தமிழ் சினிமாவில் திடீரென முளைத்து உதிர்ந்த நட்சத்திரம் அவர். கடையெழு வள்ளல்களையே புறக்கடையில் உட்கார வைத்துவிட்டு 'நான்தான் பாரி ஓரி காரி!' என போஸ்டர்களில் கோடம்பாக்கத்து சுவர்களை அலங்கரித்தவர்!
'யார் பாஸ் இந்த ஆளு?' என சீனியர் என்னைக் கூப்பிட்டுக் கேட்க, ''எனக்கே தெரியலை சார். விசாரிச்சுட்டு சொல்றேன்!'' என சொல்லிவிட்டு தெக்கத்திப் பக்கம் விசாரணையைப் போட்டேன். தேநீர் கடையில் டீ மாஸ்டராய் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனிதர். மலேசியாவுக்கு வேலைக்குப் போன ராசியில் எங்கேயோ மச்சத்தோடு கொஞ்சம் பணமும் ஒட்டிக் கொண்டு அவரோடவே வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினெஸில் அதை முதலீடு செய்தார்.
பிரபல்யம் வேண்டுமென்பதால் சுமாரான படம் ஒன்றை பினாமி பெயரில் தயாரித்து, தானே ஹீரோவாக நடித்துதான் கோடம்பாக்கத்து சுவர்களை ஆக்கிரமித்தார். ஊர்ப்பக்கமெல்லாம் அதிரிபுதிரி அட்டகாசம் தான். தியேட்டரில் விலை கொடுத்து வாங்கி பிரியாணி பொட்டலங்களோடு காசு கொடுத்து ஆள் பிடித்து படத்தை 'ஓட்டினார்'.
அவரை முதல் பேட்டி எடுத்தேன். ரகளையான மனிதர். வெள்ளந்தியாக 'அண்ணே அண்ணே' என பேட்டியெங்கும் மண்மணக்க பேசினார். நானும் அதே மண்மணத்தோடு, ''ஏதுணே இம்புட்டு பணம்?" எனக் கேட்டேன்.
'அம்புட்டு பணம் எங்கிட்ட இல்லைணே!' என குறும்பாய் சிரித்தார். 'குடல் குழம்பும் தலைக்கறியும் வந்திரும் சாப்பிட்டு போங்கணே!' என உபசரித்தார்.
ஆனால், பேட்டி முடித்து அந்த ஓட்டல் வாசலுக்கு வந்து காரில் ஏறும் முன், ரோட்டில் கையேந்தி நிற்கும் ஆட்கள் தட்டில் நூறு ரூபாய்களை வாரி இறைத்தார். சிலருக்கு 500 ரூபாய் நோட்டும் விழுந்தது. அம்பானி அதானிகூட பணத்தை இப்படி செலவு செய்வார்களா என்பது சந்தேகமே!
அந்தப் பேட்டிக்குப் பிறகு இரண்டாவதாக வித்தியாசமான காமெடி பேட்டிக்கு ஏற்பாடு செய்தேன். அவரைப் பல கெட்-அப் போட்டு சென்னைக்குள் உலாவ விட்டு, காமெடி கதகளி ஆடியிருந்தோம். மனிதர் நம்ம இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தார்.
இப்படி மீடியா ஃப்ரெண்ட்லியாக இருந்தவரிடம் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டேன். இந்த கட்டுரைகளுக்காக பணம் வாங்க மாட்டோம். அது எங்கள் பாலிஸி என்று. 'தேநீர் குடிப்பதுவரை தான் இந்த நட்பு கலாச்சாரம் சார்' என கொஞ்சம் நாசூக்கான மொழியில் கவர் வாங்காமல் இருப்பதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். ஒருமாதிரி குழப்பமாய் பார்த்தார்.
ஏன் குழப்பம் என்று அடுத்த சில மாதங்களில் நமக்குத் தெளிவு கிடைத்தது. பத்திரிகை சார்பாக ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினோம். அதற்கான முன்பதிவையும்... வி.ஐ.பிகளிடம் கேட்டு சில காஸ்ட்லி ஓவியங்களை புக் செய்து அதன்பிறகு அதற்கான தொகையை பின்னர் அவர்களின் வசதிக்கேற்ப ஒருநாள் நேரில் சென்று வாங்கினோம்.
அப்படித்தான் கோடம்பாக்க வள்ளலும் ஒரு ஓவியத்தை புக் செய்திருந்தார். பணத்தை பின்னர் தருவதாக சொல்லியிருந்தார். வாரங்கள்...மாதங்கள் உருண்டோட... ஒரு கட்டத்தில் டீம் சார்பாக அவரிடம் போன் போட்டு கேட்கப் பணிக்கப்பட்டேன்.
"சார்...அந்த ஓவியத்துக்கான பணம்..?" என்று கேட்டேன்.
கரண்ட் கம்பியைத் தொட்டதைப்போல அவர் ஷாக் ஆனது போனிலேயே எனக்குத் தெரிந்தது.
"என்ன..! பணம் இன்னும் வரலயா...? சார் அன்னிக்கே கேஸா கொடுக்கச் சொல்லிட்டேனே சார்? இன்னும் வரலையா...? லைன்லயே இருங்க. கான்ஃப்ரென்ஸ் கால்ல எடுக்குறேன்." என்றவர், தான் பணம் கொடுத்துவிட்ட நபரை லைனில் பிடித்துக் கேட்டார்.
"டேய்...அந்த ஓவியத்துக்கு பணம் கொடுக்க காசு கொடுத்தேனே...கொடுத்துட்டியா?"
"அண்ணே அன்னிக்கே கொடுத்துட்டேனே..!" என்று வாய்கூசாமல் பொய் சொன்னான்.
"என்னது...கொடுத்துட்டியா... அந்த ரிப்போர்ட்டர் லைன்ல தான் இருக்கார். ஒழுங்கா உண்மையைச் சொல்லு! என்னை அசிங்கப்படுத்திட்டியேடா...நீ கேட்டு நான் கொடுக்காம இருந்திருக்கேனா..? ஏன் டா இப்படி துரோகம் பண்ணினே?" என்றார் கோபத்தோடு! கூடவே கொஞ்சம் கெட்ட வார்த்தையையும் அவன்மேல் பிரயோகித்தார். அவன் உண்மையை ஒப்புக் கொண்டான்.
"அண்ணே...மன்னிச்சிருங்கணே!" என்றான். அதையே இவர் நம்மிடம் கேட்க, "ஸாரி சார்...பரவாயில்லை!" என்றேன்.
அந்த நாள் முடிவதற்குள் பணம் வந்து சேர்ந்தது. ஆனால், அந்த உதவியாளர் போல எத்தனைப் பேரிடம் அவர் ஏமாந்தாரோ பாவம்?
காலன் மட்டும் ஏமாற்றாமல் அவரை அடுத்த சிலவருடங்களில் வாரிக்கொண்டான் பாவம்!
(சம்பவங்கள் Loading..!)