களுடன் இருந்த துளசிராம் பிரஜாபதி சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்தார் என்று கூறி என்கவுண்டர் செய்யப்பட்டார். சொஹ்ராபுதின் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை கொல்லத் திட்டமிட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி, அதனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே காவல்துறையினரால் சொல்லப்பட்டது.

அதன் பிறகு சொஹ்ராபுதீன் சகோதரர் ரபாபுதீன், கௌசர் பிபி பற்றி தகவல் அறிய உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை குஜராத்தின் CID கிரிமினல் பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த சி.ஐ.டி பிரிவு சொராப்தீன் மட்டுமல்ல அவர் மனைவியும் குஜராத் காவல்துறையால் கொல்லப்பட்டார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தீவிரவாதி என்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் சொல்லப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றகாளியான அமித் ஷாவிற்கு  ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும் குஜராத்திற்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட காலம் வரை தடை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போதுதான் தனக்கு நெஞ்சுவலி வந்ததாக அமித்ஷா மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

'அப்போ அமித்ஷா ஆடியது நாடகமில்லையா? தனக்கு வந்தா தக்காளிச்சட்னியா?' என்று பிஜேபியினரைப் பார்த்துக் கேட்கிறார்கள் தி.மு.க.வினர். அதுமட்டுமல்ல 1991 - 96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த பலரின் மீதும் பிறகு ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போதெல்லாம் அவர்கள் வழக்கு விசாரணை, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நெஞ்சுவலி என்று ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவது தமிழகம் பார்த்த வரலாறுதான். ஊழல் வழக்கும் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சுவலியும் பிரிக்க முடியாதவை.