DMK timepass
அரசியல்

DMK : வருங்கால முதல்வர் உதயநிதியா? பொன்முடியா? - விழுப்புரம் விளம்பரம் அட்ராசிட்டி!

இதை வேகமாக செல்பவர்கள் படிக்கும் போது, "வருங்கால முதலமைச்சர் பொன்முடி" என்றுதான் பொருள்படும்படி இருக்கிறது.

டைம்பாஸ் அட்மின்

தி.மு.க., இரண்டாண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. இதனிடையே அமைச்சரவை மாற்றம், கள்ளச்சாராய பிரச்னை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளில் தி.மு.க சிக்கி தவித்து வர... மாவட்டம் தோறும் உட்கட்சி பிரச்னையும் அதிகரித்திருக்கிறது.

இதுமட்டுமின்றி, துணை முதலமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்படுமா என்ற பேச்சுக்களும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

விழுப்புரத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிகளில் ஒன்று ரயில்வே நிலையம். இங்கு புதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில், அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், "நவம்பர் 27ல் பிறந்த நாள் காணும் வருங்கால முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு" என குறிப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, "டாக்டர் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர்" என எழுதியுள்ளனர். நவம்பர் 27-ல் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் எனும் போது, அவரை "வருங்கால முதலமைச்சர்" என இப்போதே தூக்கி பிடித்திருக்கிறது அமைச்சர் பொன்முடி தரப்பு.

"இந்த விளம்பரத்தை உற்றுநோக்கி படிப்பவர்களுக்கு தான் உதயநிதியை 'வருங்கால முதலமைச்சர்' என சொல்கிறார்கள் என தெரியும். ஆனால், பரபரப்பாக வாகனங்கள் இயங்கும் அங்கு யாரும் வாகனத்தை நிறுத்தியோ, மெதுவாக சென்றோ படிக்க போவதில்லை. 'வருங்கால முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு' என்பதில்... " அவர்கள் வாழ்க பல்லாண்டு" என்பது மிக சிறிய எழுத்தாக உள்ளது.

உடனே அமைச்சர் பொன்முடியின் பெயர்தான் பெரியதாக உள்ளது. இதை வேகமாக செல்பவர்கள் படிக்கும் போது, "வருங்கால முதலமைச்சர் பொன்முடி" என்றுதான் பொருள்படும்படி இருக்கிறது. "அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் யாரை வருங்கால முதலமைச்சர் என சொல்ல வருகிறார்கள் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது" என்று கிசுகிசுக்கின்றனர் உடன்பிறப்புகள்.

- அ.கண்ணதாசன் / போட்டோ: தே.சிலம்பரசன்.