IPL 2024 : வேகபந்துவீச்சில் மிரட்டும் MI இன் Dilshan Madushanka - ஐபிஎல் புதுமுகங்கள் - 1

சக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், வெளியே நடைபெறும் போட்டிகளுக்கு செல்வதற்கும் பணத்தைக் சேமிக்க ஆரம்பித்தனர்.
Dilshan Madushanka
Dilshan Madushanka டைம்பாஸ்

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 4.60 கோடிக்கு வாங்கப்பட்ட இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா யார் என்று பார்ப்போம்.

  தில்ஷான் மதுஷங்கா இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை என்ற தெற்கு கரையோர மாவட்டத்தில் ஒரு ஏழ்மையான மீனவ குடும்பத்தில் சுஜித் கிரிஷாந்த மற்றும் கே.ஜி. நிலாந்தி தம்பதிக்கு மகனாக செப்டம்பர் 18, 2000 ஆம் ஆண்டு பிறந்தார். தில்ஷான் மதுஷங்கா தனது சிறுவயதை மிகவும் வறுமையிலேயே கழித்தார். அன்றாட தேவைக்காக அவரின் தந்தை சுஜித் கிரிஷாந்தவின் மீன்பிடி தொழிலையே இவரின் குடும்பம் நம்பி இருந்தது.

Dilshan Madushanka
IPL சுவாரஸ்யங்கள் : RCBக்காக கிறிஸ் கெய்ல் ஆடுன Gayle Storm ஆட்டம் நினைவிருக்கா?

பள்ளியில் படிக்கும் போது சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கிரிக்கெட்டின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஒருமுறை பள்ளி மைதானத்தில் பல மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்த பள்ளி நிர்வாகம், பள்ளி மாணவர்களுக்கு ஒரு பெரிய போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது. அந்த போட்டிகளில் இருந்து தான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் தில்ஷான் மதுஷங்கா. பின்னர் ஆண்டுதோறும் தனது பள்ளியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார்.

அப்போதிலிருந்து கிரிக்கெட் அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. என்னதான் தில்ஷான் மதுஷங்கா கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட அவரது பள்ளியில் முழுமையாக ஒரு அணி கூட இல்லை. இதனால் இவரின் பள்ளி நிர்வாகத்தினாலும் கூட மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க முடியவில்லை, பயிற்சி பெற புதிய பந்துகள் கூட இல்லாமல், மற்றவர்கள் போட்டிகளில் பயன்படுத்திய பந்துகளை வாங்கி வந்து பயன்படுத்தினார்.

இவரின் பள்ளியில் மொத்தமாக சுமார் 3 ஜோடி பேடுகளும் 4 பேட்கள் மட்டுமே இருந்தன. அதைத்தான் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். இதனால் சக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், வெளியே நடைபெறும் போட்டிகளுக்கு செல்வதற்கும் பணத்தைக் சேமிக்க ஆரம்பித்தனர். தில்ஷான் மதுஷங்கா தனது ஹுங்கம விஜயபா மத்திய கல்லூரிக்காக, சுமங்கலா கல்லூரிக்கு எதிராக 17 வயதுக்குட்பட்ட போட்டியில் விளையாடிய போது 21 ரன்களை விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குடும்பத்தின் ஏழ்மையில் இருக்கும் நிலையில், தில்ஷான் மதுஷங்கா தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது தந்தைக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. மேலும் மதுஷங்கா படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததால் தந்தை சுஜித் கிரிஷாந்த பலமுறை மதுஷங்காவிடம் சண்டையிட்டு தொலைக்காட்சியில் கூட கிரிக்கெட்டை பார்க்க அனுமதிக்காமல் இருந்தார். ஆனால் மதுஷங்கா தனது அம்மாவின் உதவியுடன் வெளியே பல போட்டிகளுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறார். இவர் மாவட்ட அணிக்காக சில கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார்.

Dilshan Madushanka
IPL 2023 : Dhoni-யை வெறுப்பவங்க பிசாசாகத்தான் இருக்கணும் - Hardik Pandya | CSKvsGT

இவரின் வேகப்பந்துவீச்சின் திறமையை கொண்டு இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கருணாரத்னா நடத்திய கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு சென்று கலந்து கொண்டார். இந்த முகாமில் சிறந்த முறையில் பந்து வீசியதன் மூலம் மதுஷங்கா மாகாண அணிக்கு விளையாட தகுதி பெற்றார். இவரின் நேர்த்தியான வேகப்பந்து வீச்சினால் முக்கிய தேர்வாளர்களால் கவரப்பட்டு ஜனவரி 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அக்டோபர் 2020 இல், லங்கா பிரீமியர் லீக்கின் முதல்  சீசனுக்காக தம்புள்ளா வைகிங் நிறுவனத்தால் தில்ஷான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தொடர் முழுக்க சிறந்த முறையில் விளையாடிய தில்ஷான் மதுஷங்கா பிப்ரவரி 2021 இல், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரின் இலங்கை ஒருநாள் சர்வதேச அணியில் இடம் பெற்றார். பின்னர் 27 ஆகஸ்ட் 2022 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளிலும் தன் காலடி தடத்தை பதித்தார் தில்ஷான் மதுஷங்கா.

இதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்ட தில்ஷான் மதுஷங்கா செப்டம்பரில் இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியின் போது விராட் கோலி மற்றும் தீபக் ஹூடா விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார். இறுதியாக, 10 ஜனவரி 2023 அன்று, தனது முதல் ஒருநாள் சர்வதேச (ODI) ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக கவுகாத்தியிலும், ஜூலை 24, 2023 அன்று, கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டிகளிலும் கால் பதித்தார்.

Dilshan Madushanka
IPL சுவாரஸ்யங்கள் : Captain Cool Dhoni-யவே கோவப்பட வச்ச மேட்ச் நினைவிருக்கா? | IPL 2023 CSK

கடந்த ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளின் போது, ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற உதவினார். உலகக் கோப்பையில் நவம்பர் 2, 2023 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தில்ஷான் மதுஷங்கா தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலிலும் தில்ஷான் மதுஷங்கா இடம் பிடித்தார்.

உலக கோப்பை தொடருக்கு பின் 2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஏலத்தின் போது யாழ் கிங்ஸ் அணி ரூ.7.5 கோடிக்கு துஷங்காவை  வாங்கியதன் மூலம் அந்த தொடரின் மிகவும் விலையுயர்ந்த வீரராக தில்ஷான் மதுஷங்கா சாதனை படைத்தார். தற்போது தில்ஷான் மதுஷங்கா டிசம்பர் 19, 2023 ஆம் தேதி, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ. 4.60 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் புதுமுகமான இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா எவ்வாறு  ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்....!

- மு.குபேரன்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com