'இது குழந்தை பாடும் தாலாட்டு' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 5

டைட்டில் கார்டில் டி.ராஜேந்தரின் பெயர், 'மூலக்கதை, வசனம், பாடல்கள், இசையாக்கம்:ராஜேந்திரன்' என இருந்தாலும், படத்தின் நாயகனாக டி.ராஜேந்தரே கொண்டாடப்பட்டார்.
டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்நினைவே ஒரு சங்கீதம்

1991, ஆகஸ்ட் மாதம். நான் பிஜிடிஸிஏ படிப்பதற்காக திருச்சியில் உள்ள அந்த தனியார் கல்லூரியில் நுழைந்தபோது, எனது வாழ்க்கையின் துயரமான காலகட்டத்தில் இருந்தேன். அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி., தாவரவியலில் யுனிவர்ஸிட்டி தேர்ட் ரேங்க் வாங்கியிருந்தேன்.

திருச்சியில் இருந்த 3 பிரபலமான கல்லூரிகளில் எம்.எஸ்ஸி., தாவரவியலுக்கு விண்ணப்பித்திருந்தேன். பாரதிதாசன் பல்கலைகழகத்தில் தேர்ட் ரேங்க் வாங்கியிருந்ததால், எப்படியும் எம்.எஸ்ஸி சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் மூன்று கல்லூரிகளிலும் எனக்கு சீட் கிடைக்கவில்லை.

எனவே வருடம் வீணாகி விடும் என்று, ஈவ்னிங் காலேஜில் எனது படிப்புக்கு சம்பந்தமில்லாத பிஜிடிஸிஏவில் சேர்ந்தேன். அரியலூர் போன்ற சிற்றூரிலிருந்து திருச்சி நகரத்திற்கு வந்ததும், திருச்சி பசங்கள் ஸ்டைலாக உடையணிந்து உற்சாகமாக திரிந்ததும், மிகவும் ஒல்லியான, முகத்தில் பருக்கள் நிறைந்த, தலையில் கோரைமுடியும் சேர்ந்த எனது தோற்றம் குறித்த தாழ்வுணர்ச்சியும் சேர்ந்து, என்னை மிகவும் தனியனாக நான் உணர்ந்த காலகட்டம் அது. எனவே இயல்பாக அனைவருடனும் கலகலப்பாக பழகும் நான், அந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது தாழ்வு மனப்பான்மையின் கூட்டுக்குள் உறைந்துபோயிருந்தேன்.

டி.ராஜேந்தர்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

யாருடனும் பேசாமல் கல்லூரிக்கு வந்து செல்வது… கல்லூரி நூலகத்தில் தினமும் ஒரு கதைப் புத்தகம் படிப்பது… என்று முற்றிலும் ஒடுங்கிப்போயிருந்தேன். கடைசி வரிசையில் என்னருகில் அமர்ந்திருந்த கதிர் மற்றும் சுந்தரிடம் மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவேன். பெரும்பாலும் வகுப்பை கவனிக்காமல், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி ஏதேனும் சிந்தனையில் இருப்பேன்.

ஒரு நாள், மாலை வெய்யில் ஜன்னல் கம்பிகள் வழியே நுழைந்து டெஸ்கில் மாயவித்தைப் புரிந்துகொண்டிருந்த கணத்தில், டெஸ்கில் ஒரு பெண்ணின் நிழல். முதலில் நிழல் நின்றது. பின்னர் அசைந்தது. திரும்பிப் பார்த்தேன். ஜன்னலுக்கு வெளியே ஒரு இளம்பெண் நின்றபடி குனிந்து தனது நோட்டுப் புத்தகத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

முன் நெற்றி முடிகள் கற்றையாக அவள் மூக்கு வரை விழுந்து, அவள் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. தேடியது கிடைத்தவுடன், அவள் நெற்றி முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கியபடி நிமிர்ந்தபோது வீழ்ந்து கிடந்த வாழ்க்கையிலிருந்து நானும் நிமிர்ந்தேன்.

முதன் முதலாக பார்த்த அந்த முழு முகமும், இத்தனைக் காலத்திற்கு பிறகும் இன்னும் ஒரு துளியும் சிதையாமல், ஒரு அழியாச் சித்திரமாக எனக்குள் உறைந்திருக்கிறது. சற்றே முதிர்ந்த தோற்றத்தில் அவள் மூக்குத்தி அணிந்திருந்தாள். சந்தன நிற முகத்தின், ஒரு பக்க கன்னத்தில் படர்ந்திருந்த மாலை இளம் வெய்யிலில் அவள் முகம், மஞ்சள் ஊற்றிய தங்கம் போல் மின்னியது.

கீழுதட்டுக்கு கீழே தங்கத்தட்டில் மையிட்டது போல் ஒரு அழகிய மச்சம். அப்போது யாரையோ பார்த்து அவள் சிரித்தபோது, பௌர்ணமி நிலவின் மீது உருகிய வெள்ளியைக் கொட்டியது போல் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. அதற்கு முன்பும் பின்பும் எத்தனையோ அழகிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவள் முகத்தில் எந்நேரமும் நிலவிய ஒரு பரிசுத்தமான, பரிபூர்ண அமைதியை வேறெங்கும் கண்டதில்லை. எவ்வளவு கலவர பூமியிலும் சமாதானத்தை கொண்டு வந்து விடும் அமைதி முகம் அது.

ஒரு வெள்ளைப் புறா, மழைக்கால மேகங்களுக்கு நடுவே வாயில் வெள்ளை ரோஜாப்பூவை ஏந்திக்கொண்டு பறப்பதுபோல், அவள் என் உள்ளுக்குள் சிறகுகள் படபடக்காமல்
அமைதியாக பறந்தாள். அவ்வளவு நாள் கொந்தளித்துக்கொண்டிருந்த எனது மனம் நெடுங்காலத்திற்கு பிறகு அமைதியானது. ஒரு ஆண் பிறக்கும்போது மட்டும் அல்ல. அவன் தற்காலிகமாக இறக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பெண்களே அவனை உயிர்ப்பிக்கிறார்கள்.

அவளைப் பார்த்த அடுத்த கணமே, இடைக்காலத்தில் என்னைக் கைவிட்டிருந்த கவிதைத் தாய் மீண்டும் என் எழுதுகோலில் குடியேறினாள். உடனே அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அவளை மறுநாளும் சந்தித்தேன். மீண்டும் கவிதை எழுதினேன். தினந்தோறும் பார்த்தேன். தினந்தோறும் கவிதைகள். அந்தக் கவிதைகளை, நான் எப்போதும் நண்பன் போல் பழகும் எனது பெரிய தம்பி தினகரனிடம் காண்பித்தேன்.

அப்போது காதலிலிருந்த அவன், “கவிதைல்லாம் சூப்பரா இருக்குடா… ஏன் இப்படி பிட்டு பேப்பர்ல எழுதுற நான்சென்ஸ்…” என்று வெள்ளைத் தாள்களை ஒன்றாக தைத்து, அதற்கு அட்டைப் படமாக அவன் காதலி அனுப்பியிருந்த ரோஜாப்பூ படம் போட்ட வாழ்த்து அட்டையை ஒட்டி ஒரு புத்தகம் போல் ஆக்கித் தந்தான். முதல் பக்கத்திலேயே, ‘என்னைக் கடந்து செல்லும் மௌனத்தின் தேவதைக்கு ஒரு மௌன சமர்ப்பணம்”(அடேங்கப்பா…) என்று அட்டகாசமாக(?) எழுதி என்று எனது கவிதை வேள்வியை துவங்கினேன். கவிதை என்றால் பெரிதாக நினைத்துவிடாதீர்கள். ஒரு விடலைப் பையனின் முதிர்ச்சியற்ற கவிதைகள். சாம்பிளுக்கு ஒன்று.

டி.ராஜேந்தர்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'நெஞ்சம் மறப்பதில்லை பிரிந்த காதலின் தீராவலி'

அன்றொரு நாள் சூரியன்
வானத்திற்கு வரவே இல்லை.
எனக்குத் தெரியும்
நீ இன்னும் விழித்திருக்கமாட்டாய்.

அன்றொரு நாள்
காவிரி சுத்தமாக போனது.
எனக்குத் தெரியும்
நீ அதில் குளித்திருப்பாய்.
இன்னொரு நாள்
நீ இறந்துபோவாய்.
எனக்குத் தெரியும்
அன்று நானும் இறந்திருப்பேன்.

இந்தக் கவிதையை நான் வகுப்பில் எழுதிக்கொண்டிருந்தபோது, பக்கத்திலிருந்த கதிர் பார்த்துவிட்டான். படித்தவுடன் அவனுக்கு பிடித்துப்போய் சட்டென்று அந்த கவிதை நோட்டை
உயர்த்திப் பிடித்து, “சுரேந்தர் காதல் கவிதைல்லாம் எழுதுறான்…” என்று சத்தமாக கூறிவிட்டான். நோட்டு கை மாறியது. கைகள் மாறின.

பலரும் படித்துவிட்டு என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். குறிப்பாக பெண்கள். சட்டென்று அனைவரும் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள். ஜன்னல் தேவதை அளித்த சுவாசக்காற்றில் இப்போது உயிர்த்திருந்த நானும் அவர்களுடன் நன்கு பழக… ஐந்து பசங்கள்… நான்கு பெண்கள்… என்ற என் வாழ்வின் அற்புதமான ‘நவரத்னா’ கூட்டணி உருவாகியது.

இதற்கிடையே அந்த ஜன்னல் தேவதையும் கல்லூரி நூலகத்திற்கு வந்து அடிக்கடி புத்தகம் எடுப்பாள். நவீன அட்டைப் படங்கள் இடம் பெற்ற தீவிர இலக்கிய புத்தகங்களை அவள் எடுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, “ஆஹா… பாப்பா… பயங்கர இன்டெலக்சுவல். அழகு + அறிவு = அதி ஆபத்து” என்று விலகி இன்னும் தூரத்திலிருந்து ரசித்தேன். அவள் பெயர் மற்றும் எம்ஸிஏ படிக்கிறாள் என்பதை மட்டும் தெரிந்துகொண்டேனே தவிர, அவளை நெருங்க வேண்டும் என்று ஒரு நாள் கூட நினைத்ததில்லை.

என் பெண் தோழிகள் அனைவரும், “யாருன்னு சொல்லுடா…” என்று நச்சரித்தார்கள். அவர்களுக்குள் அவளா? இவளா? என்று பயங்கர விவாதம். ஆனால் நான் யாரென்று சொல்லவில்லை. இரண்டாம் செமஸ்டரின் போது எங்கள் கூட்டணியில் இணைந்த எம்ஸிஏ பெண் திவ்யாவும் அந்தக் கவிதைகளைப் படித்துவிட்டு, “யார்?” என்று பிடிவாதமாக கேட்க… நான் யார் என்று சொல்லிவிட்டேன்.

“டேய்… கவிதைல்லாம் செம சூப்பரா இருக்குடா… இந்த கவிதைங்கள அவகிட்ட
காமிக்கிறேன்டா… ஒத்துகிட்டாலும் ஒத்துக்குவாடா…”

“ஏய்… சீ…. அவ எங்க? நான் எங்க? பாக்குறப்பவே அப்படியே சாமி தரிசனம் மாதிரி உடம்பெல்லாம் நடுங்கி, ஒடுங்கிடுது. அவள்ல்லாம் போய் என்னை… சே…”
“சும்மா காமிக்கிறேன்டா…”
“வேண்டாம்…” என்று நோட்டை பிடுங்கிக்கொண்டேன். அவளிடம் சொல்லக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக்கொண்டேன்.

அந்தக் கல்லூரியில் படித்த ஓராண்டு காலமும், கல்லூரிப் பூங்காவில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் நடுவே…. மழைக்கு ஒதுங்கிய பஸ்ஸ்டாப்பில் அவள் கையை நீட்டி மழைவிட்டு விட்டதா என்று பார்த்த கணத்தில்… கல்லூரி கலைவிழாவில்…. என்று தினம் தினம் பார்த்து தினம் தினம் கவிதைகள் எழுதினேனே ஒழிய, அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. கடைசி வரையிலும் அவளை வெறுமனே பார்த்துக்கொண்டு, இப்படி ஒருவன் தன்னைப் பார்க்கிறான்… கவிதை எழுதுகிறான்… என்று அவள் அறியாதபடி இருந்துவிட்டு, அப்படியே அந்தக் கல்லூரியை விட்டு வந்துவிட்டேன்.

அவளிடம் கடைசி வரையிலும் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குரல் எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. ஆனாலும் அவள் இன்னும் எனக்குள் ஒலி நிற்காத சங்கீதமாக இருக்கிறாள். அந்தக் காலத்தில் ஆண்களாகிய நாங்கள், பெரும்பாலும் அப்படித்தான் இருந்தோம். இவ்வாறு வெறும் பார்வையிலேயே ரசித்துவிட்டு, உதிர்ந்துபோன காதல்கள் லட்சக்கணக்கில் இருக்கும். அந்த லட்சக் கணக்கிலான காதலன்களின் பிரதியநிதியாக அன்று நடிகர் முரளி இருந்தார். ஆனால் முரளிக்கு முன்பே, காதலியை தூரத்திலிருந்தே ரசித்துவிட்டு காதலைச் சொல்லாமல் தவித்து வாழும் கேரக்டரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் டி. ராஜேந்தர்.

டி.ராஜேந்தர் 80களில் செல்வாக்கோடு இருந்தமைக்கு மிக முக்கிய காரணம், அவரது பாடல்கள். மேலும் என்னைப் போன்ற தாழ்வுணர்வு மிக்க, பெண்களை நெருங்க அஞ்சும் அல்லது நெருங்கி நிராகரிக்கப்பட்ட பெரும்பாலான தமிழ் இளைஞர்களுக்கு அவரே குரு. எங்களின் சார்பாக அவர், “நான் ஒரு ராசியில்லா ராஜா…’, “தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?” ‘அமைதிக்கு பெயர்தான் சாந்தி’, ‘பொன்னான மனசே… பூவான மனசே… வைக்காத பொண்ணு மேல ஆசை…” என்று தமிழ் ஆண்களின் மனதில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார்.

டி.ராஜேந்தர்
நினைவே ஒரு சங்கீதம்: 'காதலின் தீபம் ஒன்று' | Episode 3

இது போல பல தமிழ்ப் பாடல்கள் வந்திருந்தாலும், தோற்றத்தில் கவர்ச்சி ஏதும் இல்லாத ஒரு சராசரி ஆண், பல படங்களில் அவரே இசையமைத்து, அவரே எழுதி நடித்து காதலின் வலியைப் பாடியபோது, அந்தப் பாடல்கள் ஆண்களின் மனத்தில், அது அவர்களுடைய சொந்தப் பாடல் என்ற உணர்ச்சியை அளித்தது. எனவே தொடர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டு காலம் அவர் அளித்த அத்தனைப் பாடல்களும், தமிழின் சூப்பர் ஹிட் பாடல்களாக விளங்கின. டி.ராஜேந்தரின் இந்த இசைப்பயணம், அவரது முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே அமோகமாக ஆரம்பமாகிவிட்டது.

மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த ராஜேந்திரனுக்கு, முதலில் அவர் அப்பா வைத்த பெயர் தேசிங்கு விஜயராஜேந்திரச் சோழன். பின்னர் அது டி. ராஜேந்திரன் ஆகி, சினிமாவுக்கு வந்து டி. ராஜேந்தர் ஆனது. சிறுவயதிலிருந்தே பாட்டு, இசை, நாடகம், சினிமா என்று மோகம் கொண்டு திரிந்த ராஜேந்திரன், மயிலாடுதுறை ஏவிஸி கல்லூரியில் படித்தபோது தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வருவார். படித்து முடித்த பிறகு திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு, சென்னைக்கு அவ்வப்போது சென்று வாய்ப்பு தேடிவிட்டு தோல்வியுடன் மயிலாடுதுறைக்கு திரும்புவார்.

அப்போது பாரதிராஜாவின், ’16 வயதினிலே’ படம் பார்த்துவிட்டு கவரப்பட்ட ராஜேந்தர், பெரிய தயாரிப்பாளர்களை எல்லாம் தேடாமல், ‘16 வயதினிலே’ படம் தயாரித்த எஸ்.ஏ. ராஜ்கண்ணு போல் உள்ளுரிலேயே ஒரு தயாரிப்பாளரைப் பிடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வடகரை என்ற கிராமத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர், சிங்கப்பூரில் மணி எக்ஸ்சேஞ்ச் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ‘தணியாத தாகம்” என்ற தனது கதையை திரைப்படமாக எடுக்க ஆசை.

அதற்காக அவர் சிங்கப்பூரிலிருந்து மயிலாடுதுறை வந்தபோது, அவருடைய நண்பர் ஆரூண் மூலமாக ராஜேந்தர் இப்ராஹிமை சந்தித்து ‘ஒரு தலை ராகம்” கதையைக் கூறினார். இப்ராஹிமுக்கு கதை பிடித்துப்போனது. ஆனாலும் உடனே படத்தை ஆரம்பிக்கவில்லை. எனவே டி. ராஜேந்தர் தினமும் மயிலாடுதுறையிலிருந்து வடகரை சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவார். பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஏறத்தாழ முற்றிலும் புதுமுகங்களுடன் தான் படித்த ஏ.வி.ஸி கல்லூரி மற்றும் மயிலாடுதுறையிலேயே படத்தின் படப்பிடிப்பை நடத்தினார்.

டி.ராஜேந்தர்
'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

எட்டு லட்சத்திற்கு பட்ஜெட் போட்டிருந்தனர். ஆனால் படத்தை முடித்தபோது 12 லட்சம் செலவாகியிருந்தது. படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனந்த் தியேட்டருக்கு மேலிருந்த மினி ஆனந்த் தியேட்டரில் படம் பல முறை வினியோகஸ்தர்களுக்காக திரையிடப்பட்டது. அப்போதும் யாரும் வாங்க முன்வராததால், தயாரிப்பாளர் இப்ராஹிமே ஷேரிங் முறையில் தைரியமாக தானே படத்தை வெளியிட்டார்.

படம் முதலில் தமிழ்நாட்டில் 30 தியேட்டர்களில்தான் வெளியானது. முதல் நான்கைந்து நாட்கள் பெரிதாக கும்பல் இல்லை. பின்னர் ‘ஒரு தலை ராகம்’ பாடல்கள் மக்களைச் சென்றடைய… படம் பிக் ஆப் ஆக ஆரம்பித்தது. படம் அக்கால கல்லூரி வாழ்க்கையையும், காதலைச் சொல்லமுடியாமல் மருகும், சொன்னாலும் நிராகரிப்பில் துவண்டுபோன தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பிரதிபலித்ததால், இளைஞர்கள் கும்பல் கும்பலாக ‘ஒரு தலை ராகம்’ பார்க்கச் சென்றனர். தமிழகம் டி.ராஜேந்தரின் பாடல்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

பின்னர் இத்திரைப்படம் பல தியேட்டர்களில் வெளியாகி, பல இடங்களில் சில்வர் ஜுப்ளி கண்டது. சென்னை லிபர்டி தியேட்டரில் ஓராண்டுக்கு மேல் ஓடியது. படத்தில் ‘இயக்கம்’ என்று தயாரிப்பாளர் இப்ராஹிமின் பெயர்தான்தான் வந்தது என்றாலும், அத்திரைப்படத்தின் அற்புதமான பாடல்கள் காரணமாக, அத்திரைப்படத்தின் வெற்றி டி.ராஜேந்தருக்கே புகழைக் கொண்டு வந்து சேர்த்தது.

படத்தின் டைட்டில் கார்டில் டி.ராஜேந்தரின் பெயர், “மூலக்கதை, வசனம், பாடல்கள், பாடல் இசையாக்கம்:ராஜேந்திரன்(பின்னணி இசை ஏ.ஏ. ராஜ்)” என்று இருந்தாலும், ஒரு தலை ராகத்தின் நாயகனாக டி.ராஜேந்தரே கொண்டாடப்பட்டார். இவ்வாறு டி.ராஜேந்தரை தமிழுக்கு புகழுடன் அறிமுகப்படுத்திய ஒரு தலை ராகத்தின் அனைத்துப் பாடல்களும், ஒரு பெண்ணை நினைத்து, உருகி உருகி காதலித்து, ஏங்கி ஏங்கி, மருகி மருகி பாடும் பாடல்கள். அத்தனையும் சூப்பர்ஹிட்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’. ஒரு தலைக் காதலின் துயரத்தைச் சொல்லும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், நீங்கள் தொலைவிலிருந்து ரசித்துவிட்டு, உங்கள் வாழ்க்கையிலிருந்து காணாமல் போன் காதலிகள் ஒரு வினாடி உங்கள் மனதில் மின்னி விட்டு மறைவார்கள்.

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

டி.ராஜேந்தர்
'Thuvinu vs Varisu, விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், Ponniyin selvan' - டைம்பாஸ் மீம்ஸ்

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு..
இது இரவு நேர பூபாளம்
உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com