'ஈழப்போராளிகளின் எழுச்சிப் பாடல்' - நினைவே ஒரு சங்கீதம் | Epi 4

இப்பாட்டு இலங்கைல உள்ள எங்களோட சகோதர, சகோதரிங்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய பாடலாக இருக்கும் என்று கூறினார். அப்பாடல் ஈழத்தமிழர்களின் எழுச்சிப் பாடலாக அமைந்தது.
நினைவே ஒரு சங்கீதம்
நினைவே ஒரு சங்கீதம்டைம்பாஸ்

2003. அந்த மரத்தடியில் ஏறத்தாழ 500 பேர் காத்துக்கொண்டிருந்தோம். நான் உட்பட அந்த 500 பேரும் முன்னாள் அரசு ஊழியர்கள். 2003 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் நடைபெற்ற கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். மறுநாளே நான் உட்பட பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குத் திரும்பியபோதும், பணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றம் வரை வழக்குச் சென்று, கடைசியில் 999 அரசு ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பணியில் சேர்த்துக்கொள்ளப்படாத அந்த 999 ஊழியர்களில் ஒருவனான எனக்கு இன்று வரையிலும் ஒரு சிறு வருத்தம் உண்டு.

அந்த எண்ணிக்கை 1000 என்று இருந்திருந்தால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கலாம். இந்த 999 ஊழியர்களுக்கும், வேலையில் இருக்கும் பணியாளர்களிடம் பணம் வசூல் செய்து, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி சங்க அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தார்கள். சங்க அலுவலகம் அரசால் சீலிட்டு மூடப்பட்டிருந்தமையால், சங்கம் வெளியே மரத்தடியில்தான் இயங்கிக்கொண்டிருந்தது. ஜுலை 3 அன்று நாங்கள் கழுத்து நரம்பு புடைக்க ஆவேசமாக முழங்கிய வாசகங்கள் என் காதில் ஒலித்தது.

நினைவே ஒரு சங்கீதம்
'முன்னாள் கனவுக்கன்னியின் கோபம்' - நான் நிருபன் தொடர் | Epi 4

போராடுவோம்… போராடுவோம்….

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்…

நாளை நமதே…

திரும்பித் தா…திரும்பித் தா…

சலுகைகளைத் திரும்பித் தா…

என்பது போன்ற முழக்கங்களுடன் துவக்கப்பட்ட அந்த போராட்டம், ஒரே நாளில் நசுக்கப்பட்டு, லட்சக்கணக்கான நபர்கள் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தில், கடைசியில் நாங்கள் 999 பேர் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தோம். 1000 ரூபாய் பணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் நபர்களின் முகங்களைப் பார்த்தேன். பெரும்பாலானோர் முகம் விரக்தியாகவும், பணத்திற்காக காத்திருக்கும் அவமான

உணர்வுடனும் இருந்தது. கூடவே முகத்தில் பசியும் தெரிந்தது. மணி இப்போது மதியம் 2. பணம் கொடுக்கிறார்கள் என்று காலை 10 மணிக்கே அனைவரும் வந்துவிட்டோம். ஆனால்

பணம் வரவில்லை. சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்றும், பணம் வந்ததும் அங்கிருந்து பிரித்து அனுப்புவார்கள் என்று கூறியிருந்தார்கள்.

நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. பணம் வந்தபடியாக இல்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை ஐயாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நான், ஒற்றை ஆயிரம் ரூபாய்க்காக காலை முதல் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த அவலம் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது.

வேண்டாம் என்று செல்லவும் முடியாது. எனது மனைவி ஹவுஸ் ஒய்ஃப்தான் என்பதால், எனக்கு வேறு வருமானம் இல்லை. எனவே இந்தப் பணம் எனக்கு அவசியம் தேவை. கையாலாகாமல் ஒரு ஆத்திரம். வேகமாக எழுந்து, கன்னத்தில் கைவைத்தபடி கவலையாக அமர்ந்திருந்த தலைவரை நோக்கிச் சென்றேன்.

கோபத்தை அடக்கிக்கொண்டு நான், “ஏன் சார்? இழப்புகளை சங்கம் ஏற்கும்ன்னு

சொன்னீங்க. இன்னைக்கி கடைசில வெறும் 999 பேர்தான் வேலைக்கு போகாம இருக்கோம். 10 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிற மாநிலத்துல, ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டாக் கூட 10 லட்சம் வரும் சார்.”

“கலெக்ட் பண்ணிட்டிருக்காங்க சுரேந்தர்… ஏன்னு தெரியல. லேட்டாவுது” என்ற தலைவரின் குரல் பலவீனமாக ஒலித்தது.

“சார்…. இங்க இருக்கிறவங்கள்லாம் கௌரவமா வாழ்ந்தவங்க சார். வெக்கத்த விட்டுத்தான் இங்க வந்து உக்காந்துருக்கோம். ஆக்ச்சுவலா பாத்தா, இப்படி பொது இடத்துக்கு வரவழைச்சு நீங்க எங்கள அசிங்கப்படுத்தக்கூடாது. வீடு தேடி வந்து கௌரவமா கொடுத்திருக்கணும். அப்படியே வரச்சொல்லியிருந்தாலும், வந்தவுடனே வேகமா கொடுத்து அனுப்பி வச்சிருக்கணும். வெறும் ஆயிரம் பேருக்கு, மாசம் ஆயிரம் ரூபாய் கலெக்ட் பண்ணிக் கொடுக்கிறதுக்கு கூட வக்கில்லன்னா, அதுக்கான ஆர்கனைசேஷன் கேபாஸிட்டி இல்லன்னா என்னாத்துக்கு சார் எங்கள போராட்டத்துல கலந்துக்கச் சொன்னீங்க? இங்க உக்கார உக்கார பேண்ட் சட்டை போட்ட பிச்சைக்காரன் மாதிரியே இருக்கு. நான் வரேன் சார்…” என்று சத்தமாக கூறிவிட்டு திரும்பி நடந்தேன்.

தலைவர், “சுரேந்தர்… சுரேந்தர்…” என்று அழைக்க அழைக்க… நான் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வீட்டிற்குச் சென்றவுடன் எனது மனைவி, “பணம் தந்தாங்களா?” என்றாள். “இல்ல… இன்னும் வரல. வந்தவுடனே தர்றோம்ன்னாங்க. நான் வந்துட்டேன்…” என்றவுடன் என் மனைவி என்னை கண் கலங்க பார்த்தாள்.

நினைவே ஒரு சங்கீதம்
'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

“சங்கம் பாத்துக்கும்ன்னு சொன்னீங்க…” என்று என் மனைவி கூறியதற்கு என்னிடம் பதில் இல்லை.

“எனக்கு பயமா இருக்குங்க…”

“என்ன பயம்?”

“எல்லாரும் சொல்றாங்க. நீங்க கடைசி 999 பேருல இருக்கீங்க. இனிமே வேலை கிடைக்க

சான்ஸே இல்லங்கிறாங்க. எனக்கு நம்பிக்கையே போய்டுச்சுங்க…” என்ற என் மனைவி சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஒரு மனைவி, தனது கணவன் மீதான பொருளாதார நம்பிக்கையை இழக்கும் கணங்கள் மிகவும் பலவீனமானவை. எனது மனைவியின் கண்ணீரை எதிர்கொள்ள இயலாமல் அறைக்குள் நுழைந்தேன். கதவைச் சாத்திக்கொண்டு, ஸிடி பிளேயரில் பழைய பாடல்களை ஒலிக்கவிட்டேன்.

நான் வாழ்க்கையில் மிகவும் மனம் தளரும் தருணங்களில் எல்லாம், இரண்டு பாடல்களை அடிக்கடி கேட்பேன். ‘சுமைதாங்கி’ படத்தில் இடம் பெற்ற ‘மயக்கமா… கலக்கமா” பாடல். மற்றும் ‘ஊமைவிழிகள்’ படத்தில் இடம் பெற்ற, “தோல்வி நிலையென நினைத்தால்…” பாடல்.

ஸிடியில் பாடல் ஒலித்தது.

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

கேட்க… கேட்க… பாடலுக்குள் ஆழ்ந்தேன்.

விடியலுக்கில்லை தூரம்

விடியும்

மனதில் இன்னும் ஏன் பாரம்?

தொடர்ந்து கேட்க…. கேட்க…. அந்த வெறும் வயிற்று மதியான வேளையில், அந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய தன்னம்பிக்கை நான் வேறு எப்போதும் உணராத விஷயம். எனக்குள்

ஒரு முடிவுக்கு வந்தேன்.

இனிமேல் இந்த ஆயிரம் ரூபாய்க்காக சங்க அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது. என்னிடம் என் தமிழ் இருக்கிறது. என் எழுத்து இருக்கிறது. இந்த எழுத்தை வைத்து பிழைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மறுநாளிலிருந்து ஏராளமான கதைகள் எழுத ஆரம்பித்தேன். அந்தத் தருணத்தில் தமிழ் வார, மாத இதழ்களில் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து சிறுகதைப் போட்டிகளிலும் கலந்துகொண்டேன். நான் வேலையில்லாமலிருந்த எட்டு மாத காலத்தில் கல்கி வார இதழின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக 8000 ரூபாயும், தினமலர்-வாரமலர் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக 5000 ரூபாயும், அமுதசுரபி சிறுகதைப் போட்டியில் ஐயாயிரம் ரூபாயும் பரிசும் பெற்றேன்.

அதில்லாமல் விகடன், குங்குமம், கல்கி, குமுதம் என்று அனைத்து இதழ்களிலும் நிறைய சிறுகதைகள் எழுதி சன்மானம் பெற்றேன். நான் தொடர்ச்சியாக அதிக சிறுகதைகள் எழுதிய காலம் என்று அந்த எட்டு மாதக் காலத்தையே சொல்வேன்.

அதற்கான ஆரம்ப எழுச்சி, “தோல்வி நிலையென நினைத்தால்’ பாடலிலிருந்தே துவங்கியது.

‘ஊமை விழிகள்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அப்பாடல் வெளிவந்த ஆண்டு 1986. இசைஞானி இளையராஜா தனது உச்சத்தின் உச்சியில் பிரமாண்டமாக விஸ்வரூபமெடுத்து நின்றுகொண்டிருந்த நாட்கள் அவை. சர்வசாதாரணமாக வருடத்திற்கு 30, 40 படங்கள்…

அவற்றில் மிகப் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்… என்று தமிழ் சினிமாவின் பொற்காலம் அது.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

அப்போது திடீரென்று திரும்பிய திசையெங்கும், “மாமரத்து பூவெடுத்து…” என்ற பாடல் ஒலித்து, தமிழர்களின் இதயத்தில் ஈரப்பூக்களைத் தூவியது. அப்போது இளையராஜா அல்லாத ஒருவர் நல்ல பாடல் அளிக்கமுடியும் என்பது, மிகவும் நம்ப முடியாத விஷயமாக இருந்தது.

அப்பாடல் மட்டுமல்ல. ‘ஊமை விழிகள்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் இளையராஜாவின் பாடல்களுக்கு இணையான வெற்றியைப் பெற்றன. இப்படத்திற்கான இசை மனோஜ்-கியான்(இணை இசையமைப்பு: ஆபாவாணன்).

திரைப்படக் கல்லூரியில் பயின்று வெளிவந்த ஆபாவாணன் தயாரிப்புடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, அவருடைய நண்பர் அரவிந்தராஜ் இயக்கிய “ஊமை விழிகள்’ படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர்களான மனோஜ்-கியான் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. மனோஜ் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர். கியான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் எப்படி தமிழுக்கு வந்தார்கள்?

ஆபாவாணன் ‘ஊழைவிழிகள்’ திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பு ‘இரவுப் பாடகன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். அதற்கு எல்.வைத்யநாதன் இசை. அந்தப் படத்தின் ரிகார்டிங்கிற்காக மும்பைச் சென்றபோது பாடகர் ஜேசுதாஸ், இசையமைப்பாளர் கியான் வர்மாவை ஆபாவாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கியான் வர்மாவும், அவரது நண்பர் மனோஜும் ஏற்கனவே ஒன்றிரண்டு ஹிந்தி படங்களுக்கு இசையமைத்திருந்தார்கள். கியான் வர்மா ‘இரவுப் பாடகன்’ படத்திற்கு உதவி இசையமைப்பாளராக இருப்பது என்று முடிவானது.

பிறகு ‘இரவு பாடகன்’ படம் ட்ராப் ஆகி, ஆபாவாணன் ‘ஊமை விழிகள்’ திரைப்படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வந்தார். அதற்காக அவரே பல ட்யூன்கள் போட்டு வைத்திருந்தார். இருப்பினும் அவருக்கு முறைப்படியான சங்கீத ஞானம் இல்லையென்பதால், கியான் வர்மாவையே அப்படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டார். கியான் வர்மா தனக்கு உதவியாக தனது நண்பர் மனோஜ் பட்நாகரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாலேயே உருவானது மனோஜ்-கியான் கூட்டணி. இவர்கள் குறைந்த காலமே புகழில் இருந்தாலும், செந்தூரப் பூவே, உழவன் மகன், மேகம் கறுத்திருக்கு போன்ற படங்களில் இன்று வரையிலும் மறக்கமுடியாத பல அற்புதமான பாடல்களை வழங்கினார்கள். விரைவிலேயே இந்த ஜோடி பிரிந்தது. கியான் வர்மா ‘இணைந்த கைகள்’ படத்திற்கு இசையமைத்தார்.

மனோஜ் இசையமைத்த ‘பந்தயக் குதிரைகள்’ என்ற படம் வெளியாகவே இல்லை. மனோஜ்-கியான் ஜோடி பல பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும் 'தோல்வி நிலையென நினைத்தால்’ பாடல் வேறு ஒரு காரணத்திற்காகவும் புகழ்பெற்றது.

1980களின் மையப்பகுதி அது. ஈழத்தில் ஏராளமான போராளிக் குழுக்கள் தோன்றி, தமிழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. ஈழத் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக, போராளி இயக்கங்கள் உருவாக்கிய ஈழ எழுச்சிப் பாடல்கள் அக்காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்களிடையே புகழ் பெற்றவையாகும். இந்த ஈழ எழுச்சி பாடல்களுக்கு இசையமைப்பாளர் தேவேந்திரன் கூட இசையமைத்துள்ளார். மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் போன்ற பிரபலமான தமிழ் பாடகர்கள் அப்பாடல்களை பாடியிருந்தார்கள்.

இந்த எழுச்சிப் பாடல்களை உருவாக்குவதற்கு முன்பாக போராளிகள் தமிழ் சினிமாப் பாடல்களையே மக்களின் எழுச்சிக்காக பயன்படுத்தி வந்தனர். அதில் மிக முக்கியமான பாடல் இலங்கை வீதிகளில் ஒலித்த ‘தோல்வி நிலையென நினைத்தால்” பாடல். இப்பாடலுக்கு இசையமைத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆபாவாணன், “80களில் இலங்கை பிரச்னை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயத்தில் பிசினஸில் தோல்வி ஏற்பட்டு நான் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன். அந்த தருணத்தில் நானே ட்யூன் போட்ட பாட்டுதான் தோல்வி நிலையென நினைத்தால். ட்யூன் போடும்போதே, “தோல்வி நிலையென நினத்தால்’ன்னுதான் ஆரம்பிச்சேன். மற்ற வரிகளை பிறகு எழுதினேன்.

அந்தப் பாடலை பதிவு செய்தபோது தமிழ் தெரியாத கியான் வர்மாவிடம் நான், “இந்தப் பாட்டு இலங்கைல இருக்கிற எங்களோட சகோதர, சகோதரிங்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய பாடலாக இருக்கும்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அவரின் எண்ணப்படியே அந்தப் பாடல் ஈழத்தமிழர்களின் எழுச்சிப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது மட்டுமில்லாமல், தோல்வியில் துவண்டு போயிருந்த என்னைப் போன்ற எத்தனையோ தமிழர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பாடலாக இருந்தது.

நினைவே ஒரு சங்கீதம்
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'செந்தூரப்பூவே பதினாறு வயதின் பாடல்'

வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்….

உடமையும் இழந்தோம்…

உணர்வை இழக்கலாமா?

உணர்வை கொடுத்து உயிராய்

வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கு இல்லை தூரம்…

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?

உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்

கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்… உடமையும்

இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

உணர்வை கொடுத்து உயிராய்

வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கு இல்லை தூரம் விடியும்

மனதில் இன்னும் ஏன் பாரம்?

உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்

கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள்

சிந்தட்டும்! பாதை மாறலாமா?

இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள்

வேகட்டும்…. கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்… உடமையும்

இழந்தோம்…. உணர்வை இழக்கலமா?

உணர்வை கொடுத்து உயிராய்

வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

(நன்றி: கானா பிரபாவின் radiospathy.com Wikipedia.)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com