Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

வெட்டியா இருக்கமே கட்சியாவது ஆரம்பிக்கலாம்னு குச்சிய நட்டு கொடி ஏத்தினவர்தான் கருணாஸ். தாடிய முகத்துலயும், சாதிய தலையணையிலும் வெச்சிக்கிட்டு தூங்குற ஆள் இவர்.
kamal
kamaltimepass

சினிமா பீல்டுக்கு வந்தமா, நாலு துட்டு சம்பாதிச்சமா, சொத்துப்பத்தோட நிம்மதியா வாழ்ந்தமான்னு இல்லாம கூட இருக்கிற ஆல்லக்கை, நொல்லக்கை எல்லாம் சேர்ந்து ’வருங்கால இந்திய ஜனாதிபதி’ ன்னு ஒத்தை கோஷத்துக்கு சொத்தை வித்து கட்சி ஆரம்பிச்சி, தோள்ல துண்டோட பல நடிகர்கள் கிளம்பினாங்க.

அதிலயும் எம்.ஜி.ஆர் செத்துப்போயி அடக்கம் பண்ணின ஈரம் காயரத்துக்கு முன்னாடியே.. முச்சந்தி முழுக்க ஆளுக்கொரு கம்பை நட்டு, கலர் கலரா துணிய வெட்டித் தச்சி க, கா கழகம், மு.மூ முன்னணி, இ. ஈ இயக்கம்னு ஆரம்பிச்சாங்க. நூறு பேர் இருந்தாலும் போதும்னு மாநில மாநாடுன்னு நடத்தி அடுத்த முதல்வர் நான்தான்னும், முதல் கையெழுத்துல தமிழ்நாட்டு தலை எழுத்தை மாத்தப்போறேன்னு ரீபிள் பேனாவோட சுத்தின பல ஹீரோக்கள் நிலைமை கொடுமைதான்..

1 . சிங்கக் குரலோன் சிவாஜி. எம்.ஜி.ஆரோட அரசியல் கேப்பை ஃபுல் பண்ண வந்த புலிக்கேசி. போஸ்ட்டு கார்டு வாங்கற அளவுக்கு கூட காசு செலவு பண்ண மனசு வராத சிவாஜி, ’தமிழக முன்னேற்ற முன்னணி ன்னு தனிக்கட்சி தொடங்கி, சொந்த செலவுல போஸ்டர் அடிக்கப்போறார்னு சொன்னதும் மக்கள் திகிலடிச்சுப் போய்ட்டாங்க.

இவரை நம்பி கட்சியில சேந்தவங்களைவிட சிவாஜி வீட்டுப் பொட்டியில சேர்த்து வெச்ச காசு கொடி தைக்கிற டைலர், பிரிண்டிங் பிரஸ், போஸ்டர் ஒட்டுற ஆட்களுக்கு வேலை கிடைக்கிறது மூலமா செலவாகட்டும்னு சேர்ந்தவங்கதான் அதிகம்.

நடிகர் திலகத்தை நடிகரா மட்டுமே பார்த்த மக்கள் அவர் அரசியல் மேடையில பேசுறதையும் நடிப்புதான்னு நெனைச்சிட்டாங்க. அதனால ஒரே வருஷத்துல தன் கட்சிக் கடைய காலி பண்ணி ஜனதா தளம் கட்சியில சாவிய கொடுத்துட்டுப் போனவர்தான். அதுக்கப்புறம் கட்சின்னு யாராச்சும் சும்மா சொன்னாக்கூட கட்டைய தூக்கிட்டு அடிக்க வர்ற அளவுக்கு வெறுத்துப்போயிட்டார்.

kamal
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

2 . எம்.ஜி.ஆர் போனவர் சும்மா போகாம என்னோட அரசியல் வாரிசு பாக்யராஜ்னு சொல்லிட்டுப்போயிட்டார். அவ்ளோதான். பாக்யராஜை கைல மட்டுமில்ல… பொக்லைன் வச்சுக் கூட புடிக்க முடியலை. அந்த அளவுக்கு குதிக்க ஆரம்பிட்டார். உடனே கால்ல சுடுதண்ணி ஊத்திகிட்டு வெதுவெதுப்பா ஆரம்பிச்ச கட்சிதான் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம்.

கட்சி கொடி கம்பத்தையே கடன்லதான் வாங்கி நடவேண்டி சூழ்நிலையில தனியா ஒரு கட்சி தேவையான்னு கேட்டவங்ககிட்ட ’அரசியல்ல பெருசா சைன் பண்ணப்போறேன் பாத்துக்கங்க’ன்னு சைலண்டா சிரிச்சிருக்கார். அப்புறம் நாளடைவுல.. கட்சியில நிதி கேட்டு வந்த தொண்டர்கள்கிட்ட ’நிதில்லாம் இல்லை மிதி’ தான் சட்டையிலேர்ந்த வெத்துப் பாக்கெட்டை தூக்கிக் காட்டிருக்கார்.

அதுக்கப்புறம் அந்த கட்சி இந்த கட்சின்னு தாவித்தாவி பாத்துட்டு, கடைசியா ஜெயாம்மா செத்துப் போனதுக்கு அப்புறம் ஓபிஎஸ், ஈபிஎஸ் (ஒரு காலத்துல ஒண்ணா இருந்தப்போ) ’கட்சிக்கு வா காசு தர்றோம் கூப்பிட்டிருக்காங்க. இப்போ அவங்க ரெண்டு பேரும் பிணக்கு வந்து பிரிஞ்சுப் போனதால அடுத்து என்ன பண்றதுன்னு கன்னத்துல கை வெச்சி காத்திருக்காரு இந்த கதை மன்னன்.

kamal
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

3 . வெட்டியா இருக்கமே கட்சியாவது ஆரம்பிக்கலாம்னு குச்சிய நட்டு கொடி ஏத்தினவர்தான் கருணாஸ். கட்சிக்குப் பெயர் ’முக்குலத்தோர் புலிப்படை கட்சி.’ தாடிய முகத்துலயும், சாதிய தலையணையிலும் வெச்சிக்கிட்டு தூங்குற ஆள் இவர். மொத்த கட்சி தொண்டர்களையும் ஒரு டாட்டா சுமோவுல ஏத்திர்லாம்ங்கிற அளவுக்கு பெரும் புலிப்படை கூட்டத்தை தனக்கு பின்னாடி அமுக்கி வெச்சிருக்கிறவர்.. சாதி பெருமை பேசிப்பேசியே வாயைப் புண்ணாக்கிட்டவரு.

என்னத்தையாவது பேசி, எதையாவது பண்ணி, கையில சிக்கிறதைப் புடிச்சி மேல வந்துறலாம்னு கெடந்து துடியா துடிக்கிறாரு. ’என் கட்சியை கலைச்சிட்டு உங்க கட்சிக்கு வரட்டா’ ன்னு பல்டி, குட்டிக்கரணம், ஜிம்னாஸ்டிக் எல்லாம் அடிச்சுப்பாத்தும் எந்த கட்சியும் சீண்டலை. சில கட்சிகள் ’தெரு பக்கம் கருணாஸை எண்ட்ரி ஆகாமப் பாத்துக்கங்க’ ன்னு எண்டர்ன்ஸ்லயே செண்ட்ரிய நிப்பாட்டிருங்காங்களாம். அடுத்து என்ன பண்றதுன்னு நொந்து நூலாகி கட்சி பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தினம் டாஸ்மாக்குல கூட்டி விவாதிச்சுட்டு இருக்கார்.

kamal
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

4 . தியாக மறுமலர்ச்சி கழகம், லட்சிய தி.மு.க இந்த பெயர்கள எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா..? நம்ம அடுக்குமொழி அரசன், மைக்கு மகேந்திர வர்மன், அறிக்கை அசகாய சூரன், வாய்ல பல வாத்தியக் கருவிகளோட அலையுற டி.ராஜேந்தர் ஆரம்பத்துல ஆரம்பிச்ச கட்சிதான் மேல இருக்கிற இரண்டும். டிவிக்கு பேட்டி கொடுக்கறப்போ பின்னாடி வந்து நின்னவங்க எல்லாம் நம்ம கட்சிக்காரங்கன்னு நம்பி ஆட்சியப் பிடிக்க ஆசைப்பட்டவருக்கு, அவனுங்க டிவியில வருவோம், நாலு பேருக்கு தெரிவோம்னு பின்னாடி நின்ன விஷயம் ராஜேந்தருக்கே பின்னாடிதான் தெரிஞ்சிருக்கு.

ஒத்த ஆளா ஒரு கட்சிய ஆரம்பிச்சுட்டு அவர் படுற அவஸ்த்தைய சொல்லி மாளாது. அவர் வீட்டுல இருக்கிற நாலு ஓட்டு கூட அவருக்கு விழாதப்போ என்ன கருமாந்திரத்துக்கு கட்சி நடத்தணும்.

மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

5 . காலைல எந்திரிச்சு ’இங்க வெச்சிருந்த என் கட்சி எங்க காணோம்… யாராவது பாத்திங்களா..?' ன்னு கேட்கிற அளவுக்கு ’நாடாளும் மக்கள் கட்சி’ ன்னு ஒரு கட்சிய ஆரம்பிச்சு கண்டமானவர்தான் கார்த்திக். கட்சி பெயர்லயே நாடாளும்னு வெச்சிட்டா நாட்டை ஆண்டுர்லாம்னு கண்ணாபிண்ணான்னு கனவு கண்டாரு. ஆனா, இன்னைக்கு வரைக்கும் நாடாளும் கட்சி ஈடேறாம போச்சி..

இதை விட பெரிய காமெடி. சில பெரிய கட்சிகள்கிட்ட ’நான் கேட்கிற எண்ணிகைல, கேட்கிற தொகுதிய கொடுத்தாத்தான் உங்க கூட தேர்தல்ல கூட்டணி வெச்சிக்குவேன்’ னு சொல்லிருக்கார்னா தலைக்கு என்ன தில்லு இருந்திருக்கும். இன்னைக்கு வரைக்கும் அந்த கட்சிய கார்த்திக்தான் வெச்சிருக்காரா… இல்லை வேற யாராச்சும் கொண்டுப் போயிட்டாங்களான்னு தெரியல. வலைவீசியெல்லாம் தேட வேண்டியதில்லை மொத்தமே கட்சியில இருக்கிற பத்து பேரை விசாரிச்சா தெரிஞ்சுடும்.. இந்த நிலையில, சமீபத்துல 'மனித உரிமை காக்கும் கட்சி'னு ஒன்னு ஆரம்பிச்சுருக்கார்.

- எம்.ஜி.கன்னியப்பன்.

kamal
தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com