ஒரு சுமார் படம் - 37 மொக்க படம் என்கிற கொள்கையில் விடா பிடியாக இருக்கும் விமலின் இந்த வார ரிலீஸ் 'துடிக்கும் கரங்கள்'. ஓ சிட்டி ஆக்ஷன் சப்ஜெக்ட்டா 'நான் ரெடிதான் வரவா' என அடம்பிடித்து வண்டியில் ஏறி, நம்மை அதளபாதாளத்தில் தள்ளியிருக்கிறார்.
வேலு தாஸ் இயக்கத்தில் விமல், மிஷா நராங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துடிக்கும் கரங்கள்' படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம்.
கதைச்சுறுக்கம் :
சர்வதேச வலைபின்னல் கொண்ட போதை மருந்து கடத்தல் கும்பலை, ஒரு சாதாரண யூட்யூப்பரான கதாநாயகன் தன் ஆக்ஷன் அவதாரத்தால் அழிக்கிறான்.
ப்ளஸ் :
உணர்ச்சிகரமான காட்சிகளில் தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் விமல்.
வில்லன்கள் சுரேஷ் சந்திர மேனன், பில்லி முரளி ஆகியோர் மிரட்டுகிறார்கள்.
கலை இயக்குநர் கண்ணன் இறைச்சி வெட்டும் இடம், பெரிய சமையல் கூடம் என தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
வேறு ப்ளஸ்கள் தேடி தேடியும் கிடைக்காததால் மீண்டும் ஒருமுறை மூன்றையும் படித்துக்கொள்ளவும்.
மைனஸ் :
வழக்கொழிந்துப் போன சதீஷின் ஒன் லைன் காமெடிகள்.
அடிக்கும் வெயிலுக்கு உள்ளே டீ சர்ட், வெளியே பட்டன் கழற்றப்பட்ட சண்டையுடன் விமல் பேசும் பஞ்ச் வசனங்கள், ரசிக்க வைக்கவில்லை என்றால் கூட பரபாயில்லை சிரிக்க வைப்பதுதான் கொடுமை.
த்ரில்லராக ஆரம்பிக்கும் கதை சிறிது நேரத்திலேயே மாஸ் ஹீரோ, காதல், டூயட், குடும்பம் பிரச்னை என மசாலா சினிமாவாக மாறி நம்மை குழப்புகிறது.
இரண்டு சாக்கு மூட்டையில் அள்ளி எடுத்து செல்லும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் கொட்டிக்கிடக்கிறது. ஐ.ஜி., மகளின் கொலை வழக்கை 'வாத்தியாரே சாப்டு சாயங்காலமா தேடுவோமா' என்ற ரீதியில் போலிஸ் தூங்குவதனால், 'தாத்தாவையே சாயங்காலம் தேடுவீங்கனா அப்ப மாதவிய(போதை பொருள் கடத்தல் கும்பல்)?" என நமக்கே கொட்டாவி வருகிறது.
முடிவு:
ஆக்ஷன் படமாகவும் இல்லாமல் த்ரில்லர் படமாகவும் இல்லாமல் நம்மை சோதிக்கும் ஒரு டெம்ப்ளட் விமல் படமாக நம்மை தாக்கியிருக்கிறது இந்த 'துடிக்கும் கரங்கள்'.