இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் உயிர்பலி வாங்கிய அரிசி கொம்பன் என்ற ஒன்றை யானை கேரள வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கழுத்தில் சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது.
பிடிபட்ட யானை தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயில் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித்திரிந்தது.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையில் இருந்து இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. ஆலமரம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் சென்ற யானை அங்கிருந்த தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு உடல் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டு, கண்ணன் கோயில் வளாகத்திற்குள் சென்றது.
சிறிது நேரத்தில் அங்கிருந்து கம்பம் கூலத்தேவர் தெரு பகுதிக்கு வந்த யானையை கண்டு அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு ஓடிச் சென்றனர். மேலும் பலர் யானையை பார்த்து கூச்சலிட்டனர். இதில் பதற்றமடைந்த யானை ரோட்டோரத்தில் நின்ற ஆட்டோவை இடித்துவிட்டு சென்றது. மேலும் யானையை பார்த்து பதற்றமடைந்த பால்ராஜ் என்பவர் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
சாவகாசமாக நடந்து தெருக்கள் வழியாக சென்ற யானை அப்பகுதியை ஒட்டிய 7 ஏக்கர் பரப்பில் உள்ள புளியந்தோப்பில் புகுந்து ஓய்வு எடுத்தது. இதற்கிடையே கெஞ்சியகுளம் அருகே 2 ஆம் நம்பர் ரேஷன் அருகே யானை வந்த போது இரண்டு, மூன்று இடங்களில் சாணி போட்டது. உயிர்பலி வாங்கிய யானை வருகையால் பீதியில் இருந்த மக்கள், ரோட்டில் போட்டிருந்த சாணியை அள்ளி செல்வதில் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.
என்னங்க, பலபேர பலிகொண்ட யானை வந்திருக்கு இப்படி அதோட சாணிக்கு சண்ட போடாத குறையா அலைபாயுறீங்க என அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் கேள்வி எழுப்பினேன். அதையேன் கேக்குறீங்க தம்பி, இந்த சாணியை பாதத்தில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் மிதித்தால், பூசி கொண்டால் பித்த வெடிப்பு சரியாகி விடுமாம்.
யானையின் சாணியை மாடியில் காய வைத்து அதை சாம்பிராணி போடும் போது சேர்த்து போட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் நொடிகள் ஏதுவும் வராதாம் என்று கூறிவிட்டு இவிங்கள திருத்த முடியாத தம்பி என்றார்.
இதற்கிடையே அந்த யானையை யூடியூப் சேனல் நடத்தும் இளைஞர் ஒருவர் எக்சிக்ளூசிவ்வாக வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக வனத்துறையினர், போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ட்ரோன் கேமராவை புளியந்தோப்பிற்குள் பறக்கவிட்டார். அந்த ட்ரோன் யானைக்கு மேல் பறந்தபோது அதன் சத்தம் கேட்ட யானை பதற்றத்துடன் தெறித்து ஓடி 2 கிலோ மீட்டர் தாண்டியுள்ள வாழை தோப்புக்குள் புகுந்து ஓய்வெடுக்க தொடங்கியது.
அடப்பாவிகளா கொஞ்ச நேரம் பொருத்திருந்தா அந்த யானையை வனப்பகுதிக்குள் நேக்கா விரட்டி விட்டிருக்கலாம். இப்படி ட்ரோன் விட்டு பொழப்ப கெடுத்துவீட்டீர்களே என வனத்துறையினர் புலம்பினர்.
அன்றிரவு அரிசி கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, அரிசிகொம்பன் யானை செய்தியாளர் சந்திப்பு நடந்த மஹாலுக்கு பின்புற பகுதியில் வலம் வந்ததாக தகவல்கள் வந்ததன, இது செய்தியாளர் சந்திப்பு நடந்த அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டதால் அமைச்சரே சிறிது நேரம் ஆடி போய்விட்டார்.
என்னப்பா இவ்வளவு நேரம் யானையை விட மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்றவரே யானை என்றவுடன் ஜெர்க் ஆகிவிட்டார் என கட்சியினரே கமெண்ட் அடித்தனர்.
- மு.கார்த்திக்.