*சில வருடங்களுக்கு முன் சென்னையின் சினிமா பிரபலங்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஏரியாவுக்கு அசைன்மென்ட் நிமித்தம் சென்றிருந்தேன். அன்றைய என் அசைன்மென்ட் ஒரு இசையமைப்பாளரின் பேட்டி!
இந்த இசையமைப்பாளரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒருவாட்டிக்கூட கல்யாணம் ஆகாதவர். எப்போதும் சின்ன 'ஜெர்க்' கொடுத்து 'யோ யோ' என்று சொல்லுவதைப்போலவே ஆரம்ப கால பிரபுதேவாவின் உடல்மொழியோடு வளைய வருபவர். ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை இவர்! ஒரே 'டக்கிச்சிக்கு டக்கிச்சிக்கு' மியூசிக்கையே பல படங்களில் ஜெராக்ஸ் எடுத்தாலும் ஹிட் மியூஸிக் டைரக்டர் அவர்!
அன்னாரின் முதல் தமிழ் வாரப் பத்திரிகை பேட்டியை எடுக்கத்தான் அடியேன் சென்றிருந்தேன் என்பதால் அவரை போனில் நான் அழைத்தபோது ஏக குஷியோடு ஓ.கே சொல்லியிருந்தார். வீட்டுக்கு முன் பைக்கைப் பார்க் செய்து விட்டு செக்யூரிட்டியிடம் அனுமதி வாங்கி வரவேற்பறையில் காத்திருந்தேன். ஒரு பையன் வந்தான். அந்தக் காலத்து ஹாஜா ஷெரீப் போலவே இருந்தான்.
''என்ன சார் லூஸைப் பேட்டி எடுக்க வந்திருக்கீங்களா?'' என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
''லூஸா..?'' என்று வடிவேலு ஸ்டைலில் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எதற்கும் ஓடத் தயாராக இருக்க வேண்டும் என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
'வாங்க வாங்க சார்...நல்லாயிருக்கீங்களா?' என்று மரியாதையோடு ஆரம்பித்தார். தமிழைவிட அக்கட தேசத்தில் ஹிட் கொடுத்தவர் என்றாலும் சென்னையில் தான் ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம்! 'அப்புறம் எப்படி அசலூர் சினிமால பிஸியா இருக்கீங்க பாஸ்?' என்று தொண்டை வரை வந்த கேள்வியைக் கேட்டே விட்டேன்.
கமர்கட் குரலில் 'சார்... ஃப்ளைட்டில் பறந்து போய் ஆடியோ ரிலீஸில் கலந்துக்குவேன்! கம்போசிங், ரெக்கார்டிங் எல்லாமே இங்கே தான்... நான் பக்கா சென்னைப் பையன் சார்!' என்று சிரித்தார்.
அந்த ஊர் படங்களில் இவரைக் கமிட் செய்ய அங்கிருந்து இயக்குநர்கள் பட்டாளம் படையெடுத்து வந்தன. நான் பேட்டியெடுக்கப் போயிருந்தபோதே, 'ஏடு கொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லிக் கொண்டே சோபாவில் சரிந்து கிடந்தார் தயாரிப்பாளருக்கான சர்வ லட்சணமும் பொருந்திய ஒருவர்.
ஜில் தண்ணீரில் குளித்துவிட்டு துவட்டுவதற்குள் வியர்த்து வடியும் பருத்த சரீரத்திற்கு சொந்தக்கார தயாரிப்பாளர் அவர். அவரை வெயிட் பண்ணச் சொல்லிவிட்டு எனக்கு பேட்டி கொடுக்கத் தயாராக இருந்தார் நம்ம இசையமைப்பாளர். மொத்தப் பேட்டியும் பாடகர்கள் பாடும் ரெக்கார்டிங் ரூமில் தான் கொடுத்தார். யூடியூப்கள் வராத காலம். ஆனாலும் புத்தகத்துக்கு இரண்டு வாரங்கள் வந்த நல்ல பேட்டி அது.
'அவரு வெயிட் பண்ணுறாரு சார்... நீங்க கேளுங்க சார்... என்ன வேணும்னாலும் கேளுங்க!' என்று சொன்னார்.
சாஸ்திரமுலு சம்பிரதாயமுலு என சாங்கியக் கேள்விகளை எல்லாம் முடித்துவிட்டு அப்போது பரபரப்பாக அக்கட தேசத்தில் இவரோடு கிசுகிசுக்கப்பட்ட ஒரு ஹீரோயினைப் பற்றிக் கேட்டேன்.
அதுவரை பணிவுப்பன்னீர் செல்வமாய் இருந்த ஆள், அந்தக் கேள்விக்கு மட்டும் எகிறிக்குதிக்கும் எடப்பாடி போல ஆனார்.
''சார்... முதன்முதலா தமிழ் மீடியாவுக்குப் ஒரு பேட்டி கொடுக்குறேன். இப்ப அந்த மாதிரி லூஸுகளை எல்லாம் பத்தி நான் பேசணுமா? அது அதுவாவே கிளப்பி விட்டது சார்...நான் ஃப்ரெண்ட்ஷிப்பா மட்டும் தான் பழகினேன். கடைசில நான் லவ் பண்றதா சொல்லி என்னை அந்த ஊர்ல அசிங்கப்படுத்தி விட்ருச்சு. நிஜமாவே அப்படியெல்லாம் இல்லை சார். அந்த நடிகையைப் பத்தி இதுக்கு மேல பேச வேணாம் சார்!'' என்று ஏகத்துக்கும் கெஞ்ச ஆரம்பித்தார்.
அவரைக் கூல் பண்ணிவிட்டு, பேட்டியைத் தொடர்ந்தேன். தன் குருவான இசைக் கலைஞர் பற்றி, அப்பாவின் சினிமா செல்வாக்குப் பற்றி, இளையராஜா பற்றி, தமிழ் சினிமாவில் பண்ணும் புராஜெக்ட்டுகள் பற்றி என பின்னிப் பெடலெடுத்தார்.
நடுவில் அந்த பருத்த சரீர தயாரிப்பாளர் பொறுமையிழந்து நாங்கள் இருந்த இடத்துக்கே வந்துவிட்டார்.
'உர்ரே தொங்கனக் கொடுக்கா' டைப்பில் ஏதோ திட்டிவிட்டுக் கிளம்பினார். அவரை சமாதானப்படுத்தி கார் ஏற்றி வழியனுப்பி வைத்துவிட்டு மேலே நான் இருந்த அறைக்கு வந்தார், 'இந்த ஆளு ஒரு நான்சென்ஸ் சார்...நீங்க கேட்டீங்கள்ல ஒரு நடிகையைப் பத்தி... அவங்களோட மேனேஜரா இருந்தவர். ஒரு படம் தயாரிக்குறார். அதுல நான் ஹீரோவா நடிக்கணுமாம்... நல்ல சம்பளம் தர்றேன்'னு சொன்னார். ஓகே சொல்லியிருக்கேன். கதையா சார் முக்கியம்!'' என சொல்லிச் சிரித்தார்.
பேட்டியை முடித்துவிட்டு அவரின் உபசரிப்பில் மகிழ்ந்து கிளம்பத் தயாராக இருந்தேன்.
''சார், உங்களுக்குக் கல்யாணம்ல...என்னோட மனம் நிறைந்த வாழ்த்துகள்!'' என்றார்.
''நான் சொல்லவே இல்லையே....எப்படி கண்டுபிடிச்சீங்க?''என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.
''ஹல்லோ சார்... ரெக்கார்டிங் ரூம்ல உங்க வருங்கால மனைவியுடன் போன்ல கடலை போட்டதை நான் என் கன்ட்ரோல் பேட்ல இருந்து கேட்டுட்டேன் சார். ஸாரி... உங்களுக்கு ரெக்கார்டிங் ரூம் பற்றி சொல்ல மறந்துட்டேன். மன்னிச்சுக்கங்க!'' என்று விழுவிழுந்து சிரித்தார்.
நல்லவேளையாக ரொமான்ஸாக எதுவும் வருங்கால மனைவியிடம் பேசவில்லை. சும்மா 'சாப்பிட்டியா... என்ன பண்றே' போன்ற சம்பிரதாய 90ஸ் கிட்ஸ் கேள்விகளைத்தான் அன்றைக்குக் கேட்டிருந்தேன். (நல்லவேளை)
வெட்கத்தோடு விடைபெற்று வெளியே வந்தேன். பைக்கை எடுக்கும்போது, அந்த 'ஹாஜா ஷெரீப்' வந்தான்.
''சார்...அந்தக் கடையில டீ குடிக்கலாமா..?'' என்று கேட்டான்.
''ஓ.கே... வாங்க '' என்று சொல்லி அவன் பின்னால் பக்கத்திலிருக்கும் டீக்கடைக்குள் நுழைந்தேன்.
''சார்...நான் இன்னிலருந்து வேலையை விட்டு நின்னுட்டேன் சார். இந்த ஆளு டார்ச்சர் ஓவரா போயிடுச்சு சார்... நல்ல டியூன் சிக்கலைனா அடிப்பாரு சார். நல்லாத்தான் சம்பளம்லாம் கொடுக்குறாரு. ஆனா, கோபம் வந்தா அடிக்கிறாரு சார். நீங்க அந்த ஹீரோயின் பத்தி கேள்வி கேட்டீங்கள்ல... அது உண்மை சார். அந்த ஆளு அந்தப் பொண்ணை லவ் பண்ணினாரு சார். அப்புறம் ஃபேமிலி கௌரவம் அது இதுனு சொல்லி விட்டுட்டாரு சார்...அது இங்க ஒருநாள் வந்து கத்தி சாபம் விட்டுட்டுப் போச்சு. கிசுகிசு மாதிரி எழுதி இந்த ஆளு தோலை உரிச்சி விடுங்க சார்!'' என்று சிரித்தான். அவ்வளவுதான் எதையோ சாதித்த திருப்தியோடு கைகொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றான்.
எனக்குத்தான் அந்த கிசுகிசுவை எழுத இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது!
(சம்பவங்கள் Loading...)