
நடந்து முடிந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண சென்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா தன்னுடைய 24 காரட் தங்கத்தால் ஆன ஐபோனை காணவில்லை என தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி நடந்து வருகிறது. இதனை அடுத்து பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியை காண மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் சினிமா பிரபலங்கள் போன்ற பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தனர். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகையும் , மிஸ் யுனிவர்ஸ் (2015 ) பட்டத்தை வென்றவருமான ஊர்வசி ரவுடேலா வந்திருந்தார். இப்போட்டி முடிந்தவுடன் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதில், தன்னுடைய 24 காரட் தங்க ஐபோனை காணவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "என்னுடைய 24 காரட் தங்க ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியமில் தவறவிட்டுவிட்டேன். அதனை யாராவது பார்த்தால் உதவி செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், "யாராவது உதவி செய்பவர்கள் இருந்தால் டேக் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு பதிவில் குஜராத் அஹமதாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகார் படிவத்தையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீங்கள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து முடித்து வீடு திரும்பும் போது உங்கள் கண்ணில் 24 காரட் ஐபோன் கண்ணில் பட்டால் என்ன செய்வீர்கள்?
- அ.சரண்.