பதான் உலகெங்கிலும் இன்று வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது.
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பதான் படம் இன்று ஜனவரி 25 திரைக்கு வந்துள்ளது.
இப்படத்திற்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர்.
பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
மும்பையில் பதான் படத்தின் முதல் காட்சி நேற்று இரவு 12 மணிக்கு பாந்த்ரா கேலக்ஷி தியேட்டரில் திரையிடப்பட்டது.
மும்பை முழுக்க தியேட்டர்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ராட்சத பேனர்கள் வைத்தனர்.
திரைப்பட தொழில் நிபுணர் தரன் ஆதர்ஷ் பதான் குறித்து டிவிட்டரில் கூறுகையில், "100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் பதான் வெளியாகிறது. இந்த அளவுக்கு அதிகமான நாடுகளில் வெளியான இந்திய திரைப்படம் இதுதான்." என்று கூறியுள்ளார்.
மேலும், "முதல் நாளில் 4 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை முதல் நாளில் அதிக டிக்கெட்கள் விற்பனையான முதல் ஐந்து படங்களோடு பதான் பட டிக்கெட் விற்பனையையும் ஒப்பிட்டு காட்டியுள்ளார். திங்கட்கிழமை மாலை வரை பதான் படத்திற்கு 3.9 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.