உலக சினிமாவைத் திரும்பி பார்க்க வைக்கும் மலையாள சினிமாவின் மற்றோரு முக்கியமான படம்,'ஆடுஜீவிதம்'. இப்படம் 2008இல் வெளியான ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலாகும். இந்த நாவலை எழுதியவர் மலையாள எழுத்தாளர் பென்னி டேனியல் (pen name- Benyamin). பிருத்விராஜ் நடிப்பில் A.R. ரஹ்மான் இசையில் பிளெஸ்ஸியின் இயக்கத்தில், சுனில் K.S இன் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக வெளியாகியிருக்கிறது படம்.
கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற இந்நாவல் நஜீப் முஹம்மது என்ற ஒரு இளைஞன் எவ்வாறு ஒரு நல்ல வேலையையும் வாழ்க்கையையும் தேடி சவுத் அரேபியாவிற்குக் குடிபெயர்ந்து, அங்கிருந்த பாலைவனத்தில் சிக்கி ஒரு ஆடு மேய்க்கும் அடிமையாக வாழ்கிறான் என்பது தான் கதை. இக்கதை வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தொழிலாளிகள் எதிர்கொள்ளும் கொடூரங்கள் மற்றும் கொடுமைகளை சித்தரிக்கிறது.
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இக்கதையை திரைப்படமாக எடுக்க பிளெஸ்ஸி 2016ஆம் ஆண்டு முன்வந்தார். ஆரம்பத்திலிருந்தே இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள். ஆனால் 7 வருடங்களுக்கு பிறகு, இவ்வருடம் மார்ச் 28ஆம் நாள் இப்படம் வெளியாகியுள்ளது. நடுவில் நடந்தது என்ன?
* பிரித்விராஜ் இப்படத்திலிருந்து விலகியதாக பல வதந்திகள் 2016ஆம் ஆண்டு பரவிய வண்ணம் இருந்தன. அதற்கு பதிலடியாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஆடுஜீவிதம் எனது கனவுக் கதாபாத்திரம்" என்றும், "நவம்பர் 1,2017 முதல் மார்ச் 31,2019 வரை தேதிகளை இப்படத்திற்காக ஒதுக்கியுள்ளேன். ஏனெனில் பல உடல் மாற்றங்களை இப்படத்திற்கு நான் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
* 2019 ஆம் ஆண்டில், 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் வைரலாகியது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜோர்டானில் நடைபெற்று வந்தது. பிரித்விராஜ் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
* பின், நாம் எல்லோரும் அறிந்தது கொரோனா பொதுமுடக்கம். எல்லா படப்பிடிப்பும் முடங்கி போயின. படக் குழு ஜோர்டானில் சுமார் 70 நாட்களுக்கு சிக்கிக்கொண்டது. ஜோர்டானின் வாடி ரம் பகுதியில் ஆடுஜீவிதம் குழு இருந்தது. ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை படப்பிடிப்பைத் தொடர ஜோர்டானில் உள்ள அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றிருந்தாகவும், அணியில் உள்ள ஓமன் நடிகர்களில் ஒருவர் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் ஜோர்டான் அரசாங்கம் படப்பிடிப்பை அனுமதிக்கும் தனது முடிவை மாற்றியது.
* 2021ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, நடிகர் பிரித்விராஜ் அவரது facebook பக்கத்தில், ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க போவதாக ஹின்ட் கொடுத்திருந்தார். அவர் 'கடுவா' படத்திற்காக உடல் எடையை அதிகரித்து கொண்டிருந்ததாகவும், பின் "ஆடு " தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
* ஒரு வழியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நடிகர் பிரித்விராஜ் அவரது x பக்கத்தில், "14 ஆண்டுகள், ஆயிரம் தடைகள், ஒரு மில்லியன் சவால்கள், ஒரு தொற்றுநோயின் மூன்று அலைகள்… ப்ளெஸ்ஸியின் #ஆடுஜீவிதம் … பேக் அப்!" என்று படப்பிடிப்பு முடிந்ததை அறிவித்தார்.
நவம்பர் 6ஆம் தேதி, 2023, படத்தின் first look வெளிவந்தது. அதே ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி படத்தின் ரிலீஸ் ஈத் அல்-பித்ர் மற்றும் விஷு வார இறுதியை முன்னிட்டு, 10 ஏப்ரல் 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பிப்ரவரியில், படம் 28 மார்ச் 2024 க்கு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆடுஜீவிதம் பல வருடங்களின் உழைப்பு. "என் மகள் என்னுடைய எந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. ஆடுஜீவிதத்தை பெருமையுடன் காட்டுவேன். இது எனக்கும் பிளெஸ்ஸிக்கும் பல ஆண்டுகளின் கனவு. இப்போது, அது வெளியீட்டிற்கு தயாராகியிருப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தருகிறது" என்று நடிகர் பிரித்விராஜ் கூறியிருக்கிறார்.
- தாரிகா பாலகண்ணன்.