Vijay Politics : MGR போல வெற்றி பெறுவாரா, சிவாஜி போல் தோற்றுப்போவாரா?

எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் பிம்பத்தைக் கொண்டு ஜெயலலிதா இருவரைத் தவிர சினிமாவில் இருந்து வந்த எந்த நட்சத்திரமும் தமிழ்நாட்டு அரசியல் வானில் ஜொலித்ததில்லை என்பதே உண்மை.
Vijay Politics
Vijay PoliticsVijay Politics

'நான் ரெடி' என்று அரசியலில் கால் பதிக்க ஆசைப்படுகிறார் விஜய். பொதுவாகவே தமிழர்கள் சினிமாக்காரர்களுக்குக் கண்ணை மூடி ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உண்மையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து பல்பு வாங்கிய நடிகர்கள்தான் அதிகம்.

தமிழ் சினிமாவில் அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் என்றால் அது எம்.ஜி.ஆர்தான். ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த எம்.ஜி.ஆரைத் திராவிட இயக்க ஆதரவாளராக மாற்றியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் மூலம் தி.மு.க.வுக்கு வந்த எம்.ஜி.ஆர், அதே கலைஞரை எதிர்த்து தி.மு.க.வைவிட்டு வெளியேறி அ.தி.மு.கவைத் தொடங்கினார். பிறகு தமிழ்நாட்டின் முதல்வராகி, இறக்கும்வரை முதலமைச்சராகவே இருந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமைக்குப் போட்டியிட்டதும் இரண்டு நடிகைகள்தான். ஒருவர் முன்னாள் நடிகையும் எம்.ஜி.ஆர் மனைவியுமான வி.என்.ஜானகி. இன்னொருவர் ஜெயலலிதா. ஆனால் எம்.ஜி.ஆரின் மனைவியை நிராகரித்து மக்கள் ஜெயலலிதாவையே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அங்கீகரித்தார்கள். ஜானகியுடன் கூட்டணி அமைத்து தோற்றுப்போன நடிகர், சினிமாவில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.

ஆரம்பகாலத்தில் தி.மு.க.வில் இருந்து பிறகு காங்கிரஸுக்குப் போன சிவாஜி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று உடைந்தபோது சிவாஜியின் கட்சி ஜானகி அம்மையாருடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டது. ஆனால் சிவாஜியே தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. பிறகு தன் கட்சியைக் கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிய சிவாஜி, வி.பி.சிங் காலத்தில் ஜனதா தளத்தின் தமிழ்நாடு தலைவராக இருந்தார். அதிலும் தோல்வி காணவே அரசியலையே தலை முழுகிவிட்டு விலகினார்.

Vijay Politics
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் வாரிசு யார் என்று சொல்லவில்லை. ஆனால் தன் சினிமா வாரிசாக எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டவர்தான் இயக்குநர் கே.பாக்யராஜ். தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியாக இருந்த பாக்யராஜ் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க.வில்தான் இருந்தார். ஆனால் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று அதிமுகவில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அரசியலில் அது போணியாகவில்லை.

அரசியலை விட்டு விலகியிருந்தவர் திடீரென்று தி.மு.க.வில் சேர்ந்தார். பிறகு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். பிறகு எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பிரிவின்போது ஓ.பன்னீர்செல்வத்தைச் சென்று சந்தித்தார். இருவரின் இணைப்புக்காகப் பாடுபடுவேன் என்று சொன்னவர், அதற்குப்பிறகு சைலண்ட் ஆகிவிட்டார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவினருக்கு பாக்யராஜ் என்றால் திமுகவினருக்கு டி.ராஜேந்தர். கறுப்பு சிவப்புக்கொடி, கலைஞர் படம் என்று தன் திரைப்படங்களில் தன்னைத் தி.மு.க.காரவே காட்டிக்கொண்டவர் டி.ராஜேந்தர். பிறகு கலைஞருடன் ஏற்பட்ட கசப்புணர்வால் தி.மு.க.வில் இருந்து பிரிந்துபோனவர் டி.எம்.கே என்ற ஓசை வரும்படி தாயக மறுமலர்ச்சிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் அழைப்பின்பேரில் மீண்டும் திமுகவில் இணைந்து கொள்கை பரப்புச்செயலாளர் ஆனார். மறுபடியும் திமுகவை விட்டு விலகி லட்சிய திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் பெயருக்கு முன்னால் 'இ' சேர்த்து இலட்சிய தி.மு.க என்று மாற்றினார். 'இ' சேர்த்தாலும் கட்சி ஈ ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை.

Vijay Politics
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தார். பிறகு அதிலிருந்து விலகி நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். தமிழ்நாட்டிலேயே அந்தக் கட்சி செயல்படாதபோது திடீரென்று 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்று பெயரை மாற்றினார்.

இந்தியாவுக்கு மட்டும் தன் சேவை போதாது என்று நினைத்த கார்த்திக், மீண்டும் மனித உரிமை காக்கும் கட்சி என்று மீண்டும் பெயரை மாற்றினார். ஏனோ ஏலியன் மக்கள் உரிமை காக்கும் கட்சி என்று இன்னும் பெயர் மாற்றாமல் இருக்கிறார். மறுபடி மறுபடி பெயர்களை மாற்றினாரே தவிர, கடைசிவரை கட்சி செயல்படவே இல்லை. கார்த்திக்கும் யாருமே தொடர்புகொள்ள முடியாதபடி தலைமறைவாகவே இருப்பார்.

கார்த்திக்கைப் போலவே சாதியை அடிப்படையாக வைத்து கட்சி ஆரம்பித்தவர் சரத்குமார். முதலில் தி.மு.க, அ.தி.மு.க என்று ரவுண்ட் அடித்தவர் பிறகு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கிறார். இதுவரை ஒரு தேர்தலில்கூட டெபாசிட் வாங்கியதில்லை.
கார்த்திக், சரத்குமார் வரிசையில் சாதியக்கட்சி தொடங்கியவர் கருணாஸ்.

'முக்குலத்தோர் புலிப்படை' என்னும் கட்சியைத் தொடங்கிய கருணாஸ் எதேச்சையாக ஜெயலலிதாவைச் சந்திக்கச் செல்ல, அவரே எதிர்பாராமல் அவர் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்டு ஒதுக்கினார். ஜெயலலிதா எதற்கு கருணாஸுக்கு சீட்டு ஒதுக்கினார் என்று இன்றுவரைக்கும் கருணாஸுக்கும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியாது. அப்போது திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். அதற்குப்பிறகு அவரது கட்சியில் இருந்த சிலரே கருணாஸைக் கட்சியைவிட்டு நீக்குவதாகத் தீர்மானம் போட்டது எல்லாம் தனி காமெடி டிராக்.

Vijay Politics
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

1996 சட்டமன்றத் தேர்தலில் ''ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று தெரிவித்ததில் இருந்து ரஜினி மீதான அரசியல் எதிர்பார்ப்பு பல ஆண்டுகளுக்கு நீடித்தது. அவ்வப்போது அரசியலுக்கு வரப்போகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, ஒருவழியாக ''நான் அரசியலுக்கு வரவே மாட்டேன்" என்று 2020ல் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் அதற்குப் போட்டியாக இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போல் கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். ஆனால் ரஜினி ஜகா வாங்க, இப்போது 'ஏன்தான் கட்சி ஆரம்பித்தோமோ' என்று முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். மக்கள்நீதி மய்யம் கட்சியில் தொடக்கத்தில் இருந்த பலரும் ஒவ்வொருவராகத் தலை தெறிக்க ஓட, இப்போது பெயரளவுக்குக் கட்சியை நடத்திவருகிறார் கமல்ஹாசன்.
தனிக்கட்சி தொடங்கிய நடிகர்களை மட்டும்தான் இந்த வீடியோவில் பார்த்திருக்கிறோம். அதைத்தாண்டி ராதாரவி, கௌதமி, குஷ்பு, சிம்ரன், கோவை சரளா என்று டஜன்கணக்கில் பல கட்சிகளில் இருந்த, வெளியேறிய நடிகர், நடிகைகள் பட்டியல் நீளம்.

எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் பிம்பத்தைக் கொண்டு ஜெயலலிதா இருவரைத் தவிர சினிமாவில் இருந்து வந்த எந்த நட்சத்திரமும் தமிழ்நாட்டு அரசியல் வானில் ஜொலித்ததில்லை என்பதே உண்மை. விஜய் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெறுவாரா, இல்லை சிவாஜி முதல் கமல் வரை தோற்றுப்போன நட்சத்திரங்கள் பட்டியலில் சேர்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Vijay Politics
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com