Tamil Serials : நிஜமாக மல்லுக்கட்டும் மாமியார்-மருமகள் நடிகைகள்! - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 5

மாமியார் மருமகள் பிரச்னை தொடங்கிய காலம் தொட்டே 'சீரியல்களின் கதை' என்றாலே முக்கால்வாசி சீரியல்களில் இந்த ஒரு விஷயம்தான் ஹைலைட்டாக இருந்து வருகிறது.
Tamil serials
Tamil serialsTimepass

கேட்டால், 'எந்த வீட்டுல இல்ல; வீட்டுக்கு வீடு நடப்பதைத்தானே காட்டுகிறோம்' என்பார்கள்,இயக்குநர்கள்.

சீரியலில் மாமியார் கேரக்டரில் கொடுமைகள் செய்பவராக நடிக்கும் நடிகையை 'நிஜத்திலும் அவ்வாறே இருப்பார்' என நினைக்கிற அப்பாவி(?) சீரியல் ரசிகர்களெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகிலும் இருக்கிறார்கள்.

இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஒரு மாமியார் மருமகள் விவகாரம்தான். 'சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாங்க ரெண்டு பேருமே டெரர்தான்' என இரண்டு நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்துக் கொள்ளாத குறையாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அந்த  மாமியார் மருமகள்  யார் எனப் பார்க்கலாமா?

ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'மாரி'. இந்தத் தொடரில் மாமியார் கேரக்டரில் சீனியர் நடிகை சோனாவும் அவருடைய மருமகள்களில் ஒருவராக 'தெய்வ மகள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஷப்னமும் நடித்து வருகின்றனர்.

சீரியலின் ஆரம்ப எபிசோடுகளில் சோனா - ஷப்னம் இருவருக்குமிடையில் அப்படியொரு நல்ல நட்பு இருந்து வந்ததாம். பிரேக் சமயங்களில் இருவரும் ஜாலி, கேலி என அரட்டை அடித்தபடி இருந்திருக்கிறார்கள். கதைப்படி மற்ற மருமகள்களெல்லாம் மாமியாருக்கு அடங்கிப் போக, ஷப்னம் மட்டும் மாமியாருக்கு அடங்காத, மாமியாரை கேள்வி கேட்கும் மருமகளாக வருவாராம்.

ஷப்னத்தைப் பொறுத்தவரை இயல்பிலேயே கொஞ்சம் கலகலப்பானவர். ஷூட்டிங்கில் வசனத்தை அப்படியே பேசாமல் டைமிங்காக பஞ்ச் பேசுவது, ஹுயுமர் பண்ணுவது என இருப்பாராம். இவர் நடித்த சீரியல்களில் இயக்குநர்களுமே இதை அனுமதித்திருக்கிறார்கள். இப்படியான சூழலில், 'மாரி தொடரில் ஒரு காட்சி படமாக்கப் பட்டிருக்கிறது.

அதாவது நடிகை சோனா கீழே விழுவது போல் ஒரு காட்சி. அவரை ஷப்னம் தாங்கிப் பிடிக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கிற போது, 'என்ன அத்தே, இந்தக் கனம் கனக்குறீங்க' எனக் கேட்டுக் கூடவே சில வார்த்தைகளையும் ஷப்னம் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அது சோனாவைக் கோபப் படுத்தியதாகவும், அன்று முதல் இருவருக்குமிடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேச்சுவார்த்தை குறையத் தொடங்கியதாகவும் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக அந்த சீரியல் தொடர்பான சிலரிடம் பேசியபோது, தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசினார்கள்..

''துறுதுறுன்னு துடுக்காப் பேசறது ஷப்னத்துடைய குணம்தான். ஆனா இந்தக் குணம்தான் சோனாவுக்கும் அவங்களுக்கும் இடையில் பிரச்னைக்கும் காரணமாச்சோன்னு தோணுது. ரெண்டு பேருக்கிடையில் பிடிக்கலைன்னா அவரவர் பேசாம இருந்தாலே பிரச்னை பெரிதாகாது. ஆனா ஒருத்தருக்கொருத்தர் பின்னாடி பேசறது, சாடைமாடையாப் பேசறதுனு போச்சுன்னா சண்டை பெரிசாகத்தானே செய்யும்?அதுதான் நடந்தது. ஒருநாள், சோனா என்ன சொன்னாங்கன்னு தெரியலை, ஷப்னம் பதிலுக்கு அவங்ககிட்டச் சண்டைக்குப் போக, அந்த இடமே அமளியாகிடுச்சு.மறுநாள்ல இருந்து 'ஷப்னம் கூட சீன் இருந்தா நான் நடிக்க வரமாட்டேன்' என யூனிட்டில் சோனா சொன்னதாகவும், பதிலுக்கு ஷப்னமும் ' சோனா குறித்துச் சேனலிடம் புகார் தெரிவித்ததாகவும் பேசிக்கிட்டாங்க'' என்றார்கள் அவர்கள்.சேனல் தரப்பிலோ, சோனா, ஷப்னம் இரண்டு பேரையும் சமாதானமாகப் போகும்படி வற்புறுத்தினார்களாம்.ஆனாலும் சோனா விடாப்பிடியாக ஷப்னமுடன் ஒரே காட்சியில் நடிக்க மறுத்து வருகிறாராம்.

சில தினங்களுக்கு முன் சீரியலில் கதைப்படி மகளிர் தினத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். கொண்டாட்ட எபிசோடு என்பதால், அதற்குரிய உடைகளில் வரும்படி முதல்நாளே எல்லா ஆர்ட்டிஸ்டுகளிடமும் சொல்லியிருக்கிறார்கள். ஷப்னமும் அப்படியே சென்றிருக்கிறார்.,மறுநாள் ஷூட்டிங் தொடங்கியதும், ஷப்னம் இருந்தால், சோனா வர மறுப்பாரோ என நினைத்த படக்குழு ஷப்னத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லோரையும் வைத்துக் காட்சிகளை எடுத்திருக்கிறது. இதனால் அங்கிருந்து அழுதபடியே வெளியேறினாராம் ஷப்னம்.'இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம், அதற்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் சீரியலில் தொடர்ந்து நீடிப்பதா வேண்டாமா' என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருக்கிறாரம் ஷப்னம்.தயாரிப்பு மற்றும் சேனல் தரப்பிலோ 'இதென்னப்பா பெரிய அக்கப்போரா இருக்கு' என்றபடி முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

-

அய்யனார் ராஜன்

(அடுத்த வாரம் பார்க்கலாம்..!)

Tamil serials
Tamil Serials : சீரியல் மாமியார் அட்ராசிட்டிஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com