
இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் ஆகும். இதுதான் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் புண்ணிய பூமி ஆகும்.
கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் ஜெருசலேம் மிகவும் முக்கியமானதாகும். இஸ்லாமிய மதத்தின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா மசூதி இங்குதான் அமைந்துள்ளது. இது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், யூதர்களின் புனித ஸ்தலமான ‘பரிசுத்த ஸ்தலமும்’ இங்குதான் உள்ளது.
இங்குள்ள பழம்பெருமைமிக்க தேவாலயத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாகவும், மீண்டும் அவர் இங்குதான் உயிர்த்தெழுந்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த இடத்தைத்தான் கிறிஸ்தவர்கள் “கல்வாரி மலை” என்று அழைக்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள தேவாலயம் “செபுல்கர்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயத்தின் ஜன்னல் அருகே சுமார் 266 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு ஏணி, வைத்தது வைத்ததுபோல, ஒரு அங்குலம் கூட நகராமல் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார்போல இருக்கிறது.
இதுகுறித்த வரலாற்று சிறப்புமிக்க கதை ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. கிறிஸ்தவத்தின் ஆறு பிரிவுகள் சேர்ந்து இந்த தேவாலயத்தை நிர்வகித்து வருகின்றனர். இதில் ரோமன் கத்தோலிக்க, கிரேக்க ஆர்த்தடாக்ஸ், பேட்ரியார்ச்சேட், ஆர்மேனியன் பேட்ரியார்ச்சட், எத்தியோப்பியன் மற்றும் காப்டிக் சிரிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் அடங்கும்.
17-18 ஆம் நூற்றாண்டில் புனித செபுல்கர் தேவாலயம் தொடர்பாக கிறிஸ்தவத்தின் மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இடையே நிறைய சர்ச்சைகளும், உரிமைப் பிரச்னைகளும் ஏற்பட்டன. அந்த சமயத்தில் ஜெருசலேம் உஸ்மானியா சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகள் இந்த தேவாலயத்திற்கு உரிமை கோரியபோது, உஸ்மானியா சுல்தான் நிர்வாகம் தேவாலயம் எந்த நிலையில் உள்ளதோ, அந்த நிலையிலேயே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. அல்லது 6 பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவை செயல்படுத்தலாம். ஆனால் இன்று வரை அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இதனால், கோயிலின் பராமரிப்பு பணி மட்டுமன்றி, 1757 ஆம் ஆண்டு தேவாலயத்தின் ஒரு ஜன்னலுக்கு அருகே பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட ஏணிப்படிக் கூடி ஒரு இன்ச் கூட நகர்த்தப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் அந்த ஏணி சுமார் 266 ஆண்டுகளாக யார் கையும் படாமல் வைத்த இடத்திலேயே வைத்தபடி இருப்பது இன்று ஓர் அதிசய சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், தேவாலயத்துக்கு உரிமை கொண்டாடும் குழுக்கள் இந்த ஏணிக்கும் சேர்த்தே உரிமை கொண்டாடுகின்றனர். இதனால் 266 ஆண்டுகளாகியும் இந்த ஏணியை அகற்றவோ, நகர்த்தவோ யாரும் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மு. ராஜதிவ்யா.