இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகர். கமலை பற்றி தன் பேட்டிகளில் லோகேஷ் சிலாகித்து பேசியவை, கமல் ரசிகர்களைத் தாண்டி எல்லோராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், கமலை இயக்கும் வாய்ப்பு விக்ரம் படம் மூலமாக லோகேஷுக்கு கிடைத்தது.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிக்கு கமலிடமிருந்து லோகேஷ் காரை பரிசாகப் பெற்றார். கமலின் Best Fan Boy Director யார் என்ற சந்தேகம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடமும் இருந்தது.
இப்படியிருக்க 2006-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ ரீரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல், விமர்சனம் என அனைத்திலும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் கமலின் சினிமா வாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதையும் கமல்ஹாசன் பெற்றார். தற்போது ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீவொர்க் செய்யப்பட்டு ஜூன் 23-ஆம் தேதி திரையரங்களில் வெளியானது.
மறுவெளியீட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தப் படம். சனி- ஞாயிறு நாட்களில் இப்படத்திற்கான டிக்கெட்கள் முழுவதும் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் Best Fan Boy Director "GVM"தான் என்று கூறி வருகின்றனர்.
ட்விட்டரில் ஒருவர், "எனக்கென்னமோ யார் ஆண்டவரின் Best Fan Boy Director என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது GVM சார்தான் என்று தோன்றுகிறது. Sorry to say this லோகி
ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார். அதற்கு லோகேஷ் கனகராஜூம், " சந்தேகமே வேண்டாம். அது GVM சார் தான்" என்று கூறியுள்ளார்.
இந்த ட்விட்க்கு கௌதம் வாசுதேவ் மேனனும், "நாயகன் மீண்டும் வரான் - விக்ரம் படத்திற்கு முன்பு வரைதான், இனி நான் முயற்சி செய்து உயர வேண்டும். இது ஒரு நல்ல சவாலாக இருக்கும் லோகி. ஆனால், இந்த சண்டையில சட்டை கிழியாது காதல் மட்டும் தான்" என்று ட்விட் செய்துள்ளார்.