பக்கத்து வீட்டு நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால், அந்நாயை உயிருடன் புதைத்த புதைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் ப்ளானுரா பகுதியில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு பெண் வளர்க்கும் நீனா என்ற நாய், எப்போதும் இரவில் குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் தூங்க முடியாமல் எரிச்சல் அடைந்த அந்த மூதாட்டி, ஒரு நாள் இரவு அந்த நாயைத் தனது தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்துள்ளார்.
திடீரென தனது நாய் காணாமல் போனதால் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார் அந்த நாயின் உரிமையாளரான பெண். அவ்வகையில், மூதாட்டியிடம் கேட்கும்போது, நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார் மூதாட்டி.
அதைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அந்தப் பெண், சுமார் ஒன்றரை மணி நேரமாக குழிக்குள் பரிதவித்த நாய் நீனாவை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளார். இது குறித்து நீனாவின் உரிமையாளர் மூதாட்டியிடம் முறையிட்ட போது, "அந்த நாய் இந்தப் பக்கம் இனி வரவே கூடாது" என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்த போதும், "மீண்டும் குரைத்தால் மறுபடியும் குழி தோண்டி புதைப்பேன்" என்று எச்சரித்து காவல்துறையையே மிரள வைத்துள்ளார் மூதாட்டி. விலங்குகளிடம் வன்முறையாக நடந்துகொண்டதற்காக அந்த மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.