'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.
அவ்வகையில் இரண்டாம் வாரமாக, இந்த வாரம் கே.ஜி.எஃப்-ன் நாயகன், தாய்மையைப் போற்றும் தாடிக்காரன், கர்நாடக சிங்கம் சாரி கர்நாடக சிறுத்தை யஷின் பள்ளிக் காலத்தைப் பார்ப்போம்.
வகுப்பறைக்குள்ள யஷ் நுழையறப்பவே, அவரோட க்ளாஸ் மேட்ஸ், "வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்"னு கத்திருப்பாங்க. அவரும் 'மே ஐ கம்மின்'னு சொல்லித்தான் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார்.
சக வகுப்பு நண்பர்கள் அனைவரும் இட்லி, தோசை, மேகி என விதவிதமாக சாப்பிட, யஷ் மட்டும் வலுக்கட்டாயமாக மூன்று வேளையும் 'பன்'-ஐயே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.
தீபாவளிக்கு ஜவுளிக்கடைக்கு கூட்டிச் சென்று, "என்ன வேண்டும் உனக்கு?" என பெற்றோர்கள் கேட்டால், "மொத்த பாம்பேவும் வேணும்" என்றும், பொங்கலுக்கு கூட்டிச் சென்று கேட்டால், 'கே.ஜி.எஃப்' என்றும், பிறந்தநாளைக்கு கூட்டிச் சென்று கேட்டால், "இந்த உலகம்" என்றும் பதில் சொல்லி, சட்டைக்கு அளவெடுக்க வந்தவரை அலற விட்டிருப்பார்.
ஏப்ரல் 1 அன்று, "பசங்கள மேல இங்க் அடிச்ச டீச்சர் வருவாங்க. ஆனா டீச்சர் மேலயே இங்க் அடிச்சா உங்கள மாதிரி ஹெட் மாஸ்டர் தேடி வருவாங்க" என பிரம்போடு வரும் ஹெட் மாஸ்டரிடம் மாஸ் காட்டியிருப்பார்.
பரிட்சைல பதில் தெரியாம, பேப்பர்ல கதை கதையா எழுதுனாலும், 'ஒரு சின்ன கிராமத்துல இருக்க ஒரு தாயின் பிடிவாதத்தோட கதையாதான்' அந்த கதைகள எழுதியிருப்பார்.
பங்குனி வெயில், மார்கழி குளிர், ஐப்பசி மழைனு எல்லா காலநிலைக்கும், கலர் கலர் கோட்டைப் போட்டுதான் சுத்தியிருப்பார்.
எதற்கும் அசராத ஆளாக பள்ளி மைதானத்தில் சுற்றித் திரியும் யஷ், 'அம்மா வர்றாங்க' என ஹஸ்கி வாய்ஸில் சொன்னால் போதும், 'அம்மா' என்ற வார்த்தையைக் கேட்ட அதிமுக அமைச்சர்கள் போல உறைந்துபோய் நின்றிருப்பார்.
அம்மா மீதுள்ள அதீத பாசத்தால், தன் சின்னம்மா மீதும் பாசம் வைத்தவராக இருந்திருப்பார். அதன் காரணமாகவே, ஒன்னாங் கிளாஸில் இருந்தே ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்திருப்பார்.