குஜராத் மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் 31 பிரசவங்கள் நிகழ்ந்து சாதனை படைத்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள டைமண்ட் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 17 பெண் குழந்தைகள் மற்றும் 14 ஆண் குழந்தைகள் பிறந்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து தாய்மார்களும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தால் பெற்றோரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட இம்மருத்துவமனை வசூலிப்பதில்லை.
மேலும், தாய் சேய் நலனில் தனது உறுதியான அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று மருத்துவமனை கூறுகிறது. சாதாரண பிரசவத்திற்கான செலவு ரூ.1,800 ஆகவும், சிசேரியன் பிரசவத்திற்கான செலவு ரூ.5,000 ஆகவும் இருப்பதால், அனைவருக்கும் தரமான சுகாதார சேவை கிடைக்கும் என்று இந்த மருத்துவமனை நிறுவனம் கூறியது.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை பெற்ற தம்பதிகளுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பத்திரம் வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை மருத்துவமனை 2,000 பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 20 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டைமண்ட் மருத்துவமனையின் பொறுப்பாளர் தினேஷ் நவாடியா, மருத்துவமனையின் இந்த வரலாற்று சாதனை குறித்து பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த 31 குழந்தைகள் நலமாக பிறந்திருப்பது, மருத்துவமனையின் மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கல்வி கற்பிப்போம் என்று அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளை காப்போம் , பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்பது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சாரமாகும். இது முக்கியமாக உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், பஞ்சாப், பீகார் மற்றும் டெல்லியில் போன்ற பகுதிகளில் இத்திட்டம் தனது சிறப்பு கவனத்தைச் செலுத்துகிறது.
- அ.சரண்.