பார்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தைப் போலவே இருக்கும் ஒருவரின் காணொளி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மலையாள இசையமைப்பாளர் நதிர்ஷா, தனது முகநூல் பக்கத்தில் இவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த இவரை, மலையாள யூட்யூப் சானலான 'தி ஃபோர்த்' நேரில் கண்டு பேட்டி எடுத்திருந்தது. எர்ணாகுளத்தில் உள்ள ஃபோர்ட் கொச்சி பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் இவரை 'ஃபோர்ட் கொச்சியின் ரஜினி காந்த்' என்று அழைக்கிறார்கள். இவரின் உண்மையான பெயர் சுதாகர் பிரபு.
அந்தப் பேட்டியில்..
நான் ஓய்வு நேரங்கள்ல இங்கருக்க பீச்சுக்கு போவேன். நான் சைக்கிள்லதான் போவேன். அப்படி போகும்போது, என் முடி ஸ்டைலா சைட்ல தூக்கிட்டு நிக்கும். அப்ப அங்கருக்க மக்கள் என்னை பார்த்து, 'இங்க பாருங்க ரஜினி காந்த்'னு கத்துனாங்க. அங்க சில நேரம் சினிமா ஷூட்டிங்கும் நடக்கும். அன்னைக்கும் ஒரு ஷூட்டிங் நடந்துச்சு. அப்ப மக்கள் கத்துறத பாத்த அவரு (நதிர்ஷா), என்ன கூப்பிட்டு, என் தோள்ல கைப்போட்டு செல்பி எடுத்துக்கிட்டு, அத ஃபேஸ்புக்லயும் போட்டார்.
ஜெயிலர் படம் பார்க்க போனேன். இன்டர்வெல் சமயத்துல வெளியில வரப்ப, அங்க இருக்க மக்கள் என்ன அடையாளம் கண்டுட்டாங்க. சின்ன சின்ன குழந்தைகள் இந்தக் கடை வழியா ட்யூஷன் போவாங்க. அப்ப என்ன பாத்து, 'ஹே.. ரஜினி காந்த்.. ரஜினி காந்த்'னு கூப்டுவாங்க.
என் மகள் சென்னையில அம்பத்தூர்ல இருக்காங்க. அவுங்க வீட்டுக்கு போவேன். விடியற்காலைல கடை திறக்கணும்ங்குறதுனால சீக்கரமாவ எழுந்து பழகிட்டதால, அங்கயும் எனக்கு 5.30 மணி போல முழிப்பு வரும். அப்ப சும்மா வாக்கிங் போனேன். அப்ப அங்கருக்க மக்கள் என்ன பாத்து, 'உண்மைய சொல்லட்டுமே.. நீங்க நம்ம தலைவர் ரஜினி காந்த் போல இருக்கீங்க'னு சொல்லுவாங்க. கை கொடுப்பாங்க. செல்பி எடுத்துப்பாங்க. இதெல்லாத்தையும் விட எனக்கு என்ன ஆசைனா.. நான் ரஜினி காந்த்தை பார்க்கணும். அப்பதான் எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.
விரைவில் ரஜினி காந்த்தை கண்டு, லோகேஷ் இயக்கும் அடுத்த ரஜினி காந்த் படத்தில் எல்.சி.யூ-வில் ஒரு ஏஜண்ட்டாக இணைய வாழ்த்துகள் சுதாகர் சேட்டா!