அமெரிக்காவைச் சேர்ந்த ரேசா பலூச்சி ( Reza Baluchi) என்ற நபர் பெரிய சக்கரம் ஒன்றின் மூலம், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக புளோரிடாவிலிருந்து லண்டனுக்குச் செல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29 அன்று அமெரிக்கக் கடலோர காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தன்னந்தனியாக ஒரு மனிதன் சக்கரம் போன்ற அமைப்பில் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு, அவரை மீட்க அருகில் சென்றுள்ளனர்.
அப்போது அவர் அட்லாண்டிக் பெருங்கடலில் லண்டனுக்குப் பயணம் செய்வதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அதிகாரிகளுக்குத் தூக்கி வாரிப் போட்டதோ என்னவோ, அவரையும் அந்த அழகான சக்கரத்தையும் அலேக்காக தூக்கிச் சென்றுள்ளனர்.
இது பற்றி அவரிடம் பேச்சுக் கொடுத்த அதிகாரிகளிடம், நானே சொந்தமாகத் தயாரித்த இக்கப்பலில் லண்டன் வரை, அதாவது சுமார் 4,000 மைல் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பின்னர் காவல் துறையினர் இது மிதவைகளால் கட்டப்பட்டுள்ளதால், உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறியதும், கொதித்த பலூச்சி தனது பணிக்கு இடையூறு விளைவித்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு தான் அவர் 2014 முதலே கடலில் பயணம் செய்ய முயன்று வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் $250,000(இந்திய மதிப்பில் சுமார் 2.07 கோடி) பிணைத் தொகையாகச் செலுத்தி வ ஜாமீன் பெற்றார். அவர் கடலுக்குச் செல்லவோ அல்லது கப்பலில் ஏறவோ கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
- மு. இசக்கிமுத்து