என்னைக் காப்பாற்றிய தென்னகத்து James Bond ! - நான் நிருபன்

நீ விழுந்த கார் ஒரு நல்ல மனுஷனோடது. உன்னால இன்னிக்கு அவரைப் பார்க்க முடிஞ்சது. ஓடாத கடிகாரம் ஒரு நாளைக்கு ரெண்டுவாட்டி சரியா மணி காட்டும். அப்படித்தான் இன்னிக்கு உன்னால ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு.
James Bond
James Bondtimepass

இது பத்திரிகை உலகிற்கு நான் வருவதற்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்.  அப்போது நான் கடலூரில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். கடலூர் முதுநகர்- கடலூர் புதுநகர் இரண்டையும் இணைக்கும் கெடிலம் ஆற்றுப் பாலத்தின் வழியேதான் பாண்டிச்சேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்லலாம்.

கல்லூரியின் விடுதியிலிருந்து அந்தப்பாலத்தின் வழியே நடந்துதான் நாங்கள் தினமும் கல்லூரிக்குப் போய் வருவோம். சிலநேரங்களில் அடித்துப்பிடித்துக் குளித்துக் கிளம்புவதற்கு தாமதமாகிவிடும். கல்லூரி ஆரம்பித்துவிடுவார்கள். பலமுறை திருநெல்வேலியைச் சேர்ந்த எங்கள் கல்லூரி முதல்வர் கூப்பிட்டு, 'டிசி வாங்கிட்டு ஊரப்பார்த்து ஓடிப்போயிருலே...சவுத்து மூதி! ' என திட்டுவார். விட்டால் அடித்துவிடுவார் என்பதுபோல இருக்கும் அவர் கோபம். இதனாலேயே அவசர அவசரமாக ஓடிப்போய் வகுப்பறையில் உட்கார வேண்டியிருக்கும்.

அப்படித்தான் அன்று கல்லூரிக்கு மிகத் தாமதமாகக் கிளம்பி ஓடினேன். ஓடினேன் என்பதைவிட பறந்து சென்றேன் என்றும்கூட சொல்லலாம். கால்களில் றெக்கை இல்லாத குறை. அப்படி ஒரு ஓட்டம். கெடிலம் ஆற்றுப் பாலத்தில் ஓடிய ஓட்டத்தில் எல்லோரும் திரும்பிப் பார்த்துச் சென்றார்கள். மாரத்தான் ஓட்டம் போல ஓடினால் தான் இன்று பிரின்சிபலின் திட்டுக்களில் இருந்து தப்பிக்க முடியும். 

இன்று லேட்டானால் கண்டிப்பாக ஊருக்குக் கடிதம் பறக்கும். அப்பாவை வரச் சொல்வார்கள் என்ற பயத்தில் அப்படி வேகமாக ஓடினேன். பாலத்தில் பைக்கில் சென்றவர்களும், கார்களில் சென்றவர்களும் என்னைத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள். பாலத்தின் நடுவே ஓரிடத்தில் சின்னதாய் பள்ளம் இருந்ததை நான் கவனிக்கவில்லை. அதில் கால் வைக்கக்கூடாது என்பதற்காக வலதுபக்கமாய் விலகி ஓடியபோதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 

என் பின்னால் வந்த ஒரு கார் என் திடீர் பாய்ச்சலில் குழம்பிப் போய் அதுவும் வலப்பக்கமாய் திருப்ப அந்தப்பக்கம் போன சைக்கிள் காரரை தட்டிவிடுவது போலச் சென்றது கார். மீண்டும் இடப்பக்கமாய் கார் திரும்ப சரியாக என் மீது காரின்  முன்பக்கம் தட்டியது. 

'ர்ர்ர்ர்ரப்' - சினிமாவில் தான் பறந்து போய் விழுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இன்டெர்வெல் வரும்போது மதன் பாப் காரில் இடித்து பறந்து போய் விழுவார் விஜய். அதுபோல பறந்து ரோட்டில் விழுந்தேன்.

'போச்சு  அவ்வளவுதான்!' என்று நினைத்தேன். காலிலும் கையிலும் அடி, முகத்தில் சிராய்ப்பு. ஆனால், ஏனோ கண்கள் கட்டிக்கொண்டு வந்தது. கண்விழித்துப்பார்த்தால், கடலூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்தேன். நல்லவேளையாக தலையில் அடிபடவில்லை. பட்டிருந்தால் இந்நேரம் இதை ஆவியாக வந்துதான் டைப் பண்ணியிருப்பேன். 

''தம்பி உன் பேரென்ன..?... யூ ஆர் வெரி லக்கி தெரியுமா..? கொஞ்சம் எசகுபிசகா விழுந்திருந்தா இந்நேரம் நிறைய ரத்தம் போயிருக்கும். ஆளு காலி ஆகிருப்பே..! உன்னை சேர்த்த சாருக்கு நன்றி சொல்லுப்பா!'' என்றார் அந்த மிடில் ஏஜ் டாக்டர். எதிரே ஒரு பெரிய மனிதர் சாந்தமாக என்னைப் பார்த்து, ''படவா... கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டேடா... இன்னிக்கு என் கார்ல வந்து நீ விழணும்னு எழுதியிருக்கு பாரு!'' என சிரித்தார். 

அந்த நபரை நான் எங்கோ பார்த்தது போல இருந்தது. யார் இந்த நபர். ஆங்... டக்கென ஞாபகத்துக்கு வந்தது. ''சார் நீங்களா?  எப்படி சார் இருக்கீங்க..? ஸாரி சார்... நான் காரைக் கவனிக்காம உள்ளே வந்து விழுந்துட்டேன்!'' என்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். சினிமாவில் ஹீரோவாக, குணச்சித்திரமாக, வில்லனாக நடித்து கிட்டத்தட்ட ரிட்டையர்டு ஆகும் ஸ்டேஜில் இருந்த மனிதர். ஊடகங்களில் ரொம்ப நல்லவர் என்று எழுதி வாசித்திருக்கிறேன்.

James Bond
'காம்பவுண்ட் சுவரால் பாலியல் புகாரில் சிக்கிய VIP' - நான் நிருபன் | Epi 14

''நானே தான்ப்பா...ரோட்டுல போறப்போ கவனமா இருப்பா... இதுமாதிரி பாலத்துல போறப்போ பாதசாரிகளுக்குப் போட்டிருக்குற ப்ளாட்ஃபார்ம்ல நட... இப்படி கார் போகுற பாதையில வேகமா ஓடாதே..! சரியா? பத்திரமா இரு கண்ணா!'' என்று என் கன்னத்தைத் தட்டி அட்வைஸ் செய்தார். தஞ்சாவூர் செல்ல தன்னுடைய மாருதி காரில் செல்ஃப் ட்ரைவ் செய்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக வந்திருக்கிறார் அந்த பிரபலம். கிட்டத்தட்ட 3 மணிநேரம் அங்குதான் அவர் இருந்திருக்கிறார். அதன்பிறகு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அன்று என் கல்லூரி நண்பர்களும், ஆசிரியப் பெருந்தகைகளும் மருத்துவமனையை நிரப்பி விட்டார்கள். பலர் கண்களில் அத்தனை பீதி தெரிந்தது. நான் 'அவுட்' என்றுகூட சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால், தெய்வாதீனமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. 

கல்லூரி பிரின்சிபால் நிச்சயம் என்னைத் திட்டுவார் என ஏகத்துக்கும் பயந்தேன். ஆனால் நேராக என்னைப் பார்க்க வந்தவர், ''நீ விழுந்த கார் ஒரு நல்ல மனுஷனோடது. நான் அவரோட ஃபேன். உன்னாலதான் இன்னிக்கு அவரைப் பார்க்க முடிஞ்சது. ஓடாத கடிகாரம் ஒரு நாளைக்கு ரெண்டுவாட்டி சரியா மணி காட்டும். அப்படித்தான் இன்னிக்கு உன்னால ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு. அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டேன்டா!'' என்றபடி சாத்துக்குடி பையை என் கையில் கொடுத்த்தார். என் கைகளை அழுத்தமாய் குலுக்கிச் சென்றார். 

டிஸ்சார்ஜ் ஆகி கை,கால்களில் போட்ட கட்டுக்களை அவிழ்க்க இரண்டு மாதங்கள் ஆனது. ஆனால், என் பிரின்சிபல் எல்லோரிடமும் தன் விருப்பமான நடிகரைப் பார்த்த குஷியை பகிர்ந்து பகிர்ந்து டயர்டாகி விட்டிருந்தார். நல்லவேளை அவர் என்னை எதுவும் சொல்லவில்லை.

James Bond
'பாடகர் சித்தரான பின்னணி இதுதானா!' - நான் நிருபன் | Epi 15

'அட, இதென்ன கூத்தா இருக்கு!' என நினைத்துக் கொண்டேன். சரி என் மீது....ஸாரி ஸாரி... நான் விழுந்த கார் யாருடையது தெரியுமா..? என்னை தன் காரில் தூக்கிப்போட்டு பொறுப்பாக மருத்துவமனையில் அட்மிட் செய்து, நான் பிழைத்துக் கொள்வேன் என்பதை உறுதி செய்துவிட்டுக் கிளம்பியது யார் தெரியுமா..?

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்... ஜெய் சங்கர்!    

(சம்பவங்கள் Loading...!) 

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com