'காதல்'ங்கிற பூ ஒரு தடவைதான் பூக்கும்; அதை வாட விட்டுட்டோம்னா அது திரும்பவும் பூக்காது' - பிப்ரவரி 14ம் தேதியான இன்னைக்கு பலபேர் தங்களுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல இந்த டயலாக்கை வச்சு மறுபடி மறுபடி முறைச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. இப்ப அந்த 'வாடிப் போன பூக்கள' பத்தி பாக்கலாமா? புரியலயா? நாடோடிகள் பட செகண்ட் ஆஃப் கதைகளதான் இப்ப நாம பாக்கப் போறோம்.
இங்கிருந்தே நாம மேட்டருக்குள் போயிடுவோமா..
'வாழ்க்கைங்கிறது போர்க்களம்னு பூக்கள் சொல்லும்'னு சொன்ன அந்தப் பாடல் காட்சியில கதாநாயகியே ஆச்சரியப்பட்டுப் பார்த்த அந்த இசைக்கலைஞர் அவர்.
பிறவியிலேயே பார்வையை இழந்திருந்த அவர் மீது இரு கண்களும் நன்கு தெரிந்த ஒரு பெண்ணுக்குக் காதல் வந்தது. சென்னைப் புற நகரில் உள்ள பார்வையற்றோர் சங்கத்துக்கு அந்தக் கலைஞர் அடிக்கடி வந்து போக, அந்தச் சங்கத்தின் அலுவலராகப் பணி புரிந்து வந்தார் அந்தப் பெண். இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் பலத்த எதிர்ப்பு. 'ரெண்டு கண்ணும் இல்லாதவரைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போற' என்றார்கள்.
'காதலுக்குக் கண் இல்லைங்கிறது என்னைப் பொறுத்தவரை நிஜம்தான். நான் கட்டிகிட்டா இவரைத்தான் கட்டிப்பேன்' எனப் பிடிவாதமாக இருந்து, கடைசியில் வீட்டாரின் சம்மதமின்றியே தன் காதலரைக் கரம் பிடித்தார் அந்தப் பெண்.
பத்திரிகைகளில் இருவரும் சேர்ந்து அமர்க்களமாகப் பேட்டியெல்லாம் தந்தார்கள். திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் இருவருக்கும் நன்றாகவே போனது. சாதாரணமாக மேடையில் பாடிக் கொண்டிருந்த அந்தக் கலைஞருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. முழுக்க பார்வையற்றவர்களைக் கொண்டு ஓர் இசைக் குழுவைத் தொடங்கினார். இன்னொரு புறம் பார்வையற்றோர் கோட்டாவில் மத்திய அரசுப் பணியும் கிடைத்தது. தாம்பத்திய வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு மகன்களும் பிறந்தனர்.
ஆண்டுகள் உருண்டோடின. மறுபடியும் ஒரு பிப்ரவரி 14. வாழ்த்துச் சொல்லலாம் என அந்தப் பெண்ணுக்குப் ஃபோன் பண்ணினால், ஆக்ரோஷமும் ஆதங்கமுமாக அழுது தீர்த்து விட்டார். அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்ட அந்தக் குமுறல் இதுதான்..
''கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி அவ்வளவு சொன்னாங்க சார் எங்க வீட்டுல. நான் கேக்காம விட்டுட்டேன். இப்போ அதுக்குச் சரியான தண்டனையை கடவுள் கொடுத்துட்டார். அந்தாளு என் மீது காட்டினது லவ்வே இல்லை சார். லவ்வா இருந்தா கல்யாணம் ஆகி ரெண்டு பசங்களும் ஆன பிறகு இன்னொருத்தியைத் தேடிப் போவானா. .....போக'' எனச் சபித்துத் தள்ளி விட்டார்.
விஷயம் இதுதான். கை நிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்துக் கையில் கொஞ்சம் காசும் வந்ததும், அந்த நபரின் குணம் மொத்தமும் மாறி விட்டது. ஆதரவற்று நின்ற போது அன்பு செலுத்திய மனைவி வேண்டாதவராகி விட்டார். மகனைப் பள்ளியில் கொண்டு போய் விடச் சென்று வந்த இடத்தில், அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவருடன் மீண்டும் காதல் (?) வயப்பட்டு விட்டார்.
'அந்த ஆசிரியையும் ஏற்றுக் கொண்டால் இரண்டு குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம்' என மனைவியைத் தொந்தரவு செய்ய, மனைவி போலீஸ் ஸ்டேஷன் போனதெல்லாம் நடந்தது. ஒரு கட்டத்தில் ஆசை ஆசையாக் காதலித்த மனைவியையும் இரண்டு மகன்களையும் தவிக்க விட்டுவிட்டு அந்தப் பெண்ணுடன் தனிக் குடித்தனமும் சென்று விட்டார். 'தொலைஞ்சு போகட்டும்' என அந்தப் பெண்ணும் விட்டு விட்டார்.
அந்தப் பெண்ணின் சாபம்தானோ என்னவோ, கொடூரமான கொரோனா வந்த போது அந்த இசைக் கலைஞரும் தப்பவில்லை. மனிதர் போய்ச் சேர்ந்தே விட்டார். அவர் இறந்த அடுத்த சில நாட்களில் பேசிய போது 'இப்ப நிம்மதியா இருக்கேன் சார்' என்றார் அந்தப் பெண்.
அடுத்த சம்பவத்துக்குப் போகலாம்.
'என் பேரு நான் நியூமராலஜி பார்த்து வச்சது. ஆனா அப்ப தெரியாது, என் மனசைக் கவர வர்றவனும் என் பேர்லயே இருப்பான்'னு! ஆனா வந்தானே' என ஆச்சரியப்பட்ட அந்த சீரியல் நடிகையிடம், 'இன்னைக்கு அவருக்கு என்ன பரிசு தரப் போறீங்க' என ஒரு காதலர் தினத்தன்று, கேட்க, ''ரெடிமேட் சட்டை, கூடவே ரெண்டு முட்டை. ரைமிங்கா இருக்கணும்னு இதைச் சொல்லலை. அவனோட ஷர்ட் சைஸ் தெரியாது. அவங்கிட்ட கேட்டு எடுத்தா சஸ்பென்ஸ் இருக்காது. தோழி ஒருத்தி, முட்டை சாப்பிட்டா பாடி உடனே ஃபிட் ஆகும்னா. 'சட்டை லூஸா இருந்தா முட்டை சாப்பிட்டுட்டுப் போடு'ன்னேன். 'நீதான் லூஸு'ன்னான்'' என உற்சாகமாகச் சொன்னார்.
மேற்படி இளைஞனும் நடிகையும் பிரபலமான ஆட்ட நிகழ்ச்சியில் சேர்ந்து ஆடிய போது காதல் வயப்பட்டவர்கள். நல்லபடியாக போய்க் கொண்டிருந்த இவர்களின் காதலுக்கு எதிரியாக வந்து சேர்ந்தது அந்த சீரியல். நடிகை அந்த சீரியலில் கமிட் ஆன போதே, 'சீரியலின் அந்த ஹீரோ ஒரு மாதிரியானவரே, இவர் எப்படித் தப்பிப்பார்' என்ற சலசலப்புகள் எழுந்தன.
நாளாக ஆக, அந்த சம்பவமும் நடக்கத் தொடங்கியது. சட்டை வாங்கிக் கொடுத்த காதலனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கிய நடிகை உடன் நடித்த அந்த ஹீரோவுடன் நெருக்கமானார்.
காதலருக்குப் புரிந்து விட்டது. எல்லாம் கை மீறிப் போய் விட்டது; இனி ஒன்றும் ஆகப் போவதில்லை என முடிவெடுத்த அந்த இளைஞர், 'நீ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நான் ஒருத்தியைக் கல்யாணம் செய்து காட்டுறேன் பார்' எனச் சபதம் விட்டு சொன்னபடியே அவசர கோலத்தில் இன்னொரு நடிகையைக் காதலித்து(?) திருமணமும் செய்து கொண்டார். சட்டை வாங்கிக் கொடுத்தாரே, அந்த நடிகையும் உடன் நடித்த ஹீரோவைக் கல்யாணம் கட்டிக் கொண்டு இப்போது குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அவசர அவசரமாக வேறொரு நடிகையைப் பிடித்து தாலி கட்டினாரே, அந்த முன்னாள் காதலன் எப்படி இருக்கிறார் என அறியத் தொடர்பு கொண்டால், அங்கும் ஒரு இடி. 'நாங்க ரெண்டு பேரும் இப்ப சேர்ந்து இல்ல சார். செட் ஆகலை. கொஞ்ச நாள்ல முறைப்படி பிரிவை அறிவிக்கலாம்னு இருக்கோம்' என்கிறார் அந்த அப்பாவி இளைஞர்.
நிறைவாக இன்னொரு கசந்த காதல் கதை.
பிரபல சீரியலில் ஜோடியாக நடித்த இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்தார்கள். பொண்ணு பக்கத்து மாநிலம். எல்லை தாண்டிய காதல் என்றாலும் பெரிய அளவில் எதிர்ப்பில்லை. எனவே திருமணத்தில் சிக்கல் இல்லை. கல்யாணம் ஆன புதிதில், 'இனி நான் தமிழ்நாட்டு மருமகளாக்கும்' எனப் பூரித்துப் போய்ச் சொன்னார் நடிகை.
மகிழ்ச்சியாகக் கடந்தன ஆண்டுகள். நடிகை பிசியாக இருக்க, நடிகருக்கு வாய்ப்புகள் குறைந்தன. இது மட்டும்தான் காரணமா தெரியாது, ஆனால் வீட்டில் இருவருக்கும் இடையில் மனதளவில் கோடு விழுந்தது. ஓரளவு இழுத்துப் பிடித்துச் சமாளித்துப் பார்த்தார்கள், முடியவில்லை. 'ஒரே வீட்டில் இருவரும் வாழ முடியாது' எனப் புரிந்து கொண்ட நடிகர் வெளியில் வந்து விட்டார். தற்போது இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். ஆனால் முறைப்படி பிரியவில்லை.
இருவரில் யார் மீது தவறு என்பது அவர்கள் இருவருக்கும்தான் தெரியும். எனவே இரு தரப்பு வீட்டாருமே இவர்களைச் சேர்க்க முயற்சித்து டயர்ட் ஆகி விட்டார்களாம். ஆனால், மனைவி கோபம் தணிந்து மீண்டும் தன்னுடன் வருவார் என நடிகர் நம்புகிறார். நடிகையோ, எது குறித்தும் அலட்டிக் கொள்ளாமல், ஷூட்டிங், மாடலிங் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் வரும் 'போங்கடீ நீங்களும் உங்க காதலும்'கிற டயலாக் நினைவுக்கு வருகிறதா, விடுங்க, 'எங்கிருந்தாலும் வாழ்க' சொல்லுவோம். 'காதலுக்கு மரியாதை' தர வேண்டாமா?
- அய்யனார் ராஜன்.