ஐபிஎல் நீண்ட நெடுந்தொடர்னால தொடர்ந்து பார்க்கறப்போ சமயத்துல சின்னதா ஒரு அலுப்புத் தட்டும், அதுவும் லாஸ்ட் ஓவர் ஃபினிஷிங் இல்லாத போட்டிகள் உப்புச் சப்பில்லாம நகரும். அப்படி போற போட்டிகள்ல மசாலாவ தூக்கலா சேர்க்கறது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்தான்.
ஓப்பனிங் இறங்கி பவர்பிளேல தங்களோட ஸ்ட்ரைக்ரேட்டுக்கு சூரியனுக்கே டிக்கெட் போடுவாங்கன்னா ஃபினிஷிங்ல ஃபயர் விட வைப்பாங்க. இதுக்கும் மேல களத்துல நடக்குற சின்ன சின்ன உரசல்கள், செல்லச் சீண்டல்கள் இதன் மூலமாகவும் போட்டியோட எண்டர்டெயின்மெண்டுக்கு கியாரண்டி கொடுப்பாங்க. அப்படிபட்டவங்கள்ல முக்கியமானவரு மும்பை இந்தியன்ஸோட பழைய தாதா பொல்லார்ட்தான்.
2015-ல மும்பை இந்தியன்ஸ் வரிசையா நாலு போட்டில தோத்துட்டாங்க. எல்லா டீமையும் வரவச்சு ஜெயிக்கவச்சு அனுப்பறதுதான பெங்களூரோட தனித்தன்மை? அதனால ஆர்சிபிக்கு எதிரான போட்டியில ஜெயிக்கணும்னு முடிவோட ஆடுனாங்க. வழக்கம்போல அந்த ரன்கள் விளையற பூமியால 209 ரன்கள மும்பை அடிச்சு நொறுக்கிடுச்சு. பாதிப் போட்டியோடவே ஜெயிச்ச மாதிரி குஷி வந்துடுச்சு பொல்லார்டுக்கு.
ரெண்டாவது இன்னிங்ஸ்ல பேட்டிங் பண்ண ஆர்சிபி சார்பா கிறிஸ் கெய்லும் பிஸ்லாவும் இறங்குனாங்க. சும்மா இருப்பாரா நம்ம பொல்லார்டு? போறப்பவும் வர்றப்பவும் கெய்ல வம்பிழுக்க ஆரம்பிச்சாரு. ஏதாச்சும் சொல்லி சிரிச்சு கிண்டலடிச்சு சீண்டிக்கிட்டே அவரோட கவனத்தையும் சிதறடிக்க வச்சாரு. கெய்லும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாரு. ஒருகட்டத்துக்கு மேல அவரும் பொறுத்தது போதும் பொங்கி எழுனு நேரா அம்பயர்ட்ட போய் பொல்லார்டால தன்னால கவனமா ஆட முடிலனு சொல்லி கம்ப்ளெய்ண்ட் பண்ண, அம்பயர் அடப்பாவிங்களா கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களான்னு எல்கேஜி பசங்கள பார்த்துக்கற டீச்சர் மாதிரியே கடுப்பாயிட்டாரு.
பொல்லார்ட உடனே கூப்பிட்ட அம்பயர், "தம்பி உங்க வாய்க்கா வரப்புத் தகராறுலாம் வெளியே வச்சுக்கோங்க, பிட்சுக்கு வந்தீங்களா பேட்டிங் ஃபீல்டிங் பண்ணீங்களான்னு கிளம்பிப் போய்டனும்"னு சொல்ல நல்ல பிள்ளை மாதிரி தலைய ஆட்டுன பொல்லார்ட் டெரக்டா போய் நின்ன இடம் டக்அவுட்தான். அங்க இருந்த Band Aid-ஐ எடுத்துட்டு வந்து அவரோட வாய்ல ஒட்டிக்கிட்டாரு. அதோட ஃபீல்டிங் பண்ணவும் வந்து நின்னுட்டாரு.
கேமரால இத காட்ட கொஞ்ச நேரத்துக்கு யாருக்கும் எதுவும் புரியல. கமெண்டேட்டர்கள் இதப் பத்தி சொல்லி சிரிச்சச்போ தான் எல்லோருக்கும் விஷயமே புரிய வந்துச்சு. பொல்லார்ட கெய்ல வம்பிழுக்க வேண்டாம்னும் அவர்ட்ட இருந்து விலகி இருக்கச் சொல்லி அம்பயர் சொல்லி இருக்காங்க. அதனாலதான் பொல்லார்ட் வாயை மூடிட்டு திரும்ப ஃபீல்டிங் இறங்கி இருக்காரு. வாட்சப் க்ரூப் சேட்ல யாராவது ஏதாவது சொன்னா வாயை மூடிக்கற எமோஜிய அனுப்புற மாதிரிதான் அம்பயர்ட்ட கலாட்டா பண்ணாரு பொல்லார்ட்.
சிட்டுவேஷன் காமெடி மாதிரி அந்த சமயம் மட்டுமில்ல அத இப்போ பார்த்தாலும் பொல்லார்ட் வாய்ல டேப் ஒட்டியிருக்க ஃபோட்டோ நமக்கே தெரியாம நம்ம சிரிக்க வச்சுடும். தன்னோட இறுதிப் போட்டி வரை பொல்லார்ட் இதே மாதிரி தான் இருந்தாரு, கொஞ்சமும் மாறல. அதுதான் அவருக்கு பல ரசிகர்கள உருவாக்கித் தந்துச்சு......