சின்னத்தம்பி, பூவே உனக்காக, பூவே பூச்சூடவா, வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே, தாலாட்டு, ரோஜா, இதயத்தைத் திருடாதே, செம்பருத்தி, ராஜா ராணி, கிழக்கு வாசல்.. பட்டியலிட்டால் இப்படி நீ...ண்டு கொண்டே போகும். இவையெல்லாம் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? சினிமாக்கள் மட்டுமல்ல, சீரியல்களும்தான்.
சீரியல்களை தொடர்ந்து விரும்பிப் பார்க்கிறவர்களிடம் 'செம்பருத்தி' என்றால் அவர்கள் நினைவில் பிரசாந்தும் ரோஜாவும் வர மாட்டார்கள். கார்த்திக் - ஷபானாதான் வருவார்கள். ஏன் 'ராஜா ராணி' என்றால் கூட ஆர்யாவுக்குப் பதில் ஆல்யாதான் வந்து தொலைக்கிறார். 'ஆமாம், சீரியல்களுக்கு ஏன் சினிமாப் பெயர்கள்? இது சரியா, இதன் ப்ளஸ் மைனஸ் என்ன பார்க்கலாமா?
"இது சரியா தப்பாங்கிற கேள்வியையெல்லாம் கடந்து விட்டது சீரியல் உலகம். ஏன்னா, இன்னைக்கு பழைய திரைப்படங்களின் பெயர்களை ரொம்பவே சகஜமாகிடுச்சு. ஆரம்பத்துல சினிமா தரப்புல இருந்து சில தயாரிப்பாளர்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவிச்சாங்க.
ஆனா சினிமாவுலயே இப்ப எடுக்கிற படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களை வைக்கிறது சகஜமாகிடுச்சே. அதையுமே ஆரம்பத்துல சிலர், 'அந்தப் பழைய படங்களின் புகழ் மறைக்கப்பட்டுடும்'னு ஆட்சேபனை தெரிவிச்சாங்க. ஆனா சில தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு தாங்களே தங்களின் பட டைட்டில்களை விருப்பப்பட்டுத் தர முன்வந்ததுல எல்லாம் முடிஞ்சு போச்சு.
'கர்ணன்' மாதிரியான சில படங்களை உதாரணமாச் சொல்லலாம். தவிர 'ஒரு படத்தின் டைட்டிலை குறிப்பிட்ட சில வருஷம் கடந்துடுச்சுன்னா மத்தவங்க பயன்படுத்திக்கலாம்'னு ஒரு விதி இருக்கறதா தயாரிப்பாளர் சங்கத் தரப்புல இருந்தே சொல்லப்பட்டுச்சு. அதனால இன்னைக்கு பழைய படப் பெயர்களை வைப்பது சாதாரணமாகிடுச்சு.
சீரியல்களை எடுத்துகிட்டா, இப்படி பழைய அதே பெயர்களை வைப்பது, சீரியலுக்கு கொஞ்சம் சீக்கிரமாக் கவனிக்கப்படும்னு தான். அதாவது கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும்னுதான். ரேட்டிங் கிடைக்க விளம்பரம் முக்கியமில்லையா'' என்கிறார் விஜய் டிவியில் சில சீரியல்களைத் தயாரித்தவரும், சீரியல் நடிகருமான அன்வர்.
'பூவே பூச்சூடவா' தொடரில் நடித்தவரும் ஜீ தமிழ் சேனலில் சொந்தமாக ஒரு சீரியலைத் தயாரித்தவருமான தினேஷிடம் இது குறித்துப் பேசினோம்.
''சினிமா போலத்தான் சீரியல்களுக்கும் டைட்டில் ரொம்பவே முக்கியம். அது ரசிகர்களின் மனசுல பதியற மாதிரி இருக்க வேண்டியது அவசியம். இன்னைக்கும் நல்ல டைட்டில்களை யோசிச்சு புதுசா வைக்கிற சீரியல் தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சீரியல் கதாபாத்திரங்களில் இருந்தே வித்தியாசமான டைட்டில் பிடிச்சு ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' மாதிரியான சீரியல்களை உதாரணங்களாச் சொல்லலாம்"
ஆனா பழைய பெயர்களை வைக்கிறப்ப கொஞ்சம் சீக்கிரம் ரீச் ஆகுதுங்கிறது நிஜம்தான்'' என்கிறார் இவர்.
'சாதகமான அம்சம் என்றால் விளம்பரம் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் சரி, இதனால் மைனஸ் என ஏதாவது உண்டா? எண்பதுகளில் திரைப்படங்கள் தயாரித்த கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் 'சாரதா' ஸ்டூடியோ ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பனிடம் பேசினோம்.
''பழைய திரைப்படங்களை அந்தந்தக் காலத்து வரலாற்று ஆவணம்னே சொல்லலாம். அப்படியான வரலாறுகளை எதிர்கால சந்ததிகள் தெரிஞ்சுக்கிடணும்னா, பழைய படங்கள் பாதுகாக்கப்படணும். ஆனா பழைய பெயர்களை திரும்பவும் வைக்கிறப்ப பழைய படங்களின் பெயர், புகழ், அதில் நடிச்ச நடிகர்களின் உழைப்பு, திறமை எல்லாமே மறக்கப்படுது.
'கர்ணன்', 'திருவிளையாடல்'னா இன்னைக்கு தனுஷ்தான் கண் முன்னாடி வர்றார். அதனாலதான் இந்தப் பழைய பெயர்களை வைப்பதற்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறாங்க"
படங்களுக்கு வைக்கறது போய் இப்ப சீரியல் ஏரியாவுக்கும் இந்தப் பழக்கம் வந்திடுச்சுன்னு நினைக்கிற போது உண்மையிலேயே வருத்தமா இருக்கு. என்னைப் பொறுத்தவரை ஒரேயொரு எளிமையான கேள்விதான். கதையைத்தான் தழுவி எடுக்கறீங்க, சரி டைட்டிலைக் கூடவே யோசிக்க நேரமில்லை'' என்கிறார் இவர்.
- அய்யனார் ராஜன்.