ஐபிஎல் ஏலம் அடுத்த சில நாட்கள்ல தொடங்க இருக்கு, சில வீரர்கள் பல கோடியையும் பல வீரர்கள் சில லட்சங்களையும் அள்ளப் போறாங்க. அதில் ஆல்ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர்னு ஒவ்வொருத்தருக்கும் ரகம் வாரியாக ஒவ்வொரு மதிப்பு நிர்ணயிக்கப்படலாம். ஆனால், விலை மதிப்பே இல்லாத கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பொருட்களை எங்கே பார்க்கலாம்? அதுக்குன்னு ஏதாச்சும் மியூசியம் இருக்கானு கேட்டா பதில் உலகின் பல இடங்கள்லயும் இருக்குன்றது தான். அதிலும் இந்தியால இருக்க `Blades Of Glory'தான் காலத்தை வென்ற பல பொருட்களை தன்னிடம் வைத்துள்ள ஒரு கிரிக்கெட் மியூசியம்.
இது அரசாங்கத்தால இல்ல ஒரு கிரிக்கெட் ஆர்வலரால ஆரம்பிக்கப்பட்ட அருங்காட்சியகம். அண்டர் 19 லெவல்ல டொமெஸ்டிக் லெவல்ல ஆடியிருக்க ரோஹன் அப்படின்றவரால புனேல 2012-ம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. இதுல இந்திய கிரிக்கெட் வீரர்களோட தொடர்புடைய பொருட்கள் மட்டும் இல்ல, மற்ற நாட்டு வீரர்களோட சம்பந்தப்பட்ட பொருட்கள் கூட இருக்கு. உலகக்கோப்பையை வென்ற கேப்டன்களை கையெழுத்திட்ட பேட்டுகள்ல இருந்து ஒருசில அணில மொத்த வீரர்களும் ஆட்டோகிராஃப் போட்ட பேட்களும் இங்க இருக்கு.
Honours Board, Hall Of Fame மாதிரி இங்கே இருக்க லெஜன்ட்ஸ் ரூம்ல பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் என பல தலைமுறையோட அடையாளமா விளங்கிய வீரர்களை நினைவுபடுத்துற பொருட்களும் நிரம்பவே இருக்கு.
கீழடி மியூசியத்துல நுழையறப்போ எப்படி அந்தக் காலத்து மனிதர்களோட கைகுலுக்குற உணர்வு ஏற்படுமோ, அதேபோல் காலத்தோட ஓட்டத்துக்கு எதிர்நீச்சல் போட்டு பின்னோக்கிப் போய் அந்த காலகட்டத்து கிரிக்கெட் ஜாம்பவான்களை நேர்ல சந்திச்ச உணர்வை இந்த மியூசியம் அப்படியே உண்டாக்கிடுது. குறிப்பா சச்சினுக்குனே பிரத்யேகமா இருக்க பிரிவு அவரோட புகழை அங்குலம் அங்குலமா சொல்லுது.
இது மட்டும் இல்லாம கிரிக்கெட் பேட்களோட பரிணாம வளர்ச்சியையும் ஒவ்வொரு கட்டமா அந்தந்த காலகட்டத்துல பயன்படுத்துன பேட்கள வச்சே நாம புரிஞ்சுக்கலாம். 300 விக்கெட்டுகள ஒருநாள் ஃபார்மட்ல கடந்த பௌலர்கள் கையெழுத்திட்ட பந்துகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கு. கிட்டத்தட்ட 5000 சதுர அடில அமைந்து இருக்க இந்த பிளேட்ஸ் ஆஃப் க்ளோரி கிரிக்கெட் மியூசியம்ல கிட்டத்தட்ட 75,000 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கு.
இது அத்தனையும் ரோஹன்ற ஒரு தனி மனிதரோட வற்றாத கிரிக்கெட் தாகத்தோட அடையாளமா நின்னுட்டு இருக்குறதுதான் வியப்புக்குரியது. விலை மதிப்பற்ற அந்தப் பொருட்கள் ஒவ்வொன்னும் காலத்தை தாண்டி அடுத்த தலைமுறைக்கும் காணக் கிடைக்கனும்ன்ற அவரோட கனவு தான் இந்த மியூசியமாக வடிவெடுத்து இருக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஒரு Nostalgic பயணத்தை மேற்கொண்ட உணர்வை இது உண்டாக்க வல்லது.
`ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே'னு ஆட்டோகிராஃப் படத்துல பாடுற மாதிரி நம்மோட நினைவு ஏட்டில் காட்சிப் பதிவுகளா பிணைந்து போயிருக்க கிரிக்கெட் நினைவுகளை இன்னும் ஒரு முறை ஓட்டிப் பார்க்கனும்னா முதல் சாய்ஸ் இந்த அருங்காட்சியகம் தான்.
அந்த அளவிற்கு கிரிக்கெட்டை ஆழமா நேசிக்குற ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது ஒரு கிரிக்கெட் புனித ஸ்தலம் தான்.