இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் படம்.
இந்நிலையில், சென்னையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விக்ரமின் அலுவலகத்தில் இருந்து பகிரப்பட்ட செய்தியில், “ ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி. தங்கலான் படத்தின் ஒத்திகையின் போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு உடைந்திருக்கிறது.
இதனால் அவர் தங்கலான் படப்பிடிப்பில் சிறுது காலம் பங்கேற்க முடியாது. உங்கள் அன்பிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு விரைவில் நலம் பெற்று வருவார்” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.