மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் ரிலீஸாகி தியேட்டர் கொண்டாட்ட படமாக ஹிட்டடித்த சினிமா தான் 'ஜெய ஜெய ஜெய ஹே'. பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் கணவன் மனைவியாக நடித்த இந்தப்படத்தில் தர்ஷனா ராஜேந்திரனை கொடுமை செய்யும் கணவராக பேசில் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
தொட்டதுக்கெல்லாம் மனைவி தர்ஷனாவைக் கைநீட்டிவிடும் பேசில் ஜோசப்பை ஒரு கட்டத்தில் திருப்பி அடித்து விடுவார் தர்ஷனா. அதன் பிறகு நடக்கும் களேபரங்களும், பரபர காமெடி சம்பவங்களுமே கதை!
இளம் இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் இந்தப் படம் 50 கோடி வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் சமீபத்தில் இணைய விமர்சகர்கள், 'இது 2021-ல் வெளியான குங்ஃபு ஸோரா' என்ற பிரெஞ்சு படத்தின் அப்பட்டமான காப்பி' என எழுதித் தீர்க்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ஒரு காப்பி படத்தையா கொண்டாடினோம் என பலர் வெளிப்படையாக விபின் தாஸைக் கலாய்க்க ஆரம்பித்தார்கள். இதற்கு நீண்ட பதிலடியை தன் சமூக வலைதளத்தில் கொடுத்திருக்கிறார் விபின் தாஸ்.
''இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட கால அவகாசம் 6 மாதம் மட்டுமே. 6 மாதத்துக்கு முன்பு ரிலீஸான ஒரு படத்தை சுடச்சுட காப்பி அடிப்பது இயலாத காரியம். உண்மையில் குங்ஃபு ஸோரா படம் மார்ச் 2022-ல் தான் ரிலீஸானது. எங்கள் படம் 2022 அக்டோபர் ரிலீஸ். அந்தப் படக்குழுவே ஒப்புக்கொண்ட ஆதாரம் இருக்கிறது. இணையத்தில் அந்தப் பட ரிலீஸ் தேதியை யாரோ வேண்டுமென்றே 2021-ஆக திருத்தியிருக்கிறார்கள். உண்மையில் எங்கள் படம் 2022 ஜனவரிக்கே ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. தேதி தள்ளிப்போய் தான் தாமதமாக ரிலீஸ் ஆகியது. நிஜத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்கல் எல்லோருக்குமே தெரியும் இந்த ஸ்கிரிப்ட் 2020-ல் முடித்து லாக் செய்து விட்டேன் என்பது. முறைப்படி ஃபிலிம் சேம்பரில் பதிவும் செய்து விட்டேன். நான் மெயில் செய்த PDF-ல் ஹீரோயின் கேரக்டர் அடிப்பது, தடுப்பது, உதைப்பது, தடுப்பது, மீன் தொட்டியில் விழுவது, மொபைலில் சண்டை கற்றுக் கொள்வது எல்லாமே 2020-ல் ஸ்கிரிப்ட்டாக எழுதியிருக்கிறேன். அதற்கான ஆதாரம், என் மெயிலில் இருந்து தயாரிப்பாளர்கள், நாயகன் நாயகிக்கு ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கே புரியும்.
2021-ல் இருந்து இந்தக் கதைக்காக பல தயாரிப்பாளர்களை சந்தித்து ஸ்கிரிப்ட்டை படிக்கக் கொடுத்திருக்கிறேன். கிட்டத்தட்ட 20 பேர் வரை படித்தும் இருக்கிறார்கள். அதனால் காப்பி அடிக்க வாய்ப்பே இல்லை. புரியாதவர்கள் தான் இப்படி கதை கட்டி விடுவார்கள். பல காட்சிகள் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருப்பதற்குக் காரணம் ஒரே மாதிரியான அலைவரிசை சிந்தனை தான். நான் பிரெஞ்சு படத்தின் இயக்குநருக்கே இந்தப் படத்தைப் போட்டுக் காட்ட அழைப்பு விடுத்திருக்கிறேன்...! அதனால் வதந்திகளை பரப்ப வேண்டாம். அது படத்தில் உழைத்தவர்களை காயப்படுத்தும். அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்!'' என்று வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் விபின் தாஸ்.
டிஸ்னி-ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நிறைய பேரைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விபின் தாஸுக்கு ஆதரவாக மலையாள நடிகர்கள் பலர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
- எஸ்