வெந்து தணிந்தது படத்தில் வரும், 'மல்லிப்பூ' பாடல் ரீல்ஸ் உலகத்தில் ஆரம்பித்து, ரியல் உலகம் வரை அதிரடியாக மணந்துக்கொண்டிருக்கிறது. மல்லிப்பூ பாடலை எழுதிய கவிஞர் தாமரை தன்னுடைய அனுபவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கவிஞர் தாமரையின் முகநூல் பதிவு:
'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி .
இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று !
பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு !
கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது !
படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ?? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.
முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்
படம் : வெந்து தணிந்தது காடு
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
இசை : ஏ. ஆர். இரகுமான்
பாடல் வரிகள் : தாமரை
பாடகி : மதுஸ்ரீ
நடிப்பு : சிலம்பரசன்
குழுகாட்சி : பிரிவுழல்தல், தொலைதூர உறவு
தயாரிப்பு : வேல்ஸ் திரைநிறுவனம்
பாடல் வரிகள் :
பல்லவி
ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே ...அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே ...மச்சான் எப்போ வரப் போறே ?மச்சான் எப்போ வரப் போறே ?பத்து தலைப் பாம்பா வந்து முத்தம் தரப் போறே ?
நான் ஒத்தையிலே தத்தளிச்சேன்...தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்னை நான் சந்திச்சேன்...ஏ... எப்போ வரப் போறே..? மச்சான் எப்போ வரப் போறே ? பத்தமடைப் பாயில் வந்து சொக்கி விழப் போறே ?
சரணம் 1.
வாசலைப் பார்க்கிறேன் கோலத்தைக் காணோம் ! வாளியை சேந்துறேன் தண்ணியைக் காணோம் ! சோலி தேடிப் போனே காணாத தூரம்.... கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்...
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும் ! ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும் ..!
சரணம் 2
தூரமாப் போனது துக்கமா மாறும் ...பக்கமா வாழ்வதே போதுன்னு தோணும் ! ஊரடங்கும் நேரம் ஓர் ஆசை நேரும் !கோழி கூவும் போதும் தூங்காம வேகும் !
அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ..! போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும் !
கடைசிப் பல்லவி.
ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே !அந்த வெள்ளி நிலாவந்து வந்து தேடுதே ! மச்சான் எப்போ வரப் போறே ?மச்சான் எப்போ வரப் போறே? உத்தரத்தப் பார்த்தே நானும் மக்கிவிடப் போறேன்..!
அட எத்தனை நாள் ஏக்கம் இது ...பெரும் மூச்சுல துணிக்கொடி ஆடுது துணி காயுதே !
கள்ளக்காதல் போல நான் மெல்லப் பேச நேரும் !சத்தம் கித்தம் கேட்டால் பொய்யாகத் தூங்க வேணும் !
மச்சான் எப்போ வரப் போறே ?மச்சான் எப்போ வரப் போறே ?சொல்லிக்காம வந்து என்னை சொக்க விடப்போறே ???
பி.கு : சேந்துகிறேன் என்றால் கிணற்றிலிருந்து நீர் இறைப்பது ( Drawing water from a well ). கிராமங்களில் இயல்பாகப் புழக்கத்தில் இருக்கும் சொல்தான். பேச்சு வழக்கில் இங்கே 'சேந்துறேன்' என்று பாட வேண்டியது.