ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர், நூத்துக்கணக்குல சேட்டிலைட் சேனல்ஸ்னு இப்போ நம்ம தமிழ் சினிமா டெக்னாலஜியில் கலக்குது. இந்தச் சமாச்சாரங்கள் எல்லாம் கறுப்பு & வெள்ளைக் காலத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். டைம் மெஷினோட பேக்ல ரெண்டு தட்டுத் தட்டி, அப்படியே கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போமா?
தமிழ் சினிமாவுக்குனே தனி சர்வர் போடுற அளவுக்கு ஃபேஸ்புக்ல ஃபேன் பேஜஸ், ஃபாலோயர்ஸ், லைக்ஸ், ஷேர்ஸ் அள்ளி இருப்பார் நம்ம எம்.ஜி.ஆர். அதுக்கு சமமா நடிகர் திலகம். எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் களுக்குள் செம சண்டை நடந்திருக்கும்.
ஏதாவது ஒரு சேனலில் ‘சாம்பார் வித் ஜெமினி’ என்ற நிகழ்ச்சியை ஜெமினி கணேசன் நடத்தியிருப்பார்.
சரோஜா தேவி மட்டும் சும்மாவா? குஷ்புவுக்கு முன்னோடியாக ‘கொஸ்டீன் கேட்கிறேனே கோப்பால்’ நிகழ்ச்சி நடத்தி, செம ஹிட் கொடுத்திருப்பார். முழங்கை வரை ஜாக்கெட், பேஸ்கட் பால் கொண்டை என்று பெண்கள் ரசித்துப் பார்த்திருப்பார்கள்.
டீசரும், டிரெய்லரும் யூடியூபில் ரிலீஸ் ஆனதும், சூடம் காட்டி மாலை போட்டிருப்பான் தமிழ் ரசிகன். காவியத் தமிழில் கலாய் கமென்ட்ஸ் விழுந்திருக்கும்!
ஒரு சேனல்ல நாகேஷ் ஜட்ஜா இருந்தா, இன்னொரு சேனலோட டான்ஸ் ஷோவுல சந்திரபாபு நடுவரா நட்டுவாங்கம் பிடிச்சிருப்பார். சுசீலாவும் டி.எம்.எஸ்&ஸும் எல்லா ‘சிங்கர்’ நிகழ்ச்சிகளுக்கும் சீஃப் ஜட்ஜஸ்.
3டியில் எம்.ஜி.ஆரோட வாள் வீச்சுல, புரொஜெக்டரே சிதறி இருக்கும். குழந்தைகளா இருந்த நம்ம அப்பாவும் அம்மாவும் 3டி நம்பியாரைப் பார்த்து மூச்சா போய் இருப்பாங்க.
டி.வி-யில் பஞ்சாயத்து புரொகிராம் நடத்த சௌகார் ஜானகி அஞ்சு டஜன் கர்ச்சீப்போட செட்டுக்கு வந்திருப்பாங்க.
காபி விளம்பரத்துக்கு ஜெய்சங்கர் டிகாக்ஷன் போட்டு அப்படியே காம்ப்ளானுக்கு புரொமோட் ஆகி இருப்பார். கோதுமை மாவு, எண்ணெய், மஞ்சள் போன்ற விளம்பரங்களுக்கு கே.ஆர் விஜயா.
ஹேர்ஆயில் விளம்பரத்துக்கு எக்கச்சக்க பேர் பிராண்ட் அம்பாசிடர் ஆகி இருப்பாங்க. அதில் ரவிச்சந்திரன் ஒரு தினுசா டை அடிச்சிருப்பார்.
காமெடிப் போட்டி நிகழ்ச்சிகள்ல நிரந்தர நீதிபதிகள் யாரு? நம்ம வி.கே.ராமசாமி, பாலையா, டணால் தங்கவேலு... நாகேஷை அப்பவே லெஜெண்டுனு சொல்லி காமெடி புரொகிராம்லேயே கண்ணு வேர்க்க வெச்சிருப்பாங்க!