டிவி விளம்பரங்களில் இப்போது அதிக அளவில் ஆக்கிரமித்து இருப்பது ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்தான். இந்த விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
அது போன்று யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்காமல் இருக்கவேண்டுமானால் அதற்கு நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்ககூடாது என்று கூறி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த சலவை தொழிலாளி பிரகாஷ் கனோஜி வித்தியாசமான ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
அவர் துணி அயனிங் செய்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று பிச்சை எடுக்கிறார். இதுகுறித்து பிரகாஷிடம் கேட்டதற்கு, ஆன்லைன் சூதாட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. விளம்பர படங்களில் நடிக்கும் சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் தங்களது தொழிலில் நன்றாக சம்பாதிக்கின்றனர்.
அப்படி இருந்தும் ஏன் இந்த விளம்பரத்தில் நடிக்கிறீர்கள். உங்களுக்கு வருமானம் குறைவாக இருந்தால் சொல்லுங்கள் நான் பிச்சை எடுத்து அனுப்புகிறேன். அரசாங்கம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் பிச்சை எடுத்த பணத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு அனுப்பியும் இருக்கிறார். அவர் தெருக்களில் உண்டியல் ஏந்தி ஒலிபெருக்கில் பிச்சை கேட்பதை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
- மு.ஐயம்பெருமாள்.