இனி இந்த ஹார்ட் இமோஜ் நிறைய பேருக்கு தேவைப்படாது. ஆமாம், வாட்ஸ்அப்பில் பெண்களுக்கு ஹார்டின் இமோஜி அனுப்பினால் இனி சிறை தான்.
குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் புதிதாக ஒரு சட்டம் போடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி அங்குள்ள பெண்களுக்கு யாரேனும் இதய இமோஜிகளை அனுப்பினால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அங்குள்ள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணுக்கு இதய இமோஜியை எந்தவொரு சமூக வலைத்தளம் மூலம் அனுப்பினாலும் அது ஒழுக்கமின்மையை தூண்டும் குற்றமாகக் கருதப்படுமாம்.
இதை பற்றி குவைத் வழக்கறிஞரான ஹயா அல் ஷலாஹி கூறுகையில், "யாரேனும் ஹார்டின் இமோஜ் பெண்களுக்கு அனுப்பினால் அவர்கள் 2,000 குவைத் தினார் அபராதத்துடன் சேர்த்து இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சவுதியில் இந்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 100,000 சவுதி ரியால்கள் அபராதத்துடன் சேர்த்து இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.
வாட்ஸ்அப்பில் எந்தவொரு பெண்ணுக்கும் சிவப்பு இதயங்களை அனுப்புவது துன்புறுத்தலாக கருதப்படும் என்று சவுதி சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் மோசடி எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி, பாதிக்கப்பட்ட பெண் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், இந்த மாதிரி சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட படங்கள் மற்றும் மொழியைப் அனுப்புவது துன்புறுத்தல் குற்றமாக மாறும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு நபர் தொடர்ந்து குற்றத்தைச் செய்தால், அவருக்கு 300,000 சவுதி ரியால்களுக்கு மேல் அபராதம் மற்றும் ஐந்து வருட சிறைத்தண்டனையும் நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.